பணயக் கைதியாக சிலரின் பிடியில் ரணில்; நானே ரணிலுக்கு அடுத்தவன்
ரணில் விக்கிரமசிங்க சிலரின் பணயக் கைதியாகவே இருக்கின்றார் என்று புதிய ஜனநாயக முன்னணி தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே ரவி கருணாநாயக்க இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
உண்மைகள் திரிபுபடுத்தப்பட்டுள்ளன. அதனால் உண்மைகளை வெளியிட வேண்டியுள்ளது. உண்மை நிலைமையை தெரிந்துகொண்டே ஐக்கிய தேசியக் கட்சியினர் உண்மைகளை மறைத்து கூறுகின்றனர்.
உண்மையில் ரணில் விக்கிரமசிங்கவை இருவர் அல்லது மூன்று பேர் பணயக் கைதியாக வைத்திருப்பது போன்றே தெரிகின்றது. இது கூட்டணியாகும். சகல கட்சிகளும் இணைந்தே தீர்மானங்களை எடுத்துள்ளனர்.
2010, 2015, 2019 இல் இந்தக் கட்சியிலேயே எமது ஜனாதிபதி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த ஒருவரும் இம்முறை இல்லை. இந்நிலையில் தேசியப் பட்டியல் விடயத்தில் 99.9 வீதம் ஐக்கிய தேசியக் கட்சி விருப்பத்திலேயே இருக்கின்றது. இருவர் மூவரே இதனை விரும்பவில்லை.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு அடுத்ததாக சிரேஷ்ட உறுப்பினரே நான்தான். மற்றையவர்களிடம் கேட்டால் தெரியும். இதன்படியே எனக்கு தேசியப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க தனி யானையே. மொட்டுக் கட்சியின் ஆதரவுடனேயே அவர் ஜனாதிபதியாகினார். இதன்போது செயற்குழுவில் எதாவது கூறப்பட்டதா? இப்போது நான் தனி யானை அல்ல. பல யானைகளுடன் இருக்கின்றேன். அவர்கள்தான் தனிமைப்பட்டுள்ளனர். நான் பாராளுமன்றத்தில் பெருளாதார மற்றும் வெளிநாட்டு கொள்கை அறிவுடனேயே இருக்கின்றேன்.
ரணில் விக்கிரமசிங்க தனி யானையாக ஜனாதிபதியாகி நாட்டுக்கு சேவை செய்ததை போன்று நானும் எனது அறிவை நாட்டுக்கு பெற்றுக்கொடுப்பேன் என்றார்.