முச்சந்தி
பிரேசில் – ஜி 20 உச்சி மாநாடு; பொருளாதார வளர்ச்சிக்கு உறுதி!… ஐங்கரன் விக்கினேஸ்வரா.
பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
ஆர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டின் முக்கிய விவாத பொருளாக மூன்று விடயங்கள் சர்வதேச நாடுகளின் தலைவர்களால் கலந்துரையாடப்பட்டன.
முதலாவது விடயமாக உலகளாவிய ரீதியில் பசி மற்றும் சமூக பாகுபாடுகளுக்கு எதிராக போராடுதல் பற்றி இந்த மாநாட்டில் சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பலர் பங்கேற்று விவாதித்தனர்.
இரண்டாவது விடயமாக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தொழில் ஆற்றலை மாற்றி, நிலையான பொருளாதார வளர்ச்சி பெறுதல் பற்றியும் இந்த மாநாட்டில் சர்வதேச நாடுகளின் தலைவர்கள் கலந்துரையாடினர்.
மூன்றாவது முக்கிய விடயமாக உலகளாவிய நிர்வாக நிறுவனங்களின் சீர்திருத்தம் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
இந்திய பிரதமர் மோடி :
பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாடு 19வது வருடமாக நடைபெறுகிறது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த, உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்று மாநாட்டின் துவக்க அமர்வில், சமூக உள்ளடக்கம், பசி மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டம் என்ற தலைப்பில் உரையாடினார்.
அதேவேளை இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜிங் பிங் பங்கேற்றார். இதன் போது இருதரப்பும்
சந்திக்க வாய்ப்புக்கள் ஏற்பட்டன.
மாநாட்டின் முடிவில் பிரதமர் மோடி பிரேசில் அதிபர் லுாயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவை மீண்டும் சந்தித்து உரையாடினார். ஜி – 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தமைக்காக பாராட்டையும், நன்றியை தெரிவித்தார்.
மேலும் இரு தரப்பு நல்லுறவு, எரிசக்தி, உயிரி எரிபொருள்கள், பாதுகாப்பு, விவசாயம் மற்றும் பல துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதிய கீதா கோபிநாத்:
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் கீதா கோபிநாத் பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து அவர் வெளியிட்ட பதிவில், “ரியோவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்ததில் மகிழ்ச்சி என தெரிவித்தார்.
பசி மற்றும் வறுமையைக் குறைப்பதில் இந்தியாவின் பல வெற்றிகளை அவர் தெரிவித்தார். பல ஆக்கப்பூர்வமான முன்முயற்சிகளை உலகம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கீதா கோபிநாத்தின் பதிவுக்கு பதிலளித்துள்ள பிரதமர் மோடி, உணவு பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் வறுமையை ஒழிப்பதற்கும் இந்தியா உறுதியுடன் உள்ளது. நாங்கள் எங்களின் வெற்றிகளைக் கட்டியெழுப்புவோம்.
சர்வதேச ரீதியில் அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக எங்கள் கூட்டு வலிமை மற்றும் வளங்களைப் பயன்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜி20 மாநாட்டின் இடையே இத்தாலி, இந்தோனேசியா, நார்வே, போர்ச்சுகல், எகிப்து மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
ஜி 20மாநாடும் அவுஸ்திரேலியாவும்:
ஜி- 20 இல் அடையப்பட்ட முடிவுகளின் பட அவுஸ்திரேலியாவில் வேலைகளை உருவாக்குவது பற்றியும், பணவீக்கம் ஒரு உலகளாவிய பிரச்சனை, அதற்கு உலகளாவிய பதில் தேவைப்படுவதாக பிரதமர் அந்தோனி அல்பனிஸ் கருத்து தெரிவித்தார்.
அத்துடன் உலகெங்கிலும் உள்ள அவுஸ்திரேலியாவின் நட்புறவுகளை தொடர்வதே முக்கியம். பிரேசிலில் நடந்த இந்த உச்சிமாநாட்டில், பகிரப்பட்ட சவால்களுக்கு தீர்வு காண்பதற்காக தலைவர்களை சந்திக்க முடிந்தது எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனிஸ் தெரிவித்தார்.
காலநிலை மாற்றம் குறித்த உலகளாவிய நடவடிக்கை மற்றும் பொருளாதாரங்களுக்கு சுத்தமான எரிசக்தி வழங்கும் வாய்ப்புகள் ஆகியவை அந்த மாநாட்டின் விவாதத்தின் முக்கிய புள்ளிகளாக இருந்தன. விலைவாசி உயர்வை தடுப்பது, உலகளாவிய விநியோகச் சங்கிலிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது பற்றியும் பிரதமர் அந்தோனி அல்பனிஸ் உரையாடினார்.
ஜி- 20 போன்ற உச்சி மாநாடுகள் அனைத்தும் பொருளாதார வளர்ச்சியில் இருந்து அனைவரும் பயனடைவதை நாம் எவ்வாறு உறுதி செய்வது என்பதுடன், அவுஸ்திரேலியாவின் குரலை உலகளாவிய ரீதியில் ஒலிக்கச் செய்வதன் மூலம், உலக மக்களுக்கு பயனளிக்கும் தீர்வுகளை நாம் வடிவமைக்க முடியும் எனவும் பிரதமர் அந்தோனி அல்பனிஸ் கருத்து தெரிவித்தார்.