“அம்மா”…. சிறுகதை… சோலச்சி
மழை பெய்தால் யாருடைய அனுமதியையும் பெறாமலேயே அடாவடித்தனத்தோடு உள்ளே நுழைந்து தொர்..ரென தண்ணீர் ஒழுகும். சூரியனும் சந்திரனும் வானத்து மீன்களும் சுதந்திரமாய் உலாவும் வகையில் அமைந்ததுதான் அந்த சிறிய ஓட்டு வீடு. சிமெண்ட் தளத்தை வண்டுகள் ஆக்கிரமித்து இருந்தன. அதனால்தான் புழுதி படலமாய் மாறி இருந்தது. பக்கத்துல குடியிருக்கும் கருப்பாயி கிழவி கண்டமேனிக்கி திட்டி விட்டுச் சென்ற பிறகே வீட்டுக்குள் சாணியை கரைத்து மொழுகி வைத்திருந்தார் ஆறுமுகம்.
சிலந்தியும் எறும்பும் வீட்டு பனை மர கைகளில் தாராளமாய் தங்கி இருந்தன. வெயிலையும் மழையையும் வீட்டு முன்னால் தென்னங்கீற்றுகளால் வேயப்பட்ட தாழ்வாரம் ஓரளவுக்கு தடுத்து காத்தது. அந்தத் தாழ்வாரத்தில்தான் நார்கட்டில் ஒன்று ம்…..ம்…… என் பெருமூச்சு விட்டுக் கொண்டு இருந்தது.
அந்த நார்கட்டிலில் கிழிந்த பாய் ஒன்று கிடந்தது. அதில் பிறந்த மேனியோடு ஒட்டுத்துணியை ஒப்புக்குப் போர்த்தியபடி படுத்திருந்தாள் பழனியம்மாள்.
சேலையில் கொசுவம் வச்சு கட்டிக் கொண்டு நடக்கும் போது பெண்கள் பலரின் கண்கள் பொறாமை கொண்டு பார்க்காமலேயே பார்த்துக் கொண்டு இருக்கும். இப்புடிச் சேலைய மடிச்சுக் கட்டுறதுக்காகவே யாருக்கும் தெரியாம எங்காச்சும் போயி ஊருநாட்டுல படிச்சு கிடுச்சுட்டு வந்துருப்பாளோ…? ஆளும் நடையும் தினுசுதினுசா இருக்கு… ரெண்டு புள்ளைக்கி தாயி மாதிரியா நடந்துக்குறா….பெண்களின் வாய் அசை போட மறந்ததே இல்லை.
பெண்கள்தான் இப்படி என்றால் ஆண்களின் கண்களில் இருந்தும் அவள் ஒருபோதும் தப்பிச் சென்றதே இல்லை. தெருவில் நடந்து போகும்போது அத்தனை கண்களும் இவளையே குறுகுறுன்னு பார்க்கும். அவளின் யதார்த்தமான செயல்பாடுகள் அவள் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பதையே மறக்கடித்து விட்டது. புடிச்ச மாதிரி துணிமணி உடுத்திக்கிறது குத்தமானு கேக்குறேன்…னு தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்டு சமாதானம் செய்து கொள்வாள்.
நீளமான கருங்கூந்தல் கிடையாது என்றாலும் பஞ்சு மிட்டாய் போன்று இருக்கும் அந்த தலைமுடியை அவள் அள்ளிக் கொண்டை போட்டிருக்கும் விதம் அனைவரது கண்களையும் சுண்டி இழுத்தது. அழகு என்பது வறுமையிலும் வழிய வந்து கிடப்பது எல்லோருக்கும் வாய்த்திராது.
வாழ்க்கையில் கொஞ்சம் கூட ஓச்சமில்லாமல் வீட்டுக்காகவே ஓடி ஓடி உழைத்தவள்தான் இப்போது உருக்குலைந்து கிடக்கிறாள். அரசாங்கம் குடும்பக் கட்டுப்பாட்டை தீவிரப் படுத்தியபோது பலரும் தயங்கிக் கொண்டு ஓடி ஒளிந்து கொண்டனர். குடும்பக் கட்டுப்பாடு பண்ணுறது வீட்டுக்கு கேடு என்றும் ஒடம்பு ஒன்னத்துக்கும் ஆகாம போயிரும் என்றும் பயந்தனர். அந்த நேரத்தில் தானாக முன்வந்து குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டு ஊரில் உள்ள மற்ற பெண்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினாள். ஒழச்சு ஒழச்சு வீட்டுக்கு சோறு போடனும்னு நெனச்சாளே தவிர தன்னோட வயித்தையும் பாத்துக்கிட்டாதானே ஒழைக்கிறதுக்கு ஒடம்பு இருக்கும்ங்கிறதையே மறந்து தொலஞ்சிட்டா. அன்னப் தண்ணி ஆகாரம் ஒழுங்கா எடுத்துக்காதால ஒடம்பு கெட்டுப் போயி எலும்புருக்கி நோய் அவளிடம் வசதியாய் உட்கார்ந்து கொண்டது.
குடல் புண்ணும் மூச்சுத் திணறலும் போதாது என்று தீராத வயிற்று வலியும் அவளை கூட்டாளியாக்கிக் கொண்டது. நடந்து திரிந்தவள் நடை பிணமாக…. துடிப்பற்ற எலும்பில் மெல்லிய தோலை மட்டும் போர்த்தியிருந்தது. ஒடம்பு செதஞ்சு உருமாறியிருந்தது. உடம்பில் ஒட்டுத்துணி இருப்பதைக் கூட உணர முடியாமல் செயலிழந்து கிடைக்கிறாள் அந்த நார்க்கட்டிலில்.
அரசு மருத்துவமனையில் வைத்தியம் பாத்தும் முன்னேற்றம் ஏற்படவில்லை. காசு பணம் இருந்தா ரொக்க ஆசுப்பத்திரில வச்சுப் பாக்கலாம். காசு பணத்துக்கு யாருக்கிட்ட போயி கையேந்துறது. பயப்படாதனு தைரியம் சொல்றதுக்கே இங்க ஆளக் காணோம். இதுல யாரு நமக்கு இந்தானு நாலு காச நீட்டுவாங்க. ஒத்த ஆளா கூலி வேலை செஞ்சு குடும்பத்த ஓட்டுறதே இப்ப பெரும்பாடா இருக்கும்போது ரொக்க ஆசுப்பத்திரில செலவு செய்ய பணம் ஏது. அரசாங்க ஆசுபத்திரில மருந்து மாத்திரை வாங்கிக் கொடுத்து வீட்டிலேயே இருக்கட்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் ஆறுமுகம்.
“அய்யோ…! கல்லு மாரி மசமசனு ஒக்காந்துருக்கியே…. நானு நொண்டியா கெடக்கவும் ஆடுறீயளா…. ஒடம்பு எரியுதே….. தூக்கிப்போயி குளியாட்டே….. இடது வலதாய் தலையை வேகமாய் அசைத்து பெரும் மூச்சு விட்டு கத்தினாள் பழனியம்மாள்.
“ஏம்….மா… கத்துற… இப்பதானே குளியாட்டினே….கதை ஒன்னு எழுதிட்டு இருக்கேன்… கொஞ்சம் பொறுத்துக்கவே…..” சுவரில் சாய்ந்து எழுதிக்கொண்டே கெஞ்சினான் பதினோராம் வகுப்பு படிக்கும் மகன் சாமிக்காளை.
“ம்….பெத்தவள காட்டியும் இப்ப கத எழுதுறதுதான் பெருசா போச்சோ…? வி…வி…னு கத்தும்போது ஒன்னைய பட்டினியாவா போட்டேன்….. நெனச்சுப்பாக்க நேரமில்ல…யா.. சொல்லிக்கொண்டே நறுநறுவென பற்களைக் கடித்தாள். உடம்பு தான் எலும்பும்தோலுமா மோசமான நிலைக்கு சென்றிருந்தாலும் காதும் கண்களும் பேச்சும் அவளுக்கு கூர்மையாகவே இருந்தது.
“நீ தானம்…மா பெரிய எழுத்தாளனா வரணும்னு சொன்ன மறந்துட்டியா..?” அவனது உதடுகள் மிகவும் தாழ்ந்து கேட்டுக்கொண்டது. சட்டை அணியாமல் கைலியை மட்டும் கட்டிக்கொண்டு சுவரில் சாய்ந்து இருந்ததால் அவன் முதுகில் ஏறிய கட்டெறும்பை வலது கையால் தட்டிக் கொண்டான்.
