லண்டனில் மிகப்பெரிய சீஸ் திருட்டு: 300,000 பவுண்டுகள் இழப்பு
பிரித்தானியாவில் உள்ள பிரபல டெய்ரி நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் மோசடி நடைபெற்று இருப்பது தெரியவந்துள்ளது.
டெய்ரி நிறுவனத்திடம் மோசடி
லண்டனில் உள்ள நியால்ஸ் யார்ட் டெய்ரி(Neal’s Yard Dairy) என்ற பிரபலமான பாலாடைக்கட்டி(Cheese) விற்பனையாளர் நிறுவனம் ஒரு பெரிய மோசடியில் சிக்கியுள்ளது.
அதாவது சில மோசடிக்காரர்கள் தங்களை பிரான்ஸின் சில்லறை விற்பனையாளர்களின் பிