கட்டுரைகள்

தமிழரசுக் கட்சியும் தேசியப் பட்டியலும்! … ஏலையா க.முருகதாசன்.

தமிழரசுக் கட்சியில் இருந்து ஒருவரை மட்டுமே தேசியப் பட்டியல் வழியாக நாடாளுமன்றத்துக்கு அனுப்ப முடியும் என்ற நிலைமையில் மூன்று பேர்களின் பெயர்களை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

திரு.மாவை சேனாதிராசா அவர்கள் திரு.எம்.ஏ.சுமந்திரன் அவர்கள்,திரு.சத்தியலிங்கம் அவர்கள் ஆகியோரே அந்த மூவருமாவர்.

தமிழரசக் கட்சியிலிருந்து யாராவது ஒருவரை அனுப்புவது என்பது சிந்திக்காத செயல் ஆட்கணக்கில் தமிழரசுக் கட்சியிலிருந்து இத்தனை பேர் நாடாளுமன்றத்திலிருக்கிறார்கள் என எண்ணி மகிழ்ந்து புளகாங்கிதம் கொள்வதற்கல்ல இந்த வேலைத்திட்டம்.அறிவுஜீவியை அனுப்ப வேண்டும் என்பது சொல்லித் தெரியும் விடயமல்ல.

பல்லினம் வாழும் நாட்டில் தன்னின அரசியலை எவ்வாறு செய்ய வேண்டும்,தமிழரைப் பற்றிச் சிங்கள மக்கள் என்ன நினைக்கிறார்கள்,இன்று இலங்கை விவகாரம் மட்டுமல்ல சர்வதேச நாடுகளின் அரசியல் நிலைப்பாடுகளையே அணிசேர்ந்த நாடுகள் வழியாகவும் வல்லரசு நாடுகளினது நிர்ப்பந்த வழியாகவும் எந்த நாட்டில் என்ன ஆட்சி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

திரு.மாவை சேனாதிராசா மிக நீண்ட காலமாக தமிழரசுக் கட்சியில் இருந்தவர் தமிழருக்கான போராட்டங்களில் சிறை சென்றவர் என்ற காரணத்திற்காக அவரை தேசியப்பட்டியலில் நாடாளுமன்றாத்திற்கு அனுப்புவது பொருத்தமற்ற வேலை,புத்திசாலித்தனமற்றது.

அவரை எனக்கு மிக நன்றாகவே தெரியும் அவரும் நானும் ஒரே ஊரைச் சேர்ந்தவரகள்;.அவர் இளைஞராக இருந்த போதே அரசியலில் ஈடுபட்டவர்.இன்னும் சொல்லப் போனால் 1968ஆம் ஆண்டு எமது தெல்லிப்பழை அம்பனைக் கலைப்பெருமன்ற உழவர் விழாவில் உரையாற்றியவர்.அதுதான் அவரின் முதல் பொதுமேடைப் பேச்சுமாகும்.

அன்றிலிருந்து அவர் தமிழுக்காக வாழ்ந்தார் என்பதை மறுப்பதற்கில்லை.அவர் நாடாளுமன்றத்திற்கு பலமுறை தெரிவாகியுள்ளார்.திரு.தந்தை செல்வா அவர்கள்,திரு.அ.அமிர்தலிங்கம் ஆகியோரிடம் அரசியல் கற்றவர் ஒன்றாகப் பயணித்தவர் அதெல்லாம் உண்மைதான். அவர் தமிழர் உரிமைக்காக உழைத்தவர் என்பதை மறுப்பதற்கில்லை.அதற்காக அவருக்குத் தேசியப் பட்டியல் ஆசனத்தை அளிப்பது மிகப் பொருத்தமற்றது.

நாடாளுமன்றத்தில் தமிழரசக்கட்சியினர் உட்பட தமிழரின் உரிமைக்காக அனல்தெறிக்க பேசினோம் என்பவர்கள் எல்லாம் அன்றிலிருந்து இன்று வரை

ஒரே விடயத்தையே சுற்றிச் சுற்றி வந்தார்களே தவிர இராஜதந்திர ரீதியாக இலங்கை அரசை அணுகவேயில்லை.

