தமிழரின் தாயக கோட்பாடும் அநுர அலையில் வீழும் தமிழரும்… நவீனன்
தமிழர் தாயகத்திலும், பாராளமன்ற தேர்தலிலும் அறுதிப் பெரும்பான்மை NPPக்கு கிடைத்த வெற்றியின் பின்னரும் அநுர அரசின் இனப்பிரச்சனை பற்றிய எதுவித கருத்துக்களும் தெளிவு பெறவில்லை என்பதே உண்மையாகும்.
தமிழர்களின் ஆகக் குறைந்த அரசியல் அபிலாசையான வடக்கு கிழக்கு இணைப்பைக் கூட அனுமதிக்க முடியாதென அதனை நீதிமன்றில் வழக்கிட்டு பிரித்தவர்களே இன்றைய ஆட்சியாளர்களான முன்னாள் ஜேவிபியினர்.
மாவீரர் நாள் நெருங்கும் வேளையில், இன்றைய ஆட்சியாளர்களை பற்றி தேசியத் தலைவரின் 2005 மாவீரர் நாள் உரையே அதற்கு சான்று பகரும்.
சந்திரிகாவின் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஜே.வி.பி, சுனாமி நிவாரண கட்டமைப்புக்கு கடுமையான ஆட்சேபம் தெரிவித்து அரசியலில் இருந்து விலகிக் கொண்டது. ஜே.வி.பி ஜாத்திக ஹெல உரிமைய போன்ற தீவிர இனவாத கட்சிகள் இந்த நிவாரண உடன்பாடு ஸ்ரீலங்கா அரசியல் அமைப்புக்கு விரோதமானதென உயர் நீதிமன்றத்தில் வழக்குகளையும் தாக்கல் செய்தனர்.
சிங்கள இனவாத சக்திகளுக்கு சார்பான முறையில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சுனாமி கட்டமைப்பை முழுமையாக முடக்கி செயலிழக்கச் செய்து சுனாமி கட்டமைப்புக்கு சாவமணி அடிக்கப்பட்டதுடன் தமிழ் மக்களுக்கு எஞ்சியிருந்த இறுதி நம்பிக்கையையும் சிங்கள பௌத்த பேரினவாதம் சாகடித்து விட்டது என தேசியத் தலைவரின் 2005 மாவீரர் நாள் உரை சான்றாக விளங்குகிறது.
அத்துடன் போர்க்காலங்களில் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு யுத்தத்திற்கு சிங்கள கிராமங்களில் முன்னின்று ஆட்சேர்ப்பு செய்தவர்களும் இவர்களேயாவர்.
தமிழர்களுக்கு 13ஆம் திருத்தச் சட்டம் தேவையில்லை என அறிவித்தது மாத்திரமின்றி, மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்க மாட்டோம் என சிங்கள பிக்குகளுக்கு உறுதி வழங்கியவர்களும் இவர்களே.
சர்வதேச போர்க் குற்ற விசாரணை ?
இறுதிப்போரின் சர்வதேச போர்க் குற்ற விசாரணையை ஏற்க முடியாதென கூறியதுடன், எந்த ஒரு இராணுவ வீரனையும் போர்க்குற்றவாளியாக விடமாட்டோம் என அறிவித்தனர்.
அதேவேளை உள்நாட்டு விசாரணை நடாத்தி இனப்படுகொலையில் சிறந்த பங்காற்றியவர்களுக்கு பதவி உயர்வுகளும் விருதுகளும் வழங்கி உள்ளார்கள்.
கடந்த செப்டம்பரில் ஜனாதிபதி தேர்தல் முடிந்து இதுவரையில் ஒரு அரசியல் கைதியை தானும் விடுதலை செய்யப்படவில்லை. தற்போது பாராளமன்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையும் பெற்றுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் முடிந்து இதுவரையில், யுத்தம் முடிந்து 15 வருடங்களான பின்பும் உயர் பாதுகாப்பு வலயங்கள் என அநாவசியமாக இராணுவம் வைத்திருக்கும் தமிழர்களின் காணிகளில் எதனையும் விடுவிக்காதவர்கள், பாராளமன்ற தேர்தலுக்கு முன்பாக ஓரிரு காணிகளை மட்டுமே பிரச்சார நோக்கில் விடுவித்தனர்.
