கவிதைகள்
“எண்ணிய எண்ணம் திண்ணமாய் இருக்கவேண்டும் ” ….. கவிதை ….. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண் ….. அவுஸ்திரேலியா 

நிதி இருந்தால் நீதி இருக்கவேண்டும்
மனம் இருந்தால் மானம் இருக்கவேண்டும்
தனம் இருந்தால் தானம் இருக்க வேண்டும்
குணம் இருந்தால் கொடுத்து உதவவேண்டும்
இடர் மிகுந்தால் எழுந்து எதிர்த்திடவேண்டும்
துயர் மிகுந்தால் துடைத்து எறிந்திடவேண்டும்
களை நிறைந்தால் பிடுங்கி எறிந்திடவேண்டும்
கருத்தில் நல்லதை பதித்திடவே வேண்டும்
எண்ணித் துணிந்து எதையும் தொடங்கிடவேண்டும்
எண்ணிய எண்ணம் திண்ணமாய் இருக்கவேண்டும்
பண்ணிடும் காரியம் பலருக்கும் உதவவேண்டும்
பாருளோர் யாவரும் பார்த்துமே வியக்கவேண்டும்
பொதுநலம் கருதியே காரியம் ஆற்றவேண்டும்
பொறுமையும் பொறுப்பும் செயலினில் இருக்கவேண்டும்
சுயநலம் துளியுமே தொட்டிடா திருக்கவேண்டும்
சுற்றமோ சொந்தமோ தூரவே இருக்கவேண்டும்
பற்றினை விட்டுவிட்டு பக்குவம் பேணவேண்டும்
பற்றுக்கள் பற்றிவிட்டால் பக்குவம் பறந்தேபோகும்
பாருக்குப் பயனைநல்க காரியம் ஆற்றுவோர்கள்
பலனதை பார்க்காவண்ணம் காரியம் ஆற்றவேண்டும் !
![]()