இலங்கை

அர்ச்சுனா எம்.பி.க்கு எதிராக 100 மில். ரூபா நட்டஈடு கோரி மனு;  யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வழக்கு

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி நேற்றையதினம் அவதூறு வழக்கொன்றை யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்து 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரியுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான கட்டாணை வழங்குவதற்காக நேற்று யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் வழக்கு எடுக்கப்பட்டிருந்தது.
இதன் போது வழக்காளி சார்பில் சட்டத்தரணி த.தினேஸின் அனுசரனையுடன், சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் ஆஜராகியிருந்தார்.

வழக்காளியான வைத்திய நிபுணர் சத்தியமூர்த்தி தொடர்பில் தடுப்புக் காவலில் இருந்த போது அங்கு அவருக்கு நிகழ்ந்த விடயங்கள் தொடர்பில் அவதூறாக வைத்தியர் அர்ச்சுனாவினால் சொல்லப்பட்ட விடயங்கள் மற்றும் அர்ச்சுனா யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து வைத்தியர் சத்தியமூர்த்தியுடன் சில வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டு, அவருடன் பிணக்கிற்கு உட்பட்ட விடயங்கள் தொடர்பிலும், அர்ச்சுனா தன்னுடைய முகப்புத்தகத்தில் வெளியிட்ட காணொலி ஊடாக அவதூறு பரப்பப்பட்டதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

அர்ச்சுனா தொடர்ந்தும் வைத்திய நிபுணர் சத்தியமூர்த்திக்கு எதிராகவும், அவருடைய மாண்பு மற்றும் கீர்த்திக்கு பங்கம் விளைவிக்கும் கருத்துக்களை தெரிவிப்பதாகவும் மன்றில் தெரிவிக்கப்பட்டது.

அவரால் கூறப்படும் கருத்துக்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பதோடு அடிப்படை அறமற்ற ஒருவருடைய கருத்தாகும் என்று வழக்காளி சத்தியமூர்த்தி தனது சத்தியக்கூற்றிலே தெரிவித்திருந்தமை தொடர்பில் சட்டத்தினையும், நீதிமன்றங்களினால் வழங்கப்பட்ட தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி நீண்ட சமர்ப்பணம் வழக்காளி தரப்பில் மன்றில் முன்வைக்கப்பட்டது.

மேலும் வழக்காளியானவர் தனது சத்தியக் கூற்றிலேயே தனது நோக்கம் எதிராளியான இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலே, குடிமகன் என்ற வகையிலே அல்லது பொது நிறுவனங்களை பொறுப்புக் கூற வைக்க வேண்டும் என்ற நியாயமாக செயற்படுமிடத்து, அவற்றுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்றும் பொய்யான வகையிலும், அவதூறான வகையிலும் அவரால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் கட்டளையாக்கப்பட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

குறித்த விடயங்களை செவிமடுத்த நீதிபதி, வழக்காளியால் கோரப்பட்டவாறு, அவருக்கு எதிராக அவதூறான கருத்துக்கள் எதனையும் தெரிவிக்கக் கூடாது என எதிராளி இராமநாதன் அர்ச்சுனாவிற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்தார்.

இது ஒரு முகமாக வழக்காளி தரப்பை மட்டும் கேட்டு வழங்கப்படும் கட்டாணை என்பதால், இது தொடர்பான அறிவித்தல் எதிராளிக்கு வழங்கப்பட்டுள்ளது.

கட்டாணை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை வலிதாக இருக்கும். அன்றைய தினம் அதனை நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பிலான தீர்மானத்தினை நீதிபதி எடுப்பார்.
இது தொடர்பில் எதிராளி இராமநாதன் அர்ச்சுனாவிற்கு கட்டளையின் பிரதியையும், அறிவித்தலையும் வழங்குமாறு மன்று கட்டளையிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.