ஐக்கிய மக்கள் சக்தியின் அடுத்த தலைவராக: ஹர்ஷ டி சில்வா?
இலங்கையில் இடம்பெறவுள்ள எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக ஹர்ஷ டி சில்வா பதவி வகிக்கலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும கருத்து வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அரசியலை கைவிட வேண்டிய நிலை உருவாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒருவன் செய்திப் பிரிவின் சகோதர ஊடகமான மொனரா டிஜிட்டல் செய்திக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் அஜித் மான்னப்பெரும, அக்கட்சியில் இருந்து விலகிக் கொள்வதாக அண்மையில் அறிவித்திருந்தார்.
அவர், ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட வேட்பு மனுவும் தாக்கல் செய்திருந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்து கொண்ட ஒருவருக்கு தனது தொகுதி அமைப்பாளர் பதவியை கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வழங்கியதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
இவ்வாறான காரணங்களால் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குச்சீட்டில் யாரும் எனது பெயருக்கு விருப்பு வாக்குகளை இடவேண்டாம் என்றும் அஜித் மான்னப்பெரும கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த விடயங்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொழும்பு மாவட்ட தேர்தலிலும் சில சந்தர்ப்பங்களில் எதிர்க்கட்சி தலைவரை விட ஹர்ஷ டி சில்வாவுக்கு வாக்குகள் அதிகமாக கிடைக்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும் விளக்கமளித்த அவர் ஹர்ஷ டி சில்வா கட்சித் தலைவராக இருந்தால் நல்லது என்ற ஒரு கருத்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் காணப்பட்டு வருவதாக எடுத்துக்காட்டினார்.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அதனை புரிந்துக் கொண்டு ஒரு அடி பின்னால் வைப்பார் என நான் நம்புகிறேன் என வலியுறுத்தினார்.
எவ்வாறாயினும், தேர்தல் முடிவுகளை வைத்து அரசியில் எந்த திசை என்பதை தீர்மானிப்பதாக அவர் கூறியமையும் குறிப்பிடத்தக்கது.