முச்சந்தி
அயர்லாந்தில் தூதரகத்தை மூடிய இஸ்ரேல்!; இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நாடுகள்… ஐங்கரன் விக்கினேஸ்வரா
(பாலஸ்தீனிய அரசை அங்கீகரித்தல், காசாவில் அதன் போருக்கு எதிரான சர்வதேச சட்ட நடவடிக்கைக்கு ஆதரவு உள்ளிட்ட அயர்லாந்து அரசாங்கத்தின் “தீவிர இஸ்ரேல் எதிர்ப்புக் கொள்கைகள்” காரணமாக டிசம்பர் 15 தொடக்கம் இஸ்ரேல் தனது டப்ளின் தூதரகத்தை மூடுவதாக அறிவித்தது)
இஸ்ரேலுக்கு எதிரான தீவிரமான கொள்கைகள் காரணமாக அயர்லாந்தில் உள்ள தூதரகத்தை மூடியதாக 15 டிசம்பர் 2024 டெல் அவிவ் அரசு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் அரசின் காசா படுகொலைகளை கண்டத்து, கடந்த நவம்பர் 9, 2024 அன்று அயர்லாந்தின் டப்ளினில் பாலஸ்தீனிய ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பெருமளவு பொது மக்கள் அணிவகுத்துச் சென்றனர். இதனை அயர்லாந்து அரசு தடுக்காமல், மேலும் இஸ்ரேலிய விரோதப் போக்கை கடைபிடித்து வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளது.
பாலஸ்தீனிய அரசை அங்கீகரித்தல் மற்றும் காசாவில் அதன் போருக்கு எதிரான சர்வதேச சட்ட நடவடிக்கைக்கு ஆதரவு உள்ளிட்ட அயர்லாந்து அரசாங்கத்தின் “தீவிர இஸ்ரேல் எதிர்ப்புக் கொள்கைகள்” காரணமாக ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15 தொடக்கம் இஸ்ரேல் தனது டப்ளின் தூதரகத்தை மூடுவதாக அறிவித்தது.
மே மாதம் பாலஸ்தீன நாடு பற்றிய அயர்லாந்தின் முடிவிற்குப் பிறகு இஸ்ரேல் அதன் தூதரை திரும்பப் பெற்றது. மேலும் கடந்த வாரம் டப்ளின் சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) இஸ்ரேலை இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டிய தென்னாப்பிரிக்காவின் வழக்கை ஆதரித்தபோது டெல் அவிவ் அரசு மேலும் கோபமடைந்தது.
டப்ளினில் உள்ள இஸ்ரேலின் தூதரகத்தை மூடும் முடிவு அயர்லாந்து அரசாங்கத்தின் தீவிர இஸ்ரேலுக்கு எதிரான கொள்கைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக அயர்லாந்து பயன்படுத்திய செயல்கள் மற்றும் யூத விரோதச் சொல்லாட்சிகள் யூத அரசை மேலும் கோபமடைய வைத்துள்ளது.
இரட்டைத் தரத்துடன் அயர்லாந்து இஸ்ரேலுடனான உறவில் ஒவ்வொரு சிவப்புக் கோட்டையும் தாண்டியுள்ளது என்று வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார் அறிக்கையில் கூறினார்.
ஆனால் அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ், இந்த முடிவு மிகுந்த வருத்தமளிப்பதாகவும், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்திற்காக தனது நாடு எப்போதும் துணை நிற்கும் என்றும் கூறியுள்ளார்.
அயர்லாந்து இஸ்ரேலுக்கு எதிரானது என்ற கூற்றை நான் முற்றிலுமாக நிராகரிக்கிறேன். அயர்லாந்து அமைதி, மனித உரிமைகள் மற்றும் சர்வதேசச் சட்டத்திற்கு ஆதரவானது என்று அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளின் தீர்வு:
அயர்லாந்து இரு நாடுகளின் தீர்வை விரும்புகிறது மற்றும் இஸ்ரேலும் பாலஸ்தீனமும் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ வேண்டும்.
12 மாதங்களுக்குள் பாலஸ்தீனப் பகுதிகளில் ‘சட்டவிரோதமாக’ இருப்பதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று ஐ.நாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை ஏற்று கொள்ள வேண்டும் என்று அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேல் குடியேற்றங்கள் சட்டவிரோதமானது என ஐ.நா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனாலும் இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளைப் பேணுவதாகவும், இஸ்ரேலில் உள்ள அயர்லாந்து தூதரகத்தை மூடும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அயர்லாந்து வெளியுறவு அமைச்சர் மைக்கேல் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
காசாவில் தொடரும் படுகொலைகள் பாரிய அளவில் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அப்பட்டமான மீறலைப் பிரதிபலிக்கிறது. அங்கே இனப்படுகொலை செய்யப்படுகிறதா என்பதை உலக நீதிமன்றம் என்றும் அழைக்கப்படும் ICJ தீர்மானிக்கும் அதே வேளையில், பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸ் 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான பலமான தாக்குதலையும் கடுமையாக எதிர்த்து கண்டன அறிக்கை வெளியிட்டதாக அயர்லாந்து வெளியுறவு அமைச்சர் மைக்கேல் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு ஆயுத தடை :
உலக நாடுகள் பலவும் இஸ்ரேலுக்கு ஆயுத தடை விதித்து வரும் வேளையில், போர்க்குற்ற விசாரணை அவசியம் என சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் ஆயுதங்கள் வழங்க பல நாடுகள் மறுப்பு தெரிவித்தாலும் இஸ்ரேலின் போர்க்குணாம்சம் இன்னமும் மாறவில்லை.
இஸ்ரேலுக்கு ஆயுதம் விற்பனை செய்யும் முடிவில் இருந்து விலகியுள்ள நாடுகளின் வரிசையில் இவ்வருட தொடக்கத்தில் பிரித்தானியாவும் இணைந்தது.
இதனைப் போலவே, கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட இத்தாலி, புதிதாக இஸ்ரேலுக்கு எந்த ஆயுத ஒப்பந்தமும் முன்னெடுக்கப்படாது, ஆனால் அக்டோபர் 7ம் திகதிக்கு முன்னர் ஏற்படுத்திய ஒப்பந்தங்கள் அமுலில் இருக்கும் எனக் குறிப்பிட்டது.
பல வருடங்களாக இஸ்ரேலுக்கு இராணுவ உபகரணங்களை வழங்கும் மூன்றாவது பெரிய நாடாக இத்தாலி உள்ளது. தற்போது ஸ்பெயின் நாடும் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதில்லை என ஜனவரி மாதம் அறிவித்தது. ஸ்பெயின் அரசு வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேலுக்கு ஆயுதங்களுடன் செல்லும் கப்பல்களும் தங்கள் துறைமுகத்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க முடியாது எனவும் அறிவித்தது.
இவ்வருட மார்ச் மாதத்தில் இருந்து கனடாவும் இஸ்ரேலுக்கு ஆயுதம் விற்பனை செய்வதை நிறுத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.