இல்லறம் என்று நல்லவர் மொழிந்தனர்!… கவிதை… ஜெயராமசர்மா
கணவனே கண்கண்ட தெய்வமாய் காணும்
மனைவியை மாநிலம் மாண்புடன் நோக்கும்
மனைவியின் சொல்லே மந்தரம் என்று
மனமதில் இருத்துவான் வாழ்க்கையில் துணையே
இருமனம் இணையும் இன்பமே வாழ்க்கை
இல்லறம் சிறக்க இணைவதே வாழ்க்கை
மணமகன் மணமகள் வாழ்வினில் என்றும்
இணை பிரியாமல் இருப்பதே வாழ்க்கை
திருமணம் என்பது இருமனம் இணைவதே
அனைவரும் வியந்திட அன்பினைப் பகிர்வதே
பிரிவினை என்பதைக் கனவிலும் எண்ணா
ஒரு மனதாக இருப்பதே திருமணம்
அன்பில் விளையும் அமுதமே வாழ்க்கை
ஆசியும் வாழ்த்தும் அமைவதே வாழ்க்கை
என்றும் பெரியோர் காட்டிடும் நல்வழி
நன்றாய் பற்றி நடப்பதே வாழ்க்கை
அன்பினை அறத்தை அகத்தினில் இருத்தி
ஆணவம் அகந்தை அனைத்தையும் அகற்றி
பண்புடன் பக்குவம் பேணியே நின்று
பாரினில் சிறக்க வாழ்வதே வாழ்க்கை
ஆண்டவன் துணையாய் இருப்பான் என்று
அவனை அனுதினம் எண்ணிட வேண்டும்
வேண்டும் அனைத்தும் தருவான் என்று
மெய்யாம் மனத்துடன் வாழ்வதே வாழ்க்கை
கணவனாய் மனைவியாய் அமைவது வரமே
கடவுளின் அருளால் அமைவதே வாழ்க்கை
இணை பிரியாது இன்பமாய் வாழ்தலே
இல்லறம் என்று நல்லவர் மொழிந்தனர்.
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா