மீனவர்கள் விடயத்தில் பலாத்காரம் வேண்டாம்; இலங்கை கடுமையாக வலியுறுத்திய இந்தியா
இலங்கை-இந்திய மீனவர்கள் விடயத்தில் எந்தச் சூழ்நிலையிலும் பலாத்காரத்தைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்று இந்திய தரப்பு இலங்கை கடுமையாக வலியுறுத்தியுள்ளது.
மீன்பிடி தொடர்பான இந்தியா-இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் (JWG) 6வது கூட்டம் கொழும்பில் நடைபெற்றபோதே அவர்கள் இதனை வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் இலங்கைக்கான இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
இந்தியக் குழுவில் இந்திய அரசின் மீன்வளத் துறையின் செயலர் டாக்டர். அபிலக்ஷ் லிகி தலைமை வகித்தார் மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளை உள்ளடக்கியது; வெளியுறவு அமைச்சகம்,தமிழ்நாடு அரசு,கடற்படை, கடலோர காவல்படை,மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தை சேர்ந்தோர் பங்கேற்றனர்.
இலங்கைக் குழுவில் இலங்கை கடற்றொழில் அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம். விக்கிரமசிங்க, மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு, மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களம், கடற்படை, கடலோரக் காவல்படை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உள்ளடங்கிகியிருந்தனர்.
இருதரப்பு பிரதிநிதிகளும் மீனவர்கள் மற்றும் மீன்பிடித் துறை தொடர்பான அனைத்து தொடர்புடைய பிரச்சினைகள் பற்றிய விரிவான மதிப்பாய்வை மேற்கொண்டனர்.
மீனவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண்பதற்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. மனிதாபிமான, ஆக்கபூர்வமான மற்றும் கூட்டுறவு அணுகுமுறையால் மட்டுமே இரு தரப்பு மீனவர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நீடித்த அடித்தளத்தை உருவாக்க முடியும் என்பதையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இலங்கைக் காவலில் உள்ள இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விரைவில் விடுவிக்குமாறு இலங்கை அரசை இந்தியத் தரப்பு வலியுறுத்தியது. இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் இலங்கைக் காவலில் தடுத்து வைக்கப்படுவது அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டிய இந்தியத் தரப்பு, நீண்ட தண்டனை மற்றும் அதிக அபராதம் விதிப்பது உட்பட, மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வுகள் மற்றும் வழிமுறைகளை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.
இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை அதிகாரிகளுக்கும் அவர்களது இலங்கை சகாக்களுக்கும் இடையே நடந்து வரும் ஒத்துழைப்பை எடுத்துக்காட்டும் வகையில், கண்காணிப்பு மற்றும் ரோந்து, அவர்களின் ‘ஹொட்லைன்’ மூலம் வழக்கமான தொடர்புகளைப் பேணுதல் மற்றும் பிற அனைத்து செயல்பாட்டு விஷயங்கள் உட்பட மேம்பட்ட ஒத்துழைப்பைத் தொடர இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. துரதிர்ஷ்டவசமான காயங்கள் மற்றும் உயிர் இழப்புகளுக்கு வழிவகுத்த கடலில் சமீபத்திய சோகமான சம்பவங்கள் குறித்து இந்தியத் தரப்பு கவனத்திற்கு கொண்டு வந்ததுடன் ,எந்தச் சூழ்நிலையிலும் பலாத்காரத்தைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்று கடுமையாக வலியுறுத்தியது.
அத்துடன் மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து மேலும் விவாதிக்க இரு நாடுகளுக்கு இடையேயான மீனவர் சங்கங்களின் கூட்டத்தை விரைவில் திட்டமிட வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய தரப்பும் மீண்டும் வலியுறுத்தியது. பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் நீண்ட கால தீர்வைக் காண்பதற்காக மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து தொடர்ந்தும் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.