வெடித்துச் சிதறும் “காஸ் சிலிண்டர்”; தேசியப் பட்டியலால் பெரும் பூகம்பம்; ரவி கருணநாயக்கவை வெளியேற்றும் ஐ.தே.க.
ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானத்தை மீறி புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்புரிமையை ரவி கருணநாயக்க பெற்றுக் கொண்டமையால் அவரின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் கட்சிக்குள் பாரிய முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் காஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டு புதிய ஜனநாயக முன்னணி மூன்று ஆசனங்களைப் பெற்றுக் கொண்டதுடன் இரண்டு தேசியப்பட்டியல் ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது.
இரு தேசியப்பட்டியல் ஆசனத்துக்கும் தலதா அத்துகோரள மற்றும் காஞ்சன விஜேசேகர ஆகியோரை நியமிப்பதற்கான தீர்மானம் முதற்கட்டமாக எட்டப்பட்டிருந்தது. எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக்கு அறிவிக்காமல் புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் மூலம் தன்னிச்சையாக தனது பெயரை தேசியப் பட்டியலுக்கு நியமித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இரகசியமாக அனுப்பி வைத்தமை தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரவி கருணாநாயக்கவின் பெயர் புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியலில் தன்னிச்சையாக உள்ளடக்கப்பட்டதன் காரணமாக அவரின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு தெரியாமல் வேறு ஒரு கட்சியின் செயலாளர்கள் ஊடாக இந்த தன்னிச்சையான வேலையை ரவி கருணாநாயக்க செய்துள்ளதாகவும் அதன் மூலம் கட்சியின் அரசியலமைப்பை மீறியமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரவி கருணாநாயக்கவை தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கோ அல்லது புதிய ஜனநாயக முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய எவருக்கும் தெரியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும் புதிய ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் சியாமளா பெரேராவுடன் இணைந்து தன்னிச்சையாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. தற்போது புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு ரவி கருணாநாயக்கவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது.
தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு நிலவும் கடுமையான போட்டி காரணமாக ரவி கருணாநாயக்க இரகசியமான முறையில் தனக்கான ஆசனத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பெரும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.
இதேவேளை புதிய ஜனநாயக முன்னணிக்கு பாராளுமன்றத் தேர்தலில் இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், மற்றுமொரு ஆசனத்துக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பிலும் சர்ச்சை நிலவி வருகிறது. அது தொடர்பான கலந்துரையாடல்கள் கட்சி பிரதிநிதிகளிடையே இடம்பெற்ற நிலையில் காஞ்சன விஜேசேகரவை நியமிப்பதற்கான முன்மொழிவுகள் பலராலும் முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் இறுதித் தீர்மானம் இன்னும் எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.