வரலாற்று சாதனைகளை குவித்துள்ள தே.ம.ச.; ஒரு அரசியல் கட்சி தேர்தலில் இத்தனை சாதனைகளைப் படைத்தது முதல் முறை
இலங்கையின் அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத பல சாதனைகளை படைத்து தேசிய மக்கள் சக்தி இவ்வருட பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதுடன், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலத்துடன் உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி நேற்று 6,863,186 வாக்குகளைப் பெற்று வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தது. இந்த நாட்டின் வரலாற்றில் பொதுத் தேர்தலில் கட்சியொன்று பெற்ற அதிகூடிய வாக்குகள் இதுவாகும்.
முன்னதாக 2020 இல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 6,853,690 வாக்குகளைப் பெற்றிருந்ததுடன், இம்முறை தேசிய மக்கள் சக்தி அந்த எண்ணிக்கையை முறியடித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி இந்த ஆண்டு 61.56 சதவீத வாக்குகளைப் பெற்ற அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2010 இல் 59.09 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. இதன்படி, விகிதாசார வாக்களிப்பு முறையில் தேசிய மக்கள் சக்தி பெற்ற வாக்கு வீதம், இதுவரை பொதுத் தேர்தலில் கட்சியொன்று பெற்ற அதிகூடிய வாக்கு வீதமாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 ஆசனங்களில் 159 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது. பொதுத் தேர்தலில் ஒரு கட்சி பெற்ற அதிகூடிய பாராளுமன்ற ஆசனம் இதுவாகும். இதற்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 பாராளுமன்ற ஆசனங்களை வென்றிருந்தது.
தேசிய மக்கள் சக்தி வென்ற 159 உறுப்பினர் பதவிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 141 ஆசனங்களும் 18 தேசியப்பட்டியல் உறுப்பினர் ஆசனங்களும் அடங்கும்.
22 தேர்தல் மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் அதிகாரத்தை ஒருங்கிணைத்து பெரும்பான்மை இடங்களைப் பெற்றனர். பொதுத் தேர்தலில் கட்சியொன்று அதிகூடிய மாவட்டங்களை வென்றுள்ளதுடன், இதற்கு முன்னர் 2010ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே இந்த சாதனையைப் படைத்திருந்தது. அப்போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 19 மாவட்டங்களில் வெற்றிபெற்றது.
மேலும், தேசிய மக்கள் சக்தி 151 தொகுதிகளில் வெற்றி பெற்றது, இது ஒரு கட்சி பொதுத் தேர்தலில் அதிக தொகுதிகளை வென்ற முதல் சந்தர்ப்பம் ஆகும், இது முன்னர் 2010 இல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் இருந்த சாதனையாகும். அதந்கமைய, 136 இடங்களை பெற்றிருந்தது.
அத்துடன், இவ்வருட பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு தவிர்ந்த வடக்கு, கிழக்கில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றமை மிகவும் தனித்துவமான நிகழ்வாகும். பல வருடங்களாக தமிழ் அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு, கிழக்கில் தென்னிலங்கையில் இருந்து அரசியல் கட்சியொன்று ஆட்சியை கைப்பற்றுவது இதுவே முதல் தடவையாகும்.
அத்துடன், இரண்டு பிரதான அரசியல் கட்சிகளுக்கிடையில் அதிக வாக்கு வித்தியாசத்தை ஏற்படுத்திய தேர்தலாகவும் இவ்வருட தேர்தல் பதிவாகியுள்ளது.
இம்முறை தேசிய மக்கள் சக்தி 6,863,186 வாக்குகளையும், இரண்டாவதாக வந்த ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு 1,968,716 வாக்குகளையும் பெற்றுள்ளது. இரு கட்சிகளுக்கிடையிலான வித்தியாசம் 4,894,470 ஆகும்.
கடந்த 2020 பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 6,853,690 வாக்குகளையும், இரண்டாவது இடத்தில் இருந்த ஐக்கிய மக்கள் கூட்டமை 2,771,980 வாக்குகளையும் பெற்றுள்ளது. அந்த கட்சிகளுக்கிடையிலான வித்தியாசம் 4,081,710 ஆகும்.
அத்துடன், தேசியப்பட்டியலின் வெற்றியுடன் தேசிய மக்கள் சக்தி தேசியப்பட்டியலில் 18 ஆசனங்களை கைப்பற்றியதுடன், முன்பு இந்த சாதனையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றிருந்தது. 2020 நாடாளுமன்றத் தேர்தலில் 17 தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளைப் பெற்றிருந்தது.
அதன்படி, இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி பெற்ற வெற்றி, இந்த நாட்டின் வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி தேர்தலில் இத்தனை சாதனைகளைப் படைத்தது முதல் முறையாகும்.
அதன்படி இந்த ஆண்டு பொதுத் தேர்தலை தேர்தல் வரலாற்றை புதுப்பித்த தேர்தல் என்று கூறினால் மிகையாகாது.