நிலையான அதிகாரப் பகிர்வு ஏற்பாடு மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிப் பொறிமுறைக்கான ஒத்துழைப்புக்கான அரசியல் தீர்வு இல்லாத நிலையில், மோசமான இனவாதப் பதிவைக் கொண்ட கட்சியே தற்போது ஆட்சிபீடம் ஏறியுள்ளது.
புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய தனது முதலாவது உரையில் தமிழ் மக்களின் பிரச்சனை குறித்து ஒரு வார்த்தையைக் கூட அவர் குறிப்பிடவில்லை.
அவரது நிலைப்பாடு இவ்வாறு தான் இருக்கும் என்று தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். அனுரவின் புதிய ஆட்சியில் தமிழ் மக்களின் உரிமைகள் கிடைக்கும் என்ற நப்பாசை பல தமிழர்களுக்கும் உண்டு. ஆயினும் சந்திரிக்கா அம்மையார் அவர்கள் இலங்கையின் ஜனாதிபதியாக அரியணை எறியபோதும் போதும் அவர் ஒரு பெண் தானே தமிழ் மக்களின் உணர்வுகளை அவர் தாயன்போடு புரிந்துகொள்ளவார் என்று அம்மையாருக்கு வாழ்த்துரை பாடிய வரலாறும் உண்டு.
பின்னர் முழுத் தமிழ் மக்கள் தூற்றும் அளவிற்கு அம்மணி செம்மணியில் கிரிஷாந்தி உள்ளிட்ட பலநூறு தமிழர்களை துடிக்கத், துடிக்க கொன்று புதைத்து , பல இலட்சம் தமிழர்களையும் இடம்பெயரச் செய்த கொடூர ஆட்சியை தமிழ் மக்கள் மறக்கமாட்டார்கள்.
தற்போது அதிகாரத்திற்கு வந்துள்ள இலங்கையின் புதிய அரசும், அனுர அவர்களின் அரசியல் நிலைப்பாடுகள் குறிப்பாக அவரின் கடந்த கால அணுகுமுறைகள் பற்றி தமிழ் மக்கள்
சிந்திக்க வேண்டும்.
நியாயமான அபிலாஷைகளுக்கான நீண்டகாலப் போராட்டத்தில் தமிழர்கள் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும். இதன் மூலமே தமிழரின் தாயக கோட்பாடு சிதையாமல் இருக்கும்.
இதேவேளை அநுர அரசின் செயற்பாடுகள் புலம்பெயர் தமிழ் மக்களை நோக்கி திசை திருப்பப்படுகிறது. தமிழ் இனம் சிங்கள தேசத்தால் மாபெரும் இனப்படுகொலையை சந்தித்து அதற்காக சர்வதேச ரீதியாக போராடிவரும் நிலையில் அதுபற்றி எந்தவித கரிசனையுமற்று சிங்கள தேசத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி சிங்களவர்கள் மட்டும் சகல உரிமைகளுடன் சுதந்திரமாக வாழ்ந்தால் பொதுமென்று தமிழரை வைத்தே தம்மை பலப்படுத்திக்கொள்ள அநுர அரசும் முயற்சிக்கிறது.
இந்த நிகழ்ச்சி நிரல்களுக்குள் புலம்பெயர் தமிழர்கள் வீழ்ந்துவிடக்கூடாது. தமிழரின் தாயக கோட்பாடு சிதையாமல் இருக்க, விடுதலை நோக்கிய நீண்டகாலப் போராட்டத்தில் தமிழர்கள் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும்.
நீண்டகாலமாக தாயக மக்களுக்காக குரல் கொடுத்துவரும் புலம்பெயர் தமிழ் மக்கள் நிதானமாக செயற்பட வேண்டும்.