“நொண்டிப் பணமா கெடக்கவும் வசனம் பேசுறீயளோ…. ஏம்புட்டு கையிகாலு இந்நேரம் நல்லாருந்துருந்தா….” சொல்லிக்கொண்டே அவனை அடிப்பதற்காக எழ முயற்சித்து தோல்வி கண்டாள்.
“ஏம்மா இப்புடி ஒடம்ப போட்டு பினாத்துற.. கட்டுலு கயிறு அழுத்தாதா..” அவன் கெஞ்சுவதைப் பார்த்தால் கண்ணீருக்கே கண்ணீர் வந்துவிடும் போலிருந்தது.
அன்றொருநாள், அவன் சின்னவனாக இருந்தபோது வெளையாட்டுதனமாக சோப்பு டப்பாவை உடைத்து விட்டான். அவ்வளவுதான், வராத சாமியெல்லாம் பழனியம்மாளிடம் வந்து இறங்கியது. கண்ணுக்கு எட்டியவரை சாமிக்காளை தென்படவே இல்லை. சிறுவர்கள் எல்லோரும் பொங்கத்திடலில்தான் விளையாடிக்கொண்டு இருப்பார்கள். அவளது கணிப்பு சரியாகவே இருந்தது. விக்கு..விக்கென நடந்தாள். டேய்…..சாமியோவ்….. அவள் உரக்கக் கத்தியது பொங்கத்திடலே அதிரும்படியாக இருந்தது. அவள் வருவதைப் பார்த்ததுமே மற்ற சிறுவர்கள் தலை தெறிக்க ஓடினர். செமத்தியா வாங்கப் போறோம் என்பதை எண்ணி நடுங்கினான். காருவா அரைருவாயா விக்கிது. குருவி சேக்கன சேத்து ரெண்டு ரூவாய்க்கி ஒரு டப்பா வாங்கி வந்தா ஒடச்சுப்புட்டு ஊர்ப்பயலுக கூட ஒய்யாரமாக வெளையாடுறீகளோ…. ? அடுப்பு ஊதும் இரும்பு ஊதாங்குழாயால் அடித்து நொறுக்கியதை நினைத்துக் கொண்டாள்.
அதற்காக அவள் மோசமானவள் கிடையாது. தன் குழந்தைகள் மீது அதிக பாசம் கொண்டவள்தான். சிறிய தவறையும் பொறுத்துக் கொள்ள மாட்டாள். புள்ளைய வளக்கச் சொன்னா பெருச்சாளிய வளத்துருக்கானு ஊரு சனம் சொல்லிப்புட்டா.. எங்க போயி முட்டிக்கிட்டு நானு சாகுறது. தண்ணி ஊத்தி வளக்கும் போதே ஒழுங்கா வளத்துட்டா பின்னாடி எவன் வந்து நோட்டம் சொல்லப்போறான் என்ற பண்புதான் அவளை கோவக்காரியாக அடையாளப்படுத்தியது. இவளிடம் வாய் சண்டையில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக அந்த ஊரில் இதுவரை எவரையும் அறிவிக்கவே இல்லை. சறுக்குன்னா போதும் ஆளுக்கு மொதல்ல சண்டைக்கி கெளம்பிருவா. வேலை வெட்டி பார்ப்பதில் கெட்டிக்காரி. எங்கு யாருக்கு வேலைக்குச் சென்றாலும் தன் வீட்டு வேலை போல் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வாள்.
ஏழாம் வகுப்பு படிக்கும் தன் தங்கையிடம் “டேய்…. அம்மாக்கண்ணு செத்த நேரம் அம்மாவ பாத்துக்கம்மா. சமத்துல….” வலது கை விரல்களை ஒருசேர குடித்தபடி கெஞ்சினான்.
“ம்…. இப்புடியே கிறுக்கிக்கிட்டே இருந்தா சோத்துக்கு வந்துருமா….? நா…. புள்ளைங்க கூட வெறவுக்கு போறேன்…” சொல்லிக்கொண்டே தனது பாவாடையை சணலால் இடுப்பில் நன்கு கட்டிக் கொண்டாள்.
“எலே….. வர்றியா இல்லீயாலே…? வெயிலு சுருக்குனு போடுறதுக்குள்ள ஒரு எட்டு போயிட்டு வந்துறனும்ல..” சின்னவள் ஒருத்தி கூப்பிடவும் நுனி உடைந்த அரிவாளை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
“பயம் பத்திரமா போங்கடி…. கரையப்பக்கம் ஊணாங்கொடி நாலஞ்சு புடுங்கி வெறவ நல்லா கட்டி தூக்கிட்டு வாங்கடி. போறவளுக பூரா பேரும் ரொம்ப பெரிய மனுசிகதான்டி” வேப்ப மரத்தடியில் தென்னங்கிடுகு பின்னிக்கொண்டிருந்த அழகி கிழவி சொன்னதும் “ஆம..ஆம….. நீதான் இப்ப வயசுப்புள்ள. வெயிலுல போகாம அங்கேயே இரு. கறுத்து போயிடாம…..” எல்லோரும் ஒன்னு சொன்னாப்ல சொன்னார்கள்.
அவர்களின் பேச்சைக் கேட்டு கக்கபிக்கயேன சிரித்துக் கொண்டாள் அழகி கிழவி.
கோடை விடுமுறை என்பதால் வெயிலில் கொடூரம் அதிகமாகவே இருந்தது. தரையெங்கும் தகதகவென கொதித்தது. பாவம் பழனியம்மாளின் வெற்றுடம்பு என்ன செய்யும்…? தெரு நாய்கள் யாவும் வீட்டு வாசலில் பாத்திரம் கழுவும் இடத்தில் ஆழமாய் குழி தோண்டி அதில் இதமாய் படுத்திருந்தன.
நோட்டையும் பேனாவையும் கீழே வைத்தவன் தனது கண்களை மெதுவாக மூடி திறந்து பெருமூச்சு விட்டுக் கொண்டான். இடதுகையை தரையில் ஊன்றி எழுந்தவுடன் கைலியை இறுக மடித்து சொருகி கொண்டான்.
ம்…ம்….ம்…… முனகியபடி திரு திருவன விழித்து செறுமினாள் பழனியம்மாள்.
இனிமேலும் உடம்பு தாங்காது. போடுற வெயிலுக்கு கட்டுலுல தண்ணிய ஊத்தாம குளிப்பாட்டி கொண்டு வந்து படுக்க வைப்போம் என்று எண்ணினான். தனது இடது கையை அவளது முதுகுக்கு கீழேயும் வலது கையை முழங்காலுக்கு கீழேயும் நுழைத்து மெதுவாக தூக்கிக் கொண்டு வீட்டின் பின்பக்கமாக செல்லும்போது அவளை அறியாமல் கடமுடவென கழிந்து விட்டாள். அவன் வயிறு முழுவதும் நசநசவென அடைக்கோழி கழிச்சலைப் போல் வாடை கிளம்பியது. கழிச்சல் வாடை மூக்குக்குள் நுழைந்து வாய் வழியாக உள்ளே இறங்கியது. மூக்கைச் சுளித்துக் கொண்டாலும் அவளை விட்டு விடவில்லை.
“இதுக்குத்தான் ஊட்டி விடாதன்னு சொன்னே…. கேட்டியா..? இப்ப ஓம்மேல பீயப் பேண்டு நாரடிச்சுட்டேனே…. என்னய இப்புடியே நங்குனு கீழப் போட்டு கொன்னுரு…” அவன் கைகளில் இருந்தபடியே தலையை ஆட்டி புலம்பினாள். அவளை கீழே விட்டு விடாமல் வீட்டின் பின்புறம் தரையில் போடப்பட்டிருந்த தகட்டுகளில் மெதுவாக படுக்க வைத்தான்.
“இந்தச் சிறுக்கி மக இன்னும் உசுர வச்சுக்கிட்டு பச்சப்புள்ளயப் போட்டு பாடாபடுத்துறனே…” தலையை டங்குடங்குனு தகட்டுக்கல்லில் மோதிக் கொண்டாள்.
“ஏம்…மா அப்புடி பண்ற. மோதிக் கிட்டு ரத்தம் வந்தா எனக்குத்தான் ஒகத்திரியம்…. நால்…ல உன்னப் பாக்குறேன்…” சத்தம் போட்டுக் கொண்டே தண்ணீரை எடுத்து தன்னையும் கைலியையும் கழுவிக் கொண்டான். அவன் உதடுகளைத் திறக்காமல் சிரித்துக் கொண்டான்..
அப்புடியே படுக்க வைத்து விட்டு, கட்டுல ஒதறிட்டு வர வேகவேகமாய் நடந்தான்.
கட்டிலில் கிடந்த பாயை உதறினான். கட்டில் கயிறையும் வலது கையால் தட்டினான். கயிற்றில் இருந்து வெள்ளை வெள்ளையாய் ஏதோ கீழே விழுந்தது. உற்றுப் பார்த்தான். அவை அனைத்தும் புழுக்கள். கட்டிலில் படுத்தபடியே அவள் சிறுநீர் கழிப்பதும் அடிக்கடி கட்டிலிலேயே படுக்க வைத்து தண்ணீர் ஊற்றவும் கட்டில் கயிற்றில் புழு வைக்கத் தொடங்கி இருந்தது.
உடல் எரிச்சல் கொடுக்கவும் அவள் மேல் தண்ணீரை அடிக்கடி ஊற்றி வந்தனர். அந்த வழியாக செல்பவர்கள் யாராக இருந்தாலும் குரலைக் கேட்டால் போதும் இன்னார் என்று சரியாக கண்டுபிடித்து விடுவாள். அவர்களையும் கூப்பிட்டு தண்ணீர் ஊற்றச் சொல்வாள். “ஏலே… ஒனக்கு இந்த கெதியா……” புலம்பிக் கொண்டே தண்ணீரை ஊற்றிச் சென்றனர்.
அவள் நடந்து திரியும்போது கஞ்சிக்கே வழியில்லை என்றாலும் காலை மாலை மறக்காமல் குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். பிள்ளைகளையும் குளிப்பாட்டி விடுவாள். காலம் இவ்வளவு சீக்கிரம் சுருங்கும் என்று யாருக்குத்தான் தெரியும்.
வீட்டில் பின்புறம் படர்ந்து விரிந்த வேலிக்கருவை மரங்கள் நிறைய நின்றன. அதில் இருந்த கட்டெறும்புகள் அவள் முதுகை பதம் பார்த்துக் கொண்டிருந்தன. வலி தாங்காமல் துடித்தாள். “அம்போனு போட்டுட்டு போயிட்டியே… ஓம் மனசு என்ன கல்லா…” கத்தி புரண்டாள்; அவளால் வேறொன்றும் செய்ய முடியவில்லை. கட்டிலில் பாய் விரித்து சரி செய்துகொண்டு இருந்தவன் அவளின் சத்தம் கேட்டு ஓடி வந்தான். கட்டெறும்புகளை கைகளால் தட்டி விட்டான். இரண்டு பெரும் மிளகுகளை ஒட்டி வைத்தது போல் ஒவ்வொரு கட்டெறும்பும் இருந்தன. சில எறும்புகளை நசுக்கினான். நசுக்கிய எறும்புகளிலிருந்து அழுகிய புண்களில் இருந்து வரும் துர்நாற்றம் வெளியேறியது. ம்..சு…ம்…..சு…. என மூக்கைப் சுளித்து மூச்சை வெளியேற்றியவன் கைகளை தேய்த்து கழுவினான்.
“ம்…….என்னயக் கொண்டாந்து டொமுக்குனு தள்ளிட்டு எறும்ப புடிச்சா வெளையாடுற……. ம்……ம்…..” என அனத்தினாள்.
பிளாஸ்டிக் பையை தனது இடது கையில் மாட்டிக் கொண்டு கால் கழுவி குளிப்பாட்டினான். வேலியில் நின்ற களியஞ்சிட்டுக்குருவிகள் கண்ணீர் வழியப் பார்த்துக் கொண்டு இருந்தன. அவளை எப்படிக் கொண்டு வந்தானோ அதேபோல் தூக்கிச் சென்று கட்டிலில் உட்கார வைத்து இடது கையால் அவளைப் பிடித்துக் கொண்டு வலது கையால் முதுகிலிருந்த புண்களுக்கு போரிங் பவுடரை தடவினான். விரிந்து கிடந்த அவள் தலை முடியை அள்ளிக் கொண்டை போட்டான். அழையா விருந்தாளியாக கட்டிலில் அமர்ந்த ஈக்களை ஒரு கையால் விரட்டினான்.
புளியங்கொட்டைகளை வட்டத்தில் போட்டு விளையாடி கொண்டு இருந்தபோது தடுக்கி விழுந்த அவனது இடது முழங்காலில் ஒருமுறை சிராய்ப்பு ஏற்பட்டது. ரத்தக் கசிவால் திகுதிகுனு எரிச்சல் உண்டானது. வலியால் கத்தினான்.
“கண்ண என்ன பொடனிலயா வச்சிருக்க..? ஒன்னாட்டம் புள்ளையெல்லாம் வெட்டிக் கிட்டு வானா கட்டிக்கிட்டு வருதுக. புள்ளைனா அப்புடில்ல கருத்தா இருக்கனும்..? தெங்கனத்தனமா இருந்தா… கண்ட எடத்துல விழுந்து செரச்சுக்க வேண்டியதுதான்..” திட்டிக்கொண்டே நாகரிஞ்சி இலையை கைகளில் கசக்கி அவனுக்கு தடவியதை எண்ணி கலங்கினான் சாமிக்காளை.
“அய்யோ….. ம்….ம்…..” என்று கத்தி பெருமூச்சு விட்டவள் சிரிக்கத் தெரியாதவள் சிரிப்பதை போல பல்லை காட்டி கொடூரமாய் சிரித்தபடி….
“சோறு….. கொஞ்சம் வூட்டே….” என்றாள் பரிதாபமாக..
ஓட்டை விழுந்து ஈயம் பூசப்பட்ட அந்த கும்பா மங்கில் பழைய கஞ்சியையும் நாலஞ்சு உப்புக்கல்லையும் போட்டு நன்கு பிசைந்தான். படுத்திருந்த அவள் தலை அருகே அமர்ந்து அவளுக்கு ஊட்டினான். ஊட்டிக்கொண்டு இருக்கும் பொழுதே கொஞ்ச நேரத்தில் உறங்கிப் போனாள். கரைத்த அந்தக் கஞ்சியை கண்களை மூடியவாறு தானும் குடித்துவிட்டு கை கழுவியவன் மீண்டும் சுவற்றில் சாய்ந்து எழுத ஆரம்பித்தான்.
“அய்யய்யோ…. எழுத போயிட்டியே….. ஓம்…அப்பனையும் பொட்டாத்தா வூட்டுக்கு வேலக்கி போகச் சொல்லிட்டியே…. ஒடம்பு திகுதிகுனு எரியுதே…. என்னயக் கொன்னுட்டாச்சும் எழுதுவே…. ம்….ம்…….” பற்களைக் கடித்துக்கொண்டு தலையை மேலும் கீழுமாய் அசைத்தபடி அலறினாள்.
“தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்” முன்னொருநாள் பழனியம்மாள் சொன்னதை நினைத்துக் கொண்டான்.
கொழுந்து விட்டு எரியும் வெயிலில் சதைகளை இழந்து விட்டு எலும்புகளை வெறும் தோலால் போர்த்திக் கொண்ட அவளால் எப்படி நிம்மதியாக உறங்க முடியும்..? அந்த நார் கட்டிலுக்கு என்ன பசியோ…? முதுகையும் தின்ன தொடங்கியதால் ஆங்காங்கே ஏற்பட்ட புண்ணிலிருந்து ஒருவகை திரவம் கசிந்து கொண்டே இருந்தது.
நோட்டை மூடி வைத்து விட்டு எழுந்தான். காய்ந்துபோன தனது உதடுகளை எச்சிலால் ஈரமாக்கிக் கொண்டு கட்டிலில் அவளின் தலை அருகே அமர்ந்தான். அவளின் தலையை தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு பனை ஓலை விசிறியால் அவள் மேல் உட்கார வந்த ஈக்களை விரட்ட ஆரம்பித்தான்.
“ஏ….ராசால…. ஒடம்பு எரியுதுய்யா… தண்ணி ஊத்துயா….” சொல்லும் பொழுதே அவள் கண்களில் இருந்து நீர் பெருக்கெடுத்தது.
அவள் அழுவதை அவனால் தாங்கிக் கொள்ள முடியாமல் உள்ளுக்குள்ளே அழுது சிவந்து போன அவனது கண்களை மெதுவாக மூடி திறந்தான். அவனது வலது கையால் அவள் முகத்தை தடவியபடி ஆறுதல் படுத்தினான். அவள் அதிகமாகவே கத்த ஆரம்பித்தாள்.
வாய் கிழிந்த குடத்தை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் அடி குழாய்க்குச் சென்றான்.
“பாவம்டி…. இந்தப் பய. சின்ன வயசுலயே இவ்ளோ வேதனப்படுறான். நம்ம புள்ளயெல்லாம் என்ன பண்ண காத்துருக்கோ..? வாழ வேண்டிய வயசுல அவளுக்கு அப்புடி என்ன நோக்காடோ…? பெத்தவங்களுக்கு பாக்குறதுனால யாரும் கெட்டுப் போகப் போறதுல்ல…” வீதியில் சென்ற பெண்கள் இருவர் அவனைப் பார்த்ததும் தங்களுக்குள் பேசிக்கொண்டே சென்றனர்.
தனது காதுகளை செவிடாக்கி கொண்டு அடிகுழாய் நோக்கி போய்க்கொண்டு இருந்தான். இவன் வருகைக்காகவே காத்திருந்த கதிரவன் மேகங்களுக்குள் மறைந்து கொண்டான். வறட்சி காலம் என்பதால் வெகு நேரம் அடித்த பிறகே தண்ணீர் வந்தது.
“ஒடம்பு எரியுதே… எங்கிட்டு வாய்ப்பாக்க கெளம்பிட்டியோ தெரியலயே….” அழ ஆரம்பித்தாள்.
தனது வலது கையை சல்லடையாக்கி அவள் மேல் தண்ணீரை ஊற்றினான். தாழ்வாரம் எங்கும் தண்ணீர்க்காடாய் மாறியது. தனது தலையில் கைகளை வைத்தவாறு அவள் கால் அருகே உட்கார்ந்தான்.
“என்னடி… சிறுக்கி மகளே… அந்தப் பயல போட்டு இந்த பாடு படுத்துற. விழுந்து கெடந்தாலும் ஏம் புள்ளைக என்னன்னு கேக்க மாட்றானுவ. உனக்கென்னடி தங்கத்துக்கு. ரொம்பதான் கத்துற…” கோபம் கொப்பளிக்க கத்தினாள் கருப்பாயி கிழவி.
“ம்……அவன பெக்கலையா… வளக்கலையா.. ம்… நா என்ன வேணும்னேவா அயித்தே கத்துறேன். ஒடம்பு பினாத்துறது எனக்குத்தானே தெரியும். நா வாழாத வாழுக்கையெல்லாம் ஏம்..புள்ள வாழனும் அயித்தே….” வேக வேகமாய் தலையாட்டினாள்.
முதுகில் தோல் உரிந்து புண் உண்டானதால் அவளால் ஒரு பக்கமாக படுக்க முடியவில்லை. கண்களை மூடி பற்களை கடித்துக்கொண்டாள். அவள் தலை அசைத்ததில் முட்டுக் கொடுத்திருந்த அந்தக் கட்டிலின் மேலும் ஒரு கால் முடமாகிப் போனது. முடமாகி போன கட்டில் காலுக்கு வேறொரு கட்டையால் முட்டுக் கொடுத்தான்.
கதறுவதை அவளும் நிறுத்தவில்லை. அவனால் கதையைத் தொடரவும் முடியவில்லை.
பெற்றவர்களை பேணிக் காப்பது பிள்ளையின் கடமை என்பதை உணர்ந்த சாமிக்காளை கதை எழுதுவதை முடி வைத்தான். அம்மாவை விட கதை எழுதுவதா முக்கியம்…? என யோசித்த பிறகே பள்ளியில் பாடங்களை படிப்பதும் வீட்டுக்கு வந்ததும் தன் தாய்க்கு பணிவிடை செய்வதுமாய் இருந்தான். இப்படியே ஒரு சில நாட்கள்தான் கடந்தன…
ஓர் இரவில் அந்த நார்க்கெட்டில் அதிகமாகவே துன்பத்தை அனுபவித்தது. அதிகமாய் அலறியவள் நடுச் சாமத்தில் அமைதியானாள். அனைவரது கண்களையும் கட்டி போட்டது தூக்கம்.
அந்த நார்க்கட்டில் மட்டும் யோசிக்க ஆரம்பித்தது. “அவள் படுத்திருந்ததால் நாளை என்னையும் தூக்கி எறிய போகிறார்களோ…?”
பொழுது விடிந்தது. எல்லோரும் விழித்தார்கள். பழனியம்மாள் மட்டும் விழிக்கவே இல்லை.
( solachysolachy@gmail.com )