பிள்ளையானிடம் 10 மணி நேரத்துக்கு மேல் விசாரணை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் 10 மணித்தியாலத்துக்கும் அதிகமாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சனல் 4 ஆவணப்படத்தில் தனது பெயர் குறிப்பிடப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் அவர் ஆஜராகியிருந்தார். காலை 10 மணியளவில் ஆஜரான அவர் இரவு 7 மணி வரையும் வெளியேறியிருக்கவில்லை.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு செல்வதற்கு முன்னதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அரசியல் பழிவாங்கல் அடிப்படையிலேயே குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தன்னிடம் விசாரணை நடத்தியதாகவும் தனிநபர்களின் விருப்பத்துக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் செயற்படக்கூடாது எனவும் குறிப்பிட்டார்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்க திணைக்களமொன்று விசாரணைகளை மேற்கொள்வதாக வருத்தம் தெரிவித்த அவர், சி.ஐ.டி. போன்ற துறைகள் சில தனிநபர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படாமல், புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தனது 5 மணி நேர வாக்குமூலத்தின் போது, தமிழில் வாக்குமூலத்தை வழங்க விரும்புவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வியாழக்கிழமை அறிவித்ததாகவும், அதன் பின்னர், அது தொடர்பான மொழி பெயர்ப்புப் பணிகளைத் தயாரிப்பதற்காக வெள்ளிக்கிழமை ஆஜராகுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.