கதைகள்

“நாயகம்”… சிறுகதை- 99 … அண்டனூர் சுரா

வாகனம் வாக்குச்சாவடியை விட்டு கிளம்பும்போது மண்டல அதிகாரி சொன்னார், “பிரச்சனைக்கு வேலைருக்காது. வராமலும் பார்த்துக்கங்க. அதிகபட்சமா எழுவதிலிருந்து எண்பது பிரசன்ட் ஓட்டு போல் ஆகும். டெண்டர் ஓட்டு, சேலஞ்ச் ஓட்டு வராமிருக்கணும். எதாவதுன்னா எனக்குக் கால் பண்ணுங்க. மணிக்கு ஒருக்கா ஆண் பெண் ஓட்டிங்க் நிலவரத்தைக் கால் பண்ணி சொல்லிடுங்க. டைரி முக்கியம், ஓட்டர் மிசின் ஒழுங்கா வேலை செய்தானு இப்பவே பார்த்திருங்க. மிஷின்ல பச்ச லைட் எரியணும். மிசின்ல சார்ஜ் புல்லா இருக்கணும்….” வாகனம் கிளம்பும் வரை சொல்லிக்கொண்டிருந்தவர், “இங்கே யாரு பிசி” எனக் கேட்டார்.

ஒரு வாலிபர் காக்கி உடையில் மிடுக்குடன் நிமிர்ந்து சல்யூட் வைத்தார். அவரைப் பார்த்து சொன்னார் அதிகாரி, “பார்த்துக்கோங்க”. வாகனம் புகையைக் கக்கிக்கொண்டு கிளம்பியது. தலைமை வாக்குச்சாவடி அதிகாரி சுகுமார் முகத்தைக் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டு சாவடிக்குள் நுழைந்தார். தேர்தல் அதிகாரிகள் தேர்தல் வேலையைத் தொடங்கினார்கள்.
சிறியதும் பெரியதுமாக இரண்டு பெட்டிகள். ஒன்று சின்னங்கள் ஒட்டப்பட்ட பேலட் மிஷின். மற்றொன்று கன்ட்ரோல் யூனிட். தலைமை அதிகாரி முதலில் சோதிக்க வேண்டியது இதைத்தான். மூன்று நாள் தேர்தல் வகுப்புகள் இதைத்தான் சொல்லியிருந்தன. சிறிய பெட்டியைத் திறந்து கன்ட்ரோல் யூனிட் மிசினை எடுத்து மேசையில் வைத்தார்.

அடுத்தது பெரிய பெட்டி. பேலட் மிசின். தாயின் அருகில் தூங்கும் குழந்தையைப் போல கேபிள் நீண்ட வாலாக மடித்து சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. கன்ட்ரோல் யூனிட் அரசாங்கம் என்றால் பேலட் மிசின் மக்கள். இரண்டையும் சரியாக இணைக்க வேண்டும். இணைத்தால் பச்சை விளக்கு எரியும். சுகுமார் இரண்டையும் சரியாக இணைத்து சுவிட்சை ஆன் செய்தார். ‘கீக்…’ சத்தம் வந்தது. கன்ட்ரோல் யூனிட்டில் சிவப்பு எழுத்துகள் மினுக், மினுக் என்றாகி, மின் சார்ஜ் இருப்பு தொண்ணூற்று எட்டு விழுக்காடு என்றது.

“ நூத்துக்கு ரெண்டு குறையுதே?” உதட்டைப் பிதுக்கினார் சுகுமார்.
“ எதிலும் கண்டர்டு பிரசன்ட் என்பது சாத்தியமில்ல” என்றார் விரலுக்கு மை வைக்க வந்தவர். மிசின் தேதியைக் காட்டி, வாக்குச்சாவடி எண், மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கையைக் காட்டியது.

பேலட் பெட்டியில் சின்னங்கள் ஒட்டப்பட்டிருந்தன. ஆளுக்கு ஐந்து ஓட்டுகள் போட்டு மிசின் சரியாக வேலை செய்கிறதா என்று பார்த்தார்கள்.

ஆன் – குளோஸ்- ஆப் – ஆன் – ரிசல்ட் . கிளியர்.

இந்த வரிசையின்படி ஓட்டர் மிசனை இயக்கினார்கள். போட்ட வாக்குகள் சரியாக பதிவாகியிருந்தன. கிளியர் கொடுத்தார்கள். பதிவான மொத்த வாக்குகளும் அழிந்து வேட்பாளர் வரிசை எண்களைச் சொல்லி அருகில் பூஜ்ஜியம் என்று காட்டியது. மிசினை ஆப் செய்து வைத்தார்கள்.

நான்கு அதிகாரிகளில் இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள். தேர்தல் அதிகாரி -1 , வாக்காளர் கொண்டுவரும் பூத் சீட்டை வாங்கிக்கொண்டு அடையாள அட்டையின் வழியே இவர்தானா, என்று பார்த்து பெயரை வாசிக்கிறவர். இவருக்கு வேலை அதிகம். ஆண், பெண் குறிக்க வேண்டும். ஆண் என்றால் டிக் அடிக்க வேண்டும். பெண் என்றால் டிக் உடன் சுழிக்க வேண்டும். அடுத்து வாக்காளரிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு சீட்டைக் கிழித்துக் கொடுக்க வேண்டும். அதிகாரி – 2 இடது ஆட்காட்டி விரலில் மை வைக்க வேண்டும். அதிகாரி – 3 சீட்டை வாங்கி வைத்துக்கொண்டு கன்ட்ரோல் யூனிட்டின் சுவிட்சை அழுத்த வேண்டும். இவர் அழுத்தினால்தான் வாக்காளர் போடும் ஓட்டு பதிவாகும்.

மறுநாள் தேர்தலுக்கு இரவு முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருந்தன. ஒவ்வொரு பதிவேடாக எடுத்து வாக்குச்சாவடி எண், பெயர் என எழுதத் தொடங்கினார்கள். வெளியில், உள்ளே ஒட்ட வேண்டிய சுவரொட்டிகள், தலைமை தேர்தல் அதிகாரியின் டைரி, குறிப்புகள்,..என்று எழுதத் தொடங்கினார்கள்.

பெண் அதிகாரிகள் வீட்டிலிருந்து முறுக்கு, வறுத்தக் கடலை கொண்டு வந்திருந்தார்கள். அவற்றைக் கொரித்துக்கொண்டு, குடும்ப விபரங்களைப் பரிமாறிக்கொண்டு, யார் யார் எங்கே வேலை பார்க்கிறோம், எத்தனை குழந்தைகள் என்று கேட்டவாறு வேலையில் மூழ்கினார்கள்.
ஊர் கிளார்க் வந்தார். “டாய்லெட் பின்னால இருக்கு. தண்ணீர் இருக்கு. இந்தாங்க சாவி” எனக் கொடுத்தவர் கையோடு வாங்கி வந்திருந்த வடைகளை ஒரு பேப்பரில் மடித்து கொடுத்துவிட்டு டீயை ஆற்றினார்.

தலைமை அதிகாரிக்கு அலைபேசி அழைப்பு வந்தது. அழைத்தவர் மண்டல அதிகாரியாக இருந்தார். சுகுமார் வாக்குச்சாவடி எண்ணைச் சொல்லி, உயர் அதிகாரிகளுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுத்து, ” கண்ட்ரோல் யூனிட் வேலை செய்யுது சார்.” என்றார்.
“வேறென்ன தேவை?”

“சீல் வேணும் சார் ”

“ஆம், ஏங்கிட்ட இருக்கு. வர்றப்ப தாறேன் ” என்றவர் அழைப்பைத் துண்டித்துக் கொண்டார்.
சுகுமார் எத்தனையோ தேர்தலுக்குப் பணியாற்றியிருக்கிறார். தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றுவது இதுவே முதல் முறை. இப்போது அவர் நடப்பு எம்எல்ஏவின் ஊரில் தேர்தல் பணியாற்ற நியமிக்கப்பட்டிருந்தார். ஆளுங்கட்சி எம்.எல்ஏ. “இந்த அரசியல்வாதிகளுக்குத் தேர்தல் ஆணையம் தபால் ஓட்டு கொடுத்துவிட்டால் என்னவாம்..?” யோசித்தவராய் படிவங்களில் எழுதிக்கொண்டிருந்தார்.

வாகனம் வந்து நின்றது. பறக்கும் படை. ” யார்சார் பிரசிடிங்க் ஆபிசர்?”

சுகுமார் முன்னால் வந்தார். “ஆண் பெண் வாக்காளர்கள் எத்தனை பேர்? மூன்றாம் பாலினம் இருக்கிறார்களா? பொது வாக்குச்சாவடியா, பெண் வாக்குச் சாவடியா? ஓட்டர் சிலிப் கொண்டு வந்தாலும் ஐடி ப்ரூப் வேணும். கொண்டுவந்தா ஓட்டுப்போட அனுமதிங்க. நாலு மணிக்கு மேல அனாவசியமா யாரையும் உள்ளே விட வேண்டாம். ஐந்து மணிக்கும் மேலே கூட்டம் அதிகமா இருந்தா, வரிசையில நிற்கிற வாக்களார்களுக்கு டோக்கன் கடைசியிலேருந்து கொடுத்து நிற்க வையுங்க. என்னோட ஃபோன் நம்பர குறிச்சிக்கோங்க. எதுனாலும் அழைங்க…..”
அடுத்து கட்சிக்கறை வேட்டி கட்டியவர்கள் வந்தார்கள். அவர்கள் வெளியே நின்றவாறு, ” யாரும் கள்ள ஓட்டு போட்டிடாம பார்த்துக்கோங்க” சொல்லிச் சென்றார்கள்.

அடுத்து ஒருவர், “எத்தனை பேர் சார் வந்திருக்கீங்க? யார் யார் என்ன சாப்பிடுறீங்க?. சப்பாத்தி எத்தனை, தோசை எத்தனை, இட்லி எத்தனை?” எனக் கேட்டுச் சென்றார்.

சற்றுநேரத்தில் மண்டல அதிகாரி வாகனம் வந்து நின்றது. “இந்தாங்க மெட்டல் சீல். இது அரக்கு சீல், இந்தாருக்கு பேப்பர் சீல். மூணு சீலுமே வாங்கிட்டீங்க. இதில கையெழுத்துப் போடுங்க. பேப்பர் சீல்ல கட்சி ஏஜெண்ட்ஸ்க்கிட்ட கையெழுத்து வாங்கி, கிழிச்சிடாமே மாட்டி, அரக்கு வைக்கணும். அதில உங்கக் கையெழுத்து முக்கியம். நம்பர டைரியில குறிச்சிக்கோங்க. மாக் போல் ஆறு ஆறரைக்குள்ள முடிச்சிருங்க. சீல் வைக்கிறதுக்கு முன்னாடி மாதிரிக்காக போட்ட ஓட்டுகள கிளியர் பட்டனை அழுத்தி கட்சி ஏஜென்ஸ்க்கிட்ட காட்டிடுங்க.”
“ஒகே சார் ”

கொசுக்களின் ரீங்காரமாக இருந்தது. வெட்கை, வியர்வை, புழுக்கத்தில் இரவு கழிந்தது.
அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து குளித்து இரவு எழுதிய சுவரொட்டிகளை ஒட்டி, சரியாக ஆறரை மணிக்கு மாதிரி வாக்கைத் தொடங்கினார்கள். ஐந்து கட்சிகள் போட்டியிட்டதில் மூன்று கட்சிகளிலிருந்து முகவர்கள் வந்தார்கள்.

ஆன் – ஸ்டார்ட்- குளோஸ்- ஆப் – ஆன் – ரிசல்ட் – கிளியர் முடித்து பேப்பர் சீலில் அவர்களிடம் கையெழுத்து வாங்கி கண்ட்ரோல் யூனிட்டில் செருகி, மூடி சீல் வைத்து வாக்குப் பதிவைத் தொடங்கினார்கள்.

முதல் வாக்கு சரியாக ஏழு மணிக்குத் தொடங்கியது. முகவராக வந்திருந்தவர் அந்த வாக்கைச் செலுத்தினார். வயது முதிர்ந்தோர் – தாய்மார்கள் – பெண் – ஆண் என்கிற வரிசைக் கிரமத்தில் வாக்குப் பதிவு நடந்தேறியது.

பத்து மணியளவில் சலசலப்பு. கண்களைப் பறிக்கும் வெள்ளையில் யாரோ உள்ளே வந்தார். நடப்பு எம்எல்ஏ. கையெடுத்துக் கும்பிட்டபடி உள்ளே வந்தவர், தேர்தல் அதிகாரிகளை ஒரு சுற்றுப் பார்த்து கும்பிட்டு தன் ஓட்டைப் போடுவதற்காக வாக்காளர் அடையாள அட்டையைக் கொடுத்தார்.

“பூத் சிலிப் இருக்கா சார் ?”

“இல்லையே ” என்றவர், சட்டைப் பைக்குள் கையை நுழைத்து பாகம் எண், வரிசை எண் குறித்த துண்டுச் சீட்டை எடுத்து நீட்டினார்.

தேர்தல் அதிகாரி – 1 நீண்ட நேரம் கொண்டு தேடினார். முகம் சுழித்தார். தலையைச் சொறிந்தார். தலைமை அதிகாரியை அழைத்து அவரது காதிற்குள் முணுமுணுத்தார். சற்றுநேரத்தில் மென்மெல்லிய பதற்றம் வாக்குச்சாவடியைத் தொற்றிக்கொண்டது. எம்.எல்.ஏவின் வாக்கை யாரோ கள்ள ஓட்டாக போட்டிருந்தார்கள்.

தலைமை அதிகாரி சுகுமார் கைகளைப் பிசைந்துகொண்டார். எப்படி நடந்தது இது? முகவர்கள் எப்படி எம்எல்ஏவின் ஓட்டை இன்னொருவர் போட அனுமதித்தார்கள். சுகுமார் மெல்ல பதட்டத்திற்கு உள்ளாகி வந்தார்.

“நான் எம்எல்ஏ. என் ஓட்டையே ஒருத்தன் கள்ள ஓட்டா போட்டிருக்கான். அதிகாரிகள் இத்தனை பேர் இருந்து அனுமதிச்சிருக்கீங்க ”

அதிகாரிகள் நான்கு பேரும் எழுந்து குற்றவுணர்ச்சியுடன் நின்றார்கள். எல்எல்ஏ பெயருடைய ஒருத்தர்தான் அந்த ஓட்டைப் போட்டிருக்க முடியும்?

“யாரு போட்டது?” முகவர்களைப் பார்த்து கேட்டார் எம்எல்ஏ. யாரும் பதில் சொல்லாமல் ஒருவரையொருவர் பார்த்து நின்றார்கள். எம்எல்ஏ அதற்கும் மேல் ஒன்றும் பேசவோ, கேட்கவோ இல்லை. எல்லாரையும் பார்வையால் ஓர் அளவை அளந்துவிட்டு வாக்குச்சாவடியிலிருந்து வெளியேறினார்.

சுகுமார் பெரும் குற்றம் புரிந்துவிட்ட உணர்வில் நின்றார். அவருக்கு மயக்கம் வருவதைப் போலிருந்தது. என்ன நடந்துவிடக் கூடாது என்று நினைத்தாரோ அது நடந்திருந்தது. விரலில் மை வைப்பவர் சொன்னதைப் போல நூறு விழுக்காடு சரியாக தேர்தல் நடத்த முடியாததுதான் போலும்!.

இது தெரிந்து நடந்ததா, தெரியாமல் நடந்ததா? எம்எல்ஏ ஓட்டு கள்ளவோட்டு என்றால் பாமரர்களின் ஓட்டு? சுகுமாருக்குத் தலையைச் சுற்றுவதைப் போலிருந்தது. இதன் பிறகு சுகுமார் கடுமையான கெடுபிடிகளைக் காட்டத் தொடங்கினார்.

