புதிய அரசியலமைப்பில் சமஷ்டி முறையை கொண்டு வாருங்கள்
நீண்ட காலமாக ஒருவித சலனமும் இல்லாமல் தொடர்ச்சியாக சமஷ்டி ஆட்சி முறை வேண்டும் என்று வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சொல்லிக் கொண்டிருக்கின்ற ஜனநாயக தீர்ப்பை மதித்து அந்த ஆட்சி முறை மாற்றம் புதிய அரசியலமைப்பிலே ஏற்படுத்தப்பட வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் 75 வருட நிறைவை முன்னிட்டு ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை தமிழ் அரசுக் கட்சி 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1951 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாவது தேசிய மாநாடு திருகோணமலையில் நடைபெற்ற போது கட்சியினுடைய கொள்கை திட்டம் தெளிவாக தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. அதாவது, தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற வடக்கு கிழக்கு மாகாணங்களிலே சமஸ்டி முறையிலான ஆட்சி ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதும், நாங்கள் ஒரு தேசமாக தீவிலே வாழ்கிறோம். அதனால் எங்களுக்கு சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலே சுய நிர்ணய உரிமை உண்டு என்பதை ஊர்ஜிதம் செய்யும் வகையாகத்தான் ஆட்சி முறை மாற்றப்பட்டு சமஸ்டி முறையிலான ஆட்சி முறை இலங்கையிலே செய்யப்பட வேண்டும் என்று எங்களது முதலாவது தேசிய மாநாட்டிலே தெரிவிக்கப்பட்டது.
1949 ஆம் ஆண்டு பிரஜா உரிமைகள் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதும் அதைத் தொடர்ந்து இந்திய பாகிஸ்தானிய பிரஜா உரிமை சட்டம் கொண்டுவரப்பட்டபோது பல இலட்சக்கணக்கான மலையக தமிழ் மக்களுடைய வாக்குரிமை இல்லாமல் போனது. வாக்குரிமை என்று சொல்வதைவிட அவர்களுடைய பிரஜா உரிமை இல்லாமல் போனது. அவர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டார்கள். அதை செய்வதற்கு எதுவாக இருந்த காரணம் பாராளுமன்றத்திலே தங்களுக்கு இருந்த, இருக்கின்ற பெரும்பான்மை பலத்தினால் அன்றைய அரசுக்கு செய்யக் கூடியதாக இருந்தது. அதற்கு எதிராகத்தான் தந்தை செல்வா, வைத்தியர் நாகநாதன், வன்னியசிங்கம் ஆகியோர் அகில இலங்கை தமிழ் காங்கிரசை விட்டு விலகி புதிதாக ஒரு கட்சியை ஆரம்பித்தார்கள். பெரும்பான்மை ஆட்சியானது, இந்த நாட்டிலே ஒரு தேசமாக தமிழ் மக்கள் வாழ்வது தமிழ் மக்களுக்கு கேடானதாக இருக்கும் என்பதற்கான முதலாவது சான்றாக அந்த பிரஜா உரிமை சட்டம் இருந்தமையால் தான் சமஸ்டி முறையிலான ஆட்சி நிச்சயமாக உருவாக்கப்பட வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை எழுந்தது.
1952 ஆம் ஆண்டு பொது தேர்தலின் போது மக்களிடையே இந்த கொள்கை சரியான முறையிலே பரப்பப்படுவதற்கான கால அவகாசம் இல்லாத காரணத்தினால் என்னவோ கிழக்கிலே திருகோணமலையில் ஒருவரும் வடக்கில் வன்னியசிங்கமும் மாத்திரம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்பட்டார்கள். 1956லிருந்து இன்று வரைக்கும் தமிழ் மக்களுடைய ஏகோபித்த பிரதான கட்சியாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி மட்டுமே இருந்து வருகின்றது. இன்றைக்கும் வடக்கு கிழக்கில் இருக்கின்ற சகல தேர்தல் மாவட்டங்களிலும் இருந்தும் ஒரு பிரதிநிதியாவது தேர்வு செய்யப்பட்ட தமிழ் கட்சி என்றால் அது இலங்கை தமிழ் அரசுக் கட்சி மட்டும் தான். இன்றைய பாராளுமன்றத்திலும் மூன்றாவது பெரிய கட்சியாக 8 பாராளுமன்ற உறுப்பினர்களோடு இலங்கை தமிழ் அரசுக் கட்சி இருக்கின்றது.
தமிழ் மக்களுடைய தீர்ப்பு என்பது சமஷ்டி ஆட்சி முறையை ஏற்படுத்த வேண்டும் என்பதாகும். அதுவே மக்களுடைய ஜனநாயக தீர்ப்பாக இருக்கிறது. 75 வருட காலம் வியாபித்து இருக்கின்ற இந்த கட்சியினுடைய தொடக்க நாளை நினைவு கூருகின்ற இந்த வேளையில் புதிதாக வந்திருக்கின்ற அரசாங்கத்திற்கு ஒரு செய்தியை சொல்கின்றோம்.
சர்வதேச சட்டத்திலே ஒரு மக்கள் கூட்டமாக கணிக்கப்படுகின்ற நாம் ஒரு தேசம். எங்களுடைய ஜனநாயக தீர்ப்புக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். நீங்கள் ஆட்சிக்கு வருகிற பொழுது புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக வாக்குறுதி கொடுத்தீர்கள். அந்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது எமது கோரிக்கை. அதை செய்கிறபோது இத்தனை நீண்ட காலமாக ஒருவித சலனமும் இல்லாமல் தொடர்ச்சியாக சமஷ்டி ஆட்சி முறைக்கு எங்களுடைய ஆட்சி முறை மாற்றப்பட வேண்டும் என்று வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சொல்லிக் கொண்டிருக்கின்ற இந்த ஜனநாயக தீர்ப்பை மதித்து அந்த ஆட்சி முறை மாற்றம் புதிய அரசியலமைப்பிலே ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை ஆட்சியாளர்களுக்கு இந்த நாளிலேயே நினைவுபடுத்த விரும்புகிறோம் – என்றார்.