உயிரிழந்தவரின் கண்ணை காணவில்லை; எலி கடித்ததாக தெரிவிப்பு
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள வைத்தியசாலையில் உயிரிழந்த ஒருவரின் இடதுபக்க கண் காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்தவரின் கண்ணை எலி கடித்திருக்கலாம் என வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இந்த விவகாரத்தில் வைத்தியசாலை நிர்வாகம் அலட்சியத்துடன் செயல்பட்டதாக கூறி, உயிரிழந்தவரின் குடும்பத்தினர் வைத்தியசாலை வளாகத்திற்குள் போராட்டம் நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நவம்பர் 14ஆம் திகதி பன்டூஷ் என்ற நபரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், அவர் சிகிச்சைப் பலனின்றி 15ஆம் திகதி இரவு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படவிருந்த நிலையில், அவரது இடது கண் காணாமல் உறவினர்கள் கண்டுள்ளனர்.
மேலும், அறுவை சிகிச்சை பிளேடு ஒன்று சடலத்துக்கு அருகில் இருந்ததாக உறவினர் ஒருவர் குற்றம் சாட்டினார். எவ்வாறாயினும், உயிரிழந்தவரின் கண்ணை எலி கடித்திருக்கலாம் என்று வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து இந்த விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியத்துடன் செயல்பட்டதாக கூறி, பன்டூஷ் குடும்பத்தினர் மருத்துவமனை வளாகத்திற்குள் போராட்டம் நடத்தினர்.
இது குறித்து கருத்து வெளியிட்ட வைத்தியசாலையின் கண்காணிப்பாளர், “இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
யாராவது அவர் கண்ணை வெளியே எடுத்தார்களா அல்லது எலி கண்ணை கடித்ததா என்ற இரண்டு கோணத்தில் விசாரகணை முன்னெடுத்துள்ளோம்.
இது இரண்டில் எது நடந்திருந்தாலும் அது தவறு தான். விசாரணைக்கு பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.