தையிட்டி விகாரை விவகாரம்; அநுரவின் உரிய செயற்பாடு தேவை
யாழ்ப்பாணம் தையிட்டியிலுள்ள திஸ்ஸ விகாரை விவகாரம் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான காகிதாதிகளுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் இதன்போது மேலும் கூறுகையில்,
இனவாதம் தான் இந்த நாட்டில் பிரச்சினையை ஏற்படுத்துகின்றது என்று ஜனாதிபதி தனது அக்கிராசன உரையில் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும் நாம் அனைவரும் இலங்கையர்கள் என்று கூறுவதால் மட்டும் பிரச்சினைகளை தீர்த்துவிட முடியாது. கடந்த 75 வருடங்களாக நாங்கள் பாரபட்சத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளோம். தமிழர், முஸ்லிம்கள், மலையக தமிழர்கள் யாராக இருந்தாலும் எமது அடையாளங்களையும் இன ரீதியில் அடையாளப்படுத்த வேண்டிய நிலைமையே ஏற்பட்டுள்ளது.
இதேவேளை அரசாங்கத்திடம் ஒரு விடயத்தை கேட்கின்றோம். நாட்டில் தையிட்டி என்ற இடத்தில் ஒரு விகாரை உள்ளது. அதனை திஸ்ஸ விகாரை என்று குறிப்பிடுவர். அது இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்டது. ஏற்கனவே இருந்த விகாரைக்கென காணி இருந்தது. அதில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. அந்தக் காணியில் விகாரையை அமைப்பதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது.
ஆனால் அதி பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் தனியாருக்குரிய காணியை எடுத்து அவர்கள் அந்த விகாரையை நிர்மாணித்துள்ளனர். அதற்கான அடிக்கல் வைக்கப்படும் போது எமக்கு அறிவிக்கப்பட்டது. இது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இது சட்டவிரோத நிர்மாணம் என்றும் இதனை நிறுத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அந்த தீர்மானத்தையும் மீறி அந்த நிர்மாணத்தை முன்னெடுத்துள்ளனர்.
இது தொடர்பில் கடந்த பாராளுமன்றத்திலும் கூறியிருந்தேன். பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கும் அறிவித்திருந்தேன். யாழ். அரச அதிபர், பிரதேச செயலாளர் ஆகியோரிடம் இருந்து அறிக்கைகள் கோரப்பட்டிருந்தன. அந்த அறிக்கையை இந்த சபையில் சமர்ப்பிக்கின்றேன். அந்த அறிக்கையில் இந்த விகாரை எந்த அனுமதியும் பெற்றுக்கொள்ளாது தனியார் காணியிலேயே அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான தவறுகள் திருத்தப்பட வேண்டும். எவ்வாறு தனியார் காணிகளை அபகரித்து நிர்மாணிக்க முடியும்.
எந்தவொரு தனிநபருக்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்பதே புத்தரின் கொள்கையாகும். ஆனால் அது பின்பற்றப்படவில்லை. அதேபோன்று வடக்கிலும் கிழக்கிலும் பல விகாரைகள் உள்ளன. எமது தமிழர்கள் பௌத்தர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. பௌத்தம் என்ற பெயரில் அவர்களின் காணிகள் அபகரிக்கப்படும் போது எப்படி அனைவரும் இலங்கையர் என்று கூற முடியும். இந்த விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.