இலக்கியச்சோலை
தமிழ் இலக்கியத்திற்கு பெருந்தூணாக விளங்கியவர் தினகரன் சிவகுருநாதன்!.. இலண்டன் நூல் வெளியீட்டில் கோவிலூர் செல்வராஜன்
தினகரன் பத்திரிகை தமிழ் இலக்கியத்திற்கு பெருந்தூணாக விளங்கியதற்கு முதன்மைக் காரணமாக விளங்கியவர் கலாசூரி சிவகுருநாதன் என இலண்டன்
மாநகரில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் நான்கு நூல்கள் வெளியீட்டில் எழுத்தாளர் திரு. கோவிலூர் செல்வராஜன் தெரிவித்தார்.
இலங்கையில் இளம் படைப்பாளிகளின் படைப்புகளை தினகரனில் தொடர்ந்து வெளியிட்டு, தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக நீண்ட காலமாக பணியாற்றிய கலாசூரி சிவகுருநாதன், இளம் எழுத்தாளர்களையும் ஊக்குவித்து வந்த பெருமைக்கு உரியவர்.
இலங்கை நாட்டின் முக்கிய தேசிய பத்திரிகையின் ஆசிரியராக இருந்தும், அனைவரிடமும் எளிமையாக உறவாடியவர் என கோவிலூர் செல்வராஜன் மேலும் தெரிவித்தார்.
இலங்கை தமிழ் கலை இலக்கிய வளர்ச்சிக்கு தினகரன் பத்திரிகை ஆற்றிய பங்கு அளப்பரியது. தினகரன் பத்திரிகை பிரதம ஆசிரியர் கலாசூரி சிவகுருநாதன், பதவியிருந்து ஓய்வு பெறும் வரை இன நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாகச் செயற்பட்டார்.
இலங்கை வரலாற்றில் ஆகக் கூடுதலான காலம் பத்திரிகை ஒன்றின் பிரதம ஆசிரியர் பதவியை வகித்து சாதனை புரிந்த கலாசூரி சிவகுருநாதன், எழுத்தாளர்களை உத்வேகப்படுத்தி, ஊக்குவித்த சிறந்த ஊடக ஆளுமையாக விளங்கினார் என கோவிலூர் செல்வராஜன் மேலும் தெரிவித்தார்.
இலண்டன் மாநகரில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் நான்கு நூல்கள் கடந்த அக்டோபர் 26 சனிக்கிழமை வெளியிடப்பட்டது. பாலஸ்தீனம் எரியும் தேசம், ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல், தேசிய சுயநிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை இனங்களும், இலங்கை இதழியலில் சிவகுருநாதன், ஆகிய ஐங்கரன் விக்கினேஸ்வராவின் நான்கு நூல்கள் வெளியீடு லண்டன் ஈலிங் அம்மன் கோவில் மண்டபத்தில், கடந்த சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வினை பிபிசி புகழ் விக்கி விக்கினராஜா அவர்கள் சிறப்புற தொகுத்து வழங்கினார். இவ்வெளியீட்டு விழாவில் சைவப் புலவர், சைவசித்தாந்த பண்டிதர் சிவஸ்ரீ. பா. வசந்தக் குருக்கள் ஆசியுரையை வழங்கினார். அத்துடன் தமிழ் வாழ்த்துப் பாடலை இலண்டன் தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் பாடினார்கள். நிகழ்வின் சிறப்பம்சமாக நாட்டிய கலா நிபுணா ஷோபிதா ஜெயசங்கரின் பரத கலாலயம் நடனப் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சியும் இடம்பெற்றது.
ஈழத்தின் மூத்த ஆவணக்காப்பாளர். திரு. பத்மநாப ஐயர், இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் வாழ்த்துரையை வழங்கினர்.
தேசிய சுயநிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை இனங்களும் நூலின் அறிமுகவுரையை டாக்டர்.வே. ரவிமோகன் அவர்கள் ஆற்றினார். அத்துடன் இலங்கை இதழியலில் சிவகுருநாதன் நூலின் அறிமுகவுரையை திரு. கோவிலூர் செல்வராஜன் அவர்கள் ஆற்றினார்.
ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல் நூலின் அறிமுகவுரையை திரு. நா. சபேசன் சார்பாக திரு.ஜனகன் அவர்கள் உரை ஆற்றினார்.
அத்துடன் இந்நூல் வெளியீட்டில் ஈழத்து சிற்றிதழ்கள் பற்றிய சிறப்புரையை திருமதி. மாதவி சிவலீலன் அவர்கள் வழங்கினார்.
அத்துடன் டாக்டர். சி.ஜெயசங்கர், திரு. ஜனகன் பாலசுந்தரம்பிள்ளை, திரு. சத்யேந்திரா, திரு. ரூபராஜ், திரு.வரதீஸ்வரன் கனகசுந்தரம் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர். இந்நூல் வெளியீட்டின் ஏற்புரையை திரு. ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள் நிகழ்த்தினார்.