தமிழர்களைப் படுகொலை செய்த அரசை கொலண்ட சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தவோம் எனச் சூளுரைத்தவர்களில் திரு.மாவை சேனாதிராசா அவர்களும் ஒருவராவார்.

நடைமுறையில் சாத்தியமில்லாததையெல்லாம் தமிழ்மக்களைப் பூரிப்படைய வைப்பதற்காகவும் அவர்களை கொதிநிலையில் வைப்பதற்காகவுமே தமிழரசுக்கட்சியினர் இதுவரை அரசியல் செய்திருக்கிறார்கள்.

திரு.மாவை சேனாதிராசா அவர்கள்: இனிவரும்காலங்களில் தமிழரசுக்கட்சியின் ஆலோசகராக இருந்து வழிநடத்துவதே மிகவும் நல்லது.

இலங்கையில் அவை எந்தக் கட்சிகளாக இருந்தாலும் இளைய தலைமுறை ஆண் பெண்களை நாட்டை நிர்வகிக்க வழிவிட வேண்டும்.

திரு.மாவை சேனாதிராசா அவர்கள் இனிப் போதும் என திருப்திப்பட வேண்டும்.அவரின் அரசியல் நுட்பத்திறன் கொண்டதல்ல.

திரு.சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றத்தில் முதல்கிழமை தாள்களைக் கொண்டு; வந்து எவற்றையெல்லாம் வாசித்தாரோ அதைத் தாள்கள் இல்லாமல் அடுத்த கிழமை திரு.மாவை சேனாதிராசா சொல்வார்.

இவர்களில் எவராவது தாங்கள் இலங்கை நாடாளுமன்ற அங்கத்தவர்கள் என்ற ரீதியில் எப்பொழுதாவது இலங்கைக்குப் பொதுவான பொருளாதாரப் பிரச்சினைபற்றிப்: பேசியிருக்கிறார்களாவென்றால் இல்லவே இல்லை.நுட்பத்திறன் பேச்சு என்பது இவர்களுக்கு வரவே வராது.

அதுவுமல்லாமல் இலங்கைக் கடலில் இந்தியத் தமிழ் மீனவர்கள் மீன்பிடிக்கிறார்கள் அதனைத் தடுங்கள் அவர்களைக் கைது செய்யுங்கள் என்றாவது சொல்கிறார்கள் என்றால் அதுவும் இல்லை.

இலங்கை நாடாளுமன்றத்திலிருந்து கொண்டு இந்தியத்தூதருக்கு விசுவாசமாகவும்அவர் வழியாகவும் அவர்களுக்கு அரசியல் செய்து கழுவின மீனிலை நழுவின மீனாக அரசியல் செய்து கொண்டிருப்பகவர்களில் மதிப்புக்குரிய திரு.மாவை சேனாதிராசா அவர்களும் ஒருவர்.

அவராகவே தனக்குத் தேசியப்பட்டியல் ஆசனம் வேண்டாம் என்று சொல்வதே அவரின் பெருத்தன்மையை விளம்பும்.அவரின் அவைக்கும் உதவாத அரசியல் உரைவீச்சு எள்ளவும் இக்காலத்திற்கப் பொருத்தமற்றதே.

அடுத்தவர் திரு.சத்தியலிங்கம் அவர்கள்.நாடாளுமன்றத்தில் எண்ணிக்கை முக்கியமல்ல.விவேகமான அரசியல் தேவை.தமிழரசுக்கட்சியில் பொறுப்பான பதவியில் இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக திரு.சத்தியலிங்கத்தை அனுப்பவது மிக மிக முற்றிலும் பொருத்தமற்றதே.

