பிரிக்ஸ் மாநாட்டிற்கு அநுர செல்லாதது ஏன்?
நாட்டில் ஏற்பட்டிருந்த அவசர பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற்கொண்டே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பிரிக்ஸ் மாநாட்டுக்கு ஜனாதிபதி கலந்துகொள்ளாமை தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்போது அமைச்சர் மேலும் கூறுகையில்,
பிரிக்ஸ் மாநாடு ரஷ்யாவில் நடைபெற்றது. அந்நாட்டு ஜனாதிபதி எமது ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் இங்கே மூன்று அமைச்சர்களே நிர்வாகம் செய்கின்றனர். ஜனாதிபதியே பாதுகாப்பு அமைச்சர், இங்கே அவசர பாதுகாப்பு நிலைமையொன்றும் ஏற்பட்டிருந்தது. அவர் ரஷ்யாவுக்கு போயிருந்தால் இங்கே இஸ்ரேலியர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தகவல்கள் வெளியாகும் போது பாதுகாப்பு அமைச்சர் நாட்டில் இருந்திருக்கமாட்டார். இவ்வாறான காரணத்தினாலேயே ஜனாதிபதி அந்த மாநாட்டிற்கு சென்றிருக்கவில்லை.
தேர்தலால் போகவில்லை என்று கூறுகின்றனர். சிலர் நாட்டின் பாதுகாப்பா? தேர்தலா? முக்கியம் என்று கேட்கின்றனர். இந்த நேரத்தில் அரச தலைவர் நாட்டில் இல்லாமல் இருப்பது பிரச்சினைக்குரியது. இதனால் ரஷ்ய ஜனாதிபதிக்கு வெளிவிவகார செயலாளர் ஊடாக நாம் கலந்துகொள்ளாமைக்கு காரணத்தை கூறினோம். அவர்களும் தமது நாட்டில் நிலைமை இப்படியிருந்தால் நாங்களும் அப்படிதான் என்று கூறியுள்ளனர்.