வட பகுதிக்கு நாம் விஜயம் செய்வதில் மறைமுக நிகழ்ச்சி நிரல் எதுவுமில்லை
“நாங்கள் வடக்குக்கு வருவதை பலரும் சந்தேகக் கண் கொண்டு பாா்க்கின்றாா்கள். ஆனால், வடபகுதிக்கு நாங்கள் வருவதில் எமக்கு எந்தவித மறைமுக நிகழ்ச்சியிலும் இல்லை” என்று யாழ்ப்பாணம் வந்த இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் தெரிவித்தார்.
இலங்கையின் உள்விவகாரங்களில் தாங்கள் தலையிடப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
சீனத் தூதுவருக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள புத்திஜீவிகள் மற்றும் வர்த்தக சமூகத்தினருடனான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது உரையாற்றிய போதே சீன தூதுவர் கீ சென் ஹொங் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய சீனத் தூதுவர்,
“ஜனாதிபதி தேர்தல் மட்டும் பொது தேர்தலில் பின்னர் வடபகுதியில் சாதகமான ஒரு நிலை உருவாகியிருக்கின்றது, ஒரு முன்னேற்றம் காணப்படுகிறது. இது வரவேற்கத்தக்க ஒரு முன்னேற்றம் ஆகும்.
கடந்த காலங்களில் இலங்கைக்கு பல்வேறு உதவிகளையும் சீனா வழங்கி இருக்கிறது. அதேபோல் எதிர்காலத்திலும் உதவிகள் வழங்கப்படும்.
நான் யாழ்ப்பாணத்திற்கு பல தடவைகள் வந்து சென்றிருக்கின்றேன். யாழ்ப்பாணத்தில் வீடமைப்புக்கான பொருத்து வீடுகள் மற்றும் மீனவர்களுக்கான மீன்பிடி வலைகள் போன்றவற்றை வழங்கி இருக்கிறோம்.
யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற மூன்று தீவுகளில் மின் சக்தி திட்டங்களை உருவாக்குவதற்கான யோசனைகளை சீன நிறுவனம் ஒன்று முன் வைத்திருந்தது. அதற்கான அங்கீகாரமும் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. ஆனால் பின்னர் இந்த ரத்து செய்யப்பட்டது. நம்மைப் பொறுத்தவரையில் இது ஒரு மோசமான முன்னுதாரணமாக இருக்கின்றது.
வடபகுதியில் செயல்படுத்தக்கூடிய பல திட்டங்கள் இருக்கின்றன. இதற்கான சட்ட ரீதியான வரையறைகளை மேற்கொள்வதற்கு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்று அவசியம். இவ்வாறான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படுமாக இருந்தால், பெரிய நாடு என்ற வகையில் சீனா தான் அதனால் பயன்பெறும் என சிலர் கூறுகிறார்கள். அதாவது அது சீனாவுக்கு சாதகமாக அமையும் என்பது சிலருடைய கருத்து. ஆனால் அவ்வாறான கவலை அவசியமற்றது.
1952 ல் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ரப்பர் – அரிசி உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது. அதன் போது இலங்கையில் இருந்து ரப்பரை சர்வதேச சந்தை விலையை விட அதிக விலைக்கு சீனா கொள்வனவு செய்தது. மறுபுறத்தில் இலங்கைக்கு அரிசியை சர்வதேச சந்தை விலையை விட குறைவான விலைக்கு சீனா வாங்கியது. பின்னர் சீனாவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலைமையிலும் இந்த உடன்படிக்கையை தொடர்ந்து முன்னெடுத்தது. மியன்மாரில் இருந்து அரிசியை வாங்கி இலங்கைக்கு அது வழங்கியது.
சீனாவின் கடன் பொறி தொடர்பாகவும் சிலர் கூறியுள்ளார்கள். அதுவும் தவறான ஒரு தகவல். இலங்கைக்கு நிதி உதவி வழங்குவது நாம் பல நெருக்கடிகளை சந்திக்க வேண்டி உள்ளது. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்தில் முதலாவதாக கைச்சாத்திட்ட நாடாக சீனாவே இருந்தது” என்றும் சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.