மழைக்காலச் செய்தியால் வெடித்த குடும்பப் புயல்

தென் மாகாணத்தின் நகரமொன்றில், மழையிலிருந்து பெண்ணொருவருக்குக் குடை பிடித்துக் கொடுத்த சம்பவம், கணவரின் குடும்ப வாழ்க்கையையே விவாகரத்து வரை கொண்டு சென்ற நிலையில், சிசிடிவி காட்சியால் அவர் அதிர்ஷ்டவசமாகத் தப்பியுள்ளார்.
அரச உத்தியோகத்தரான குறித்த நபர், வழக்கமாக மோட்டார் சைக்கிளில் வேலைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டவர். இரண்டு பாடசாலை மாணவர்களின் தந்தையான அவர், தனது தோற்றம் காரணமாகப் பிற பெண்களின் கவனத்தை ஈர்த்துவிடுவாரோ என்ற சந்தேகத்தில் மனைவி அவர் மீது அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், அண்மைக்காலமாகப் பெய்துவரும் தொடர் மழையால் மோட்டார் சைக்கிளில் பயணிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், அவர் பேருந்தில் வேலைக்குச் செல்லத் தொடங்கினார். இதற்காக மனைவியும் அவருக்கு ஒரு பெரிய குடையைக் கொடுத்திருந்தார்.
ஒருநாள் மாலை, மனைவி பிள்ளைகளுடன் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது, காலி நகரில் பெய்துவரும் கடும் மழை தொடர்பான விசேட செய்தி ஒளிபரப்பானது. அப்போது, தனது கணவர் மற்றொரு பெண்ணுடன் ஒரே குடையின் கீழ் நடந்து செல்லும் காட்சியையும் அவர் தொலைக்காட்சியில் கண்டார்.
இதனைப் பார்த்த பிள்ளைகளும், “அதோ எங்கள் அப்பா!” எனக் கூச்சலிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி, கணவர் வீடு திரும்பியதும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவருடன் வாழ முடியாது எனக் கூறி விவாகரத்து செய்து ஊருக்குச் செல்லப்போவதாகவும் மிரட்டியுள்ளார்.
தனது அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணொருவரை, வீதியின் மறுபுறத்தில் அவருக்காகக் காத்திருந்த கணவரின் வாகனத்தில் ஏற்றிவிடுவதற்காகவே குடை பிடித்துச் சென்றதாகக் கணவர் விளக்கமளித்தும் மனைவி நம்பவில்லை.
மறுநாள் அலுவலகத்துக்குச் சென்ற கணவர், தனது நிலைமையை சக ஊழியர்களிடம் தெரிவித்தார். குடையின் கீழ் சென்ற பெண்ணும் தொலைபேசியில் மனைவிக்கு விளக்கமளிக்க முயன்றபோதும், அவர் அதனை ஏற்கவில்லை.
இதனையடுத்து, வார இறுதியில் கணவரின் அலுவலக நண்பர்கள் இருவர், சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்த சிசிடிவி கமராவில் பதிவான காட்சிகளைப் பெற்றுக்கொண்டு அவரது வீட்டுக்குச் சென்றனர்.
அந்தக் காட்சிகளில், அலுவலகத்துக்கு முன்பாகக் குறித்த பெண்ணைத் தனது குடையின் கீழ் அழைத்துச் சென்று, வாகன நெரிசலுக்கு மத்தியில் அவரது கணவரின் வாகனத்தில் ஏற்றிவிடும் வரை குடை பிடித்துக்கொண்டிருந்தமை தெளிவாகப் பதிவாகியிருந்தது.
இதனைப் பார்த்த மனைவியின் சந்தேகம் நீங்கியது. “இந்த சிசிடிவி காட்சிகள் இல்லையென்றால் எனது குடும்ப வாழ்க்கையே முடிந்திருக்கும்” எனக் கூறிய கணவர் நிம்மதியடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மீண்டும் சுமுகமான நிலைக்குத் திரும்பிய குடும்பத்தில், மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் விருந்துபசாரமும் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
![]()