வெளிப்படையாக தெரியவந்த தமிழரசு கட்சியின் உட்கட்சி மோதல்
நாடாளுமன்ற தேர்தலில் சிறீதரன் மற்றும் சிறிநேசனை வேட்பாளர்களாக களமிறக்க வேண்டும் என்ற விருப்பம் தனக்கு இருக்கவில்லை என்று சுமந்திரன் கருத்து வெளியிட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலத்தில் சுமந்திரன் இப்படியான தவறான கருத்துக்களை வெளியில் விடக்கூடாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு – செட்டிபாளையத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று (31) இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
”புதுக்கடைகள் ஆரம்பித்து விட்டால் அந்த கடைகளுக்குள் சென்று கொள்வனவு செய்து பார்ப்பதும், அது ஒரு உணவகமாக இருந்தால் அங்குள்ள உணவுகளை உண்டு பார்ப்பதும் வாடிக்கையாக இருக்கின்றன.
இந்த தேசிய மக்கள் சக்தி என்கின்ற அந்த கடைக்குள் தமிழர்கள் சென்று அதனை பார்ப்பதற்கு அல்லது அதை சுவைப்பதற்கு அல்லது கொள்வனவு செய்வதற்கு முயற்சிக்கின்றார்கள்.
ஆனால் அதற்கு முன்பாக நான் சொல்லக்கூடிய ஆலோசனை என்னவெனில், நடைபெறப் போகின்ற தேர்தலில் நாங்கள் ஏமார்ந்து விடாமல் தமிழ் தேசிய பிறப்பில் சோடை போகாமல், சோரம் போகாமல், பயணிக்க கூடிய தமிழரசு கட்சிக்கு வாக்களிப்பதன் மூலமாக அதனை ஒரு பலமான சக்தியாக மக்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த பேரினவாத கட்சிகள் எங்களை ஏமாற்றாமல் நாங்கள் ஏமாறாமல் இருப்பதற்கு வழி கூற வேண்டும், என்பதை இந்த இடத்தில் அழுத்தம் திருத்தமாக கூறி வைக்கின்றேன். கடந்த காலத்தில் சமாதான தேவதையாக வந்த சந்திரிக்கா பற்றி தப்பான கணக்கு போட்ட பின்னர் ஆறு மாதத்தில் அவருடைய சுய ரூபத்தை, விகார முகத்தை நாங்கள் பார்க்கக் கூடியதாக இருந்தது. அதேபோன்றுதான் இப்போது சொல்லுகின்றேன் இந்த தேசிய மக்கள் சக்தி என்கின்ற விடயத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு அவர்களது நடத்தைகளை போக்குகளை அவதானிக்க வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது.
இந்த நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பாக வாக்குகளை அளித்து ஏமாந்து போகாமல் தமிழ் தேசியத்தை, தமிழர் உரிமையை, தமிழரின் ஒரு இனப்பிரச்சினை தீர்க்கக்கூடிய விதத்தில் செயற்பட்டு வருகின்ற தமிழரசுக் கட்சிக்கு சாதகமாக வாக்களியுங்கள்.
இதன் மூலமாக கீரை கடைக்கும் எதிர்க்கடை இருக்க வேண்டும் என்று சொல்வது போன்று தென்னிலங்கையில் பாரிய சக்தியாக விளங்குகின்ற இந்த ஆளுங்கட்சிகளுக்கு நாங்கள் பேரம் பேசுகின்ற ஒரு சக்தியாக இருந்து தமிழர்களின் உரிமைகளை பெறுவதற்கு தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். சர்வதேசத்தின் பொருளாக நாங்கள் இருக்க வேண்டுமே ஒழிய அந்த அமைச்சரவையில் இருந்து கொண்டு நாங்கள் எதனையும் சாதிக்க முடியாது என்பதை வெளிப்படையாக கூறி வைக்க விரும்புகின்றோம்.
எமது கட்சியிலிருந்து எவராவது அமைச்சர் பதவி எடுக்க வேண்டும் அதன் மூலமாக ஒரு கௌரவத்தை பெறவேண்டும் அதிகாரத்தை பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் இருக்க முடியாது. என்றுதான் நான் கருதுகின்றேன்.
அதைவிட எங்களுடைய யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளரான சுமந்திரன் ஒரு கருத்தை வெளியிட்டிருக்கின்றார். அதாவது சிறீதரன், மற்றும் சிறிநேசன் ஆகியோர் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட வேண்டும் என்கின்ற விருப்பம் தனக்கு இருக்கவில்லை, அவர்கள் களமிறக்கப்பட்டு இருப்பதை தான் விரும்பவில்லை என்ற பாணியில் கூறியிருக்கின்றார். ஒரு முடிவு எடுக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறு கூறுவது ஒரு பொருத்தமற்ற செயல் என்று நான் கூறுகின்றேன்.
மக்கள் விரும்புகின்ற வேட்பாளர்கள்தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் களம் இறக்கப்பட வேண்டுமே தவிர சில தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புக்கு உட்பட்டவர்கள் களத்தில் இறக்கப்பட வேண்டும் என்று கனவு காண்பது ஒரு விபரீதமான சிந்தனை அல்லது வெறுப்பு சிந்தனை அல்லது பழி வாங்குகின்ற சிந்தனையாக இருக்க முடியும். தயவு செய்து சுமந்திரன் அவர்களே தேர்தல் காலத்தில் இப்படியான தவறான கருத்துக்களை வெளியில் விடக்கூடாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
மக்களின் தீர்ப்பு எப்படி இருக்கப் போகின்றது மக்களின் பார்வை எப்படி இருக்க போகின்றது ஒரு குறித்த மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை பற்றி நாங்கள் எந்த பேச்சும் பேசவில்லை.
அப்படி இருக்கின்ற போது மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்ற என்னைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு அல்லது விபரீதமான ஒரு கருத்தினை வெளியிடுவதற்கு அவருக்கு அப்படியான உரிமை இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் இயன்ற வரைக்கும் நாங்கள் ஒரு கட்டுக்கோப்பாக இருந்து தேர்தலை முகம் கொடுக்க வேண்டும். அவ்வாறு செயற்படுகின்ற போது சுமந்திரன் விபரீதமான கருத்துக்களை விமர்சன ரீதியான கருத்துக்களை இவ்வாறு கூறிக் கொண்டிருப்பது ஒரு மாவட்டத்தில் தீர்மானத்தை அல்லது ஒரு மாவட்டத்தின் தேர்தல் போக்குகளை தேர்தல் கணிப்புகளை மக்களின் தீர்ப்புகளை மாற்றி விடுகின்ற ஒரு செயற்பாடு போன்று நாங்கள் சிந்திக்க வேண்டியிருக்கின்றது.
தேவையற்ற கருத்து உழறினால் நாங்களும் அதற்குரிய பதில்களை அளிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு தள்ளப்படுகின்றோம். குறிப்பாக எங்களிடம் ஊடகவியலாளர்கள் கேள்விகளை கேட்கின்றார்கள்.
எனவே மக்களால் விரும்பப்படுகின்ற ஒரு வேட்பாளரை, மட்டக்களப்பு மக்களை குழப்புகின்ற செயற்பாடுகளில் எவரும் செயற்படக்கூடாது என்பதை அழுத்தம் திருத்தமாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
புதிய ஆட்சியில் இணைந்து அமைச்சரவையை பெற்றுக்கொண்டு நடாத்துகின்ற ஒரு இணக்க அரசியல் என்று ஒன்று காணப்படுகின்றது. அரசாங்கம் நல்ல திட்டங்களை கொண்டு வந்தால் நல்ல செயற்பாடுகளை முன்னெடுத்தால் அதனை ஆதரித்துக்கொண்டு தமிழ் மக்களுக்கு சாதகமான ஒரு தீர்வினை பெற்றுக் கொள்ளுகின்ற முயற்சி இருக்கும்.” என தெரிவித்துள்ளார்.