தமிழர்கள் சிந்திப்பவர்கள்,புத்திசாலிகள்,காலத்தை எடை போட்டு காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும் அறிவு ஜீவிகள்,மழை பெய்யும் போது மழையில்

நனைந்து கொண்டே உப்பு விற்கும் முட்டாள்களல்ல என்பதை எடுத்துக் காட்டுவதானால் இலங்கை அரசியலின் யதார்த்தம் என்ன,கதைத்துக் கதைத்தே காலத்தை வீணடிக்காமல் தமிழர் பகுதிகளை அபிவிருத்தியாவது செய்வோம் எனச் சிந்திப்பவர். ;ஐ.நாடுகள் சபைக்குப் போனாலென்ன எங்கு போனலென்ன இலங்கை அரசைத் தண்டிக்க சிங்கள மக்கள் ஒரு போதும் சம்மதிக்க மாட்டார்கள்,எதிர்ப்பார்கள் இன்னும் இன்னும் இன முறுகல் அதிகரிக்கும் அதனால் எந்த அரசானாலும் சிங்கள மக்கள் சொல்வதைத்தான் உலநாடுகளும் கேட்கும் என்பதை நன்குணர்ந்தவர் திரு.எம்.சுமந்திரன் அவர்கள்.

அவரைத் தேசியப்பட்டியல் உறுப்புரிமைக்கு அனுப்பவதே பொருத்தமானதும் புத்திசாலித்தனமானதுமாகும்.இனிவருங்காலத்தில் இனரீதியான அரசியல் செய்வது விழலுக்கு இறைத்த நீர் போன்றதாகும்.

இப்பொழுது நடைபெற்ற தேர்தலில் மாத்தறையில் தமிழ்ப் பெண் ஒருவர் தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்டு வெற்றியீட்டியது மட்டுமல்ல வடக்கில்: கிழக்கில் தேசிய மக்கள் சக்தி பெரும் வெற்றியீட்டியிருக்கிறது.இதிலிருந்து இனவாதச் சிந்தகை மெதுவாகக் கரையத் தொடங்கியுள்ளது.

சிங்களவர் தமிழர் முஸ்லீம்கள் என்பதெல்லாம் இலங்கையர்களே.இனிவருங்காலத்தில் நடக்கும் தேர்தல்கள் அவை உள்ளாட்சித் தேர்தகளானாலும் இலங்கையர் என்ற பொதுநிலையில் மக்களின் நல்வாழ்வுக்கான பொருளாதாரக் கட்டமைப்பை வலுவுள்ளதாக்கும் அறிவுஜீவகளைத் தெரிவு செய்யும் தேர்தலாகவே இருக்கும்.

இந்த நிலையில் திரு.எம.ஏ.சுமந்திரன் தமிழரசுக் கட்சியை உடைத்தவர்: அவர் ஒரு துரோகி என்று சொல்வதால் ஒரு பலனும் இல்லை.

இலங்கையில் தமிழர்கள் இனி எப்படி அரசியல் செய்ய வேண்டும் என்பதை நண்குணர்ந்தவர் திரு.எம்.ஏ.சுமந்திரன் அவர்களே.

துரோகி என்று சொல்வது இப்பொழுதெல்லாம் ஒரு பாஷனாகிவிட்டது.தந்தை செல்வா அவர்கள் தமிழர் உரிமைக்காக பாடுபட்டதை உணராத பேராசிரியர் மதிப்புக்குரிய திரு.முருகர் குணசிங்கம் அவர்கள்,திரு.எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்கள் பொழுதுபோக்கிற்காக அரசியல் செய்தார் என ஜேர்மனியில் அவரின் புத்தக வெளியீட்டில் வாய்கூசாமல் சொன்னார்.

ஜேர்மனியில் புலிகளின் பேச்சாளராகவிருந்த அருட்தந்தை திரு.இமானுவேல் அவர்கள் இலங்கை அரசுடன் கதைத்தார் என்பதற்காக அவரைத் துரோகி என்று சொன்னதுடன் நன்றி மறந்து மாவீரர் தினமொன்றில் அவரைக் கிண்டல் செய்து நாட்டிய நாடகத்தை மேடையேற்றினர்.

இப்படித்தான் நாம் எமது அரசியலை நடத்தி வருகிறோம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.