“பூத் சிலிப் வேணும். ஐடி ப்ரூப் வேணும். ஐடி ப்ரூப்பில் வாக்காளர் போட்டோ இருக்கணும்”
இதன்பிறகு வரிசை மெதுவாக நிதானமாக ஊர்ந்தது. அலைப்பேசி அழைப்பின் வழியே இதுவரை பதிவான வாக்குகள், ஆண் பெண் வாக்குள், வாக்குச் சதவீதம் விபரங்களை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

மதியச் சாப்பாடு வந்தது. வாசணை நாசியைத் துளைத்தது. பெரிய இலை. வீட்டுச் சமையல்.
“யாரும் சாப்பிட வேணாம். வேலையைப் பாருங்க. எலெக்சன் முடிஞ்சதும் சாப்பிட்டுக்கலாம்”
“நான் சுகர் பேசன்ட் சார்”

“சாப்பாடு ஆறினா நல்லாருக்காது சார்”

“வேணாம், இந்தச் சாப்பாடு வேணாம்” சுகுமார் சற்றே அதிகாரக் குரலில் சொன்னார். இப்படியாகச் சொல்வதற்கு அவருக்கு அதிகாரமிருக்கிறதா? அவர் சொல்வது சரியா? சுகுமார் அதையே திரும்பவும் சொன்னார். “இன்னைக்கு ஒரு நாள் விரதம் இருந்துக்கலாம். தேர்தல் முடிஞ்சு பெட்டிகள எடுத்ததும் வெளியே போய் சாப்பிட்டுக்கலாம். சாப்பாட்டுச் செலவு என்னோடது”

அவர் சொல்லி வாய் மூடவில்லை. ஒரு கறை வேட்டிக்காரர் வந்தார். “ ஒவ்வொரு ஆளா சாப்பிட்டுங்க சார்” அவரே இலையை விரித்து தண்ணீர் தெளித்து, குமித்து வைத்த சோறு, மீன், முட்டை, கறி என பரிமாறினார்.

தேர்தல் அதிகாரி 3, 2, 1 என்று இறங்கு வரிசையில் சாப்பிட்டார்கள்.

சுகுமாருக்கு மனம் ஒப்பவில்லை. அவரது தலைக்குள் எம்எல்ஏவின் வாக்கைக் கள்ள ஓட்டாரிடம் விட்டுவிட்ட குற்றவுணர்வு அரித்தது. தான் வாக்களிக்க முடியாவிட்டாலும் அது குறித்து கோபமோ, ஆதங்கமோ படாமல் அமைதியாக சென்றதை நினைக்கையில் அவர் மீது பெருமதிப்போ அல்லது அதற்கு நிகரான எதுவென்று சொல்ல முடியாத உணர்வு உடம்பெங்கும் ஊர்ந்தது.
“நீங்க சாப்பிடுங்க சார்?”
“வேண்டாம் சார், பசிக்கல”
“லேட்டா சாப்பிடுங்க“
“வேணாம் சார், எடுத்திட்டு போங்க”
அவரது நினைவெல்லாம் எம்எல்ஏ சுற்றியே நின்றது. எம்எல்ஏ நல்லவரா கெட்டவரா? யாரிடமேனும் கேட்க வேண்டும் போலிருந்தது. யாரிடம் கேட்பது? உதடுகளைச் சுழித்துக்கொண்டார்.

 

ஒரு வாக்கின் விலை என்ன? அதன் மதிப்பு என்ன? விலையும் மதிப்பு ஒன்றா? ஒரு வாக்கின் விலை எவ்வளவு என்று மக்களுக்குத் தெரியும். ஆனால் மதிப்பு தெரியாது. விலை, மதிப்பு இரண்டும் தெரிந்தவர்கள் வேட்பாளர்களே. வாக்கின் மதிப்பு தெரிந்த எம்எல்ஏ ஒன்றும் சொல்லாமல் அமைதியாக சென்றதை சுகுமாரால் நம்ப முடியவில்லை.
அதிகாரிகளிடமிருந்து அழைப்பு வந்தது. வாக்குப்பதிவு புள்ளி விபரம் கேட்டார்கள்.
எண்பது இரண்டு விழுக்காடு அளவிற்கு வாக்குப்பதிவு நடந்தேறியிருந்தது. ஒன்றிரண்டு பேராக சாவடிக்குள் வரவும் வாக்குச் செலுத்தவும் செய்தார்கள்.
கடைசி ஒரு மணி நேரம்.

எம்எல்ஏ வருவது தெரிந்தது. அவருடன் நான்கைந்து பேர் வந்தார்கள். சன்னல் வழியே எம்எல்ஏவின் முகத்தைப் பார்த்தார். காலையிலிருந்திருந்ததைப் போல அவரது முகம் இருந்திருக்கவில்லை. சற்றே இறுக்கம் கண்டிருந்தது.

அவர் உள்ளே வந்ததும் ஐந்து கட்சி முகவர்களும் எழுந்து நின்றார்கள்.
“எல்லாரும் சாப்பிட்டீங்களா?”
“நாங்க சாப்பிட்டோம். பிரசிடிங்க் ஆபிசர் மட்டும் சாப்பிடலை” முகவர்களில் ஒருவர் சொன்னார்.
எம்எல்ஏ சுகுமார் பக்கம் திரும்பி, “ ஏன் சார் சாப்பிடல?”
“பசிக்கல சார் ” என்றவாறு படிவங்களை நிரப்பிக் கொண்டிருந்தார்.
“என் ஓட்ட நான் போட்டுக்கிறேன் சார்” என்ற எம்எல்ஏ சின்னங்கள் ஒட்டப்பட்ட பேலட் மிசின் அருகில் வந்தார்.

“உங்க ஓட்டதான் யாரோ போட்டுட்டாங்களே ” என்ற சுகுமார் எழுந்து அவர் முன்பு நின்றார்.
“அது தெரியும், அதுக்குப் பதிலா என் ஓட்ட நான் போடணும் ”

“காலையிலேயே உங்க ஓட்ட நீங்க கேட்டிருக்கணும். கேட்டிருந்தா டெண்டர் ஓட்டா போடச் சொல்லிருப்பேன். இனி உங்க ஓட்ட நீங்க போட முடியாது. உங்க ஓட்டு பதிவாயிருச்சு” சுகுமார் நெஞ்சுக்குள் படபடப்பிருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் தைரியமாகச் சொல்லி முடித்தார். தைரியம் என்பது என்ன, பயமில்லாமல் நடிப்பது தானே!
“ஏன் முடியாது? காலையிலே டிபன் சாப்பிட்டீங்கள்ள, மதியம் கறியும் மீனுமா வாங்கி கொடுத்து விட்டேன்ல. ஏன் கொடுத்துவிட்டேன்?, இப்படி திமிறா பேசுறதுக்கா?”
எம்எல்ஏ கேட்கும் கேள்விகளுக்குச் சுகுமாரிடம் தக்க பதில் இல்லை. ஆனாலும் உறுதிபட சொன்னார், “நான் அனுமதிக்க மாட்டேன்”

“நீ என்ன அனுமதிக்கிறது, நான் ஓட்டு போடுறேன். உன்னால முடிஞ்ச செய்துக்கோ” என்றவர் இயந்திரம் போல அத்தனை வேகமாக இயங்கினார். அவரது கண் அசைவுபடி வாக்குச் சாவடியின் கதவு, ஜன்னல்கள் அடைப்பட்டன.

சுகுமார் பறக்கும்படைக்குத் தொடர்பு கொண்டார். பிசி என்று வந்தது.
மண்டல அதிகாரிக்குப் பேசினார். “தொடர்பு எல்லைக்கும் வெளியில் உள்ளார்” என்று பதில் வந்தது.

கள்ள ஓட்டுப் பதிவு முடிந்து கதவு, ஜன்னல்கள் திறக்கையில் மணி ஆறாகியிருந்தது.
எம்எல்ஏ வாக்குச் சாவடியிலிருந்து வெளியேறுகையில் சொன்னார். “என் கட்சியோட தலைமை என் பூத்துல எவ்ளோ ஓட்டு கட்சிக்கு விழுந்திருக்குனு கேட்கும். நான் என்ன சொல்வேன், இம்? என் ஓட்டு எனக்கு முக்கியமில்ல. ஆனால் எனக்கான ஓட்டு எனக்கு முக்கியம்.”

அவர் சென்றதன் பிறகு மண்டல அதிகாரி தொடர்புக்கு வந்தார். வாக்குச்சாவடிக்குள் நடந்தேறிய நிகழ்வுகளை விளக்கத் தொடங்கினார் சுகுமார்.

“கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்லுங்க சார், கடைசி ரெண்டு மணி நேர வாக்குப் பதிவு எவ்வளவு சார்?”

“ஐந்து மணி வரைக்கும் எழுபத்து எட்டு விழுக்காடு. வாக்குப்பதிவு முடியுறப்ப தொன்னூத்து எட்டு விழுக்காடு”

பன்னிரெண்டு மணியளவில் பறக்கும் படையுடன் அதிகாரிகள் வந்தார்கள். பெட்டிகளை எடுத்துக்கொண்டு, படிவங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு தேர்தல் கூலியை எண்ணிக் கொடுத்தார்கள். அக்கூலியை வாங்குவதற்கு கைகள் கூசின.

“அட வாங்கிக்கோங்க சார் ” என்ற மண்டல அதிகாரி, முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு சொன்னார், “நீங்களும் நானும் கோபப்பட்டு என்ன சார் செய்ய முடியும்? நம்மக்கிட்ட என்ன அதிகாரமிருக்கு? இது தேர்தல் பணி. சங்கிலித் தொடர். நான் சொல்றத நீங்கக் கேட்கணும். என் உயர்அதிகாரி சொல்றபடி நான் கேட்கணும்,” உதடுகளைப் பிதுக்கி இமைகளைச் சுழித்தார்.
“நாலைந்து பேர் சார், நூறு ஓட்டு சார், வெள்ளாமை கொள்ளைய வெள்ளாடு மேயுறதாட்டம், என் கண்ணால அதைப் பார்க்க முடியல சார், அதை நினைச்சாலே என் நெஞ்செல்லாம் பதறுது சார் ” என்றார் சுகுமார்.

மண்டல அதிகாரி, “இந்தப் பூத்துல மட்டுமா?, இங்கேயிருந்து பத்தாவது பூத்துல, இவரோட எதிர்க்கட்சிக்காரர் ஒருத்தர் இப்படித்தான், அவர் ஓட்ட இன்னொருத்தன விட்டுப் போடச் சொல்லி, என் ஓட்ட நான் போட்டே ஆவேனு கதவ அடைச்சி, கட்சி ஆளுகள வச்சி நூறு ஓட்டு போட்டிருக்கான். அந்த ஓட்டுக்கும் இந்த ஓட்டுக்கும் சரியாயிடும்” என்றவர், சற்றுநேரம் அமைதியாக இருந்துவிட்டு, “அவங்கவங்க ஓட்ட அவங்கவங்க நேரத்தோட போட்டிருந்தா கடைசி நேரத்துல ஏன் சார் கள்ள ஓட்டு பதிவாகப் போவுது, இந்தப் பாவம் நம்ம தலையில விழப்போவுது?. இந்தக் கூலி நமக்கு ஒட்டணுமே. ஏன்தான் இந்தத் தேர்தல் பணிக்கு வந்தேமோ…” மனம் வருந்தியவர் தேர்தல் அவசரம் வாகனத்தில் பெட்டிகளை ஏறிக்கொண்டு நகர்ந்தவர் மெல்ல திரும்பி, “பத்திரமாக வீடு போய் சேருங்க” என்றார். வாகனம் புகையைக் கக்கிக்கொண்டு கிளம்பியது.

சுகுமாரன் வாக்குச் சாவடியை விட்டு வெளியேறி ஊரைப் பார்த்தார். பெருங்கொலை நடந்தேறி எரியூட்டிய துக்க அமைதி கொண்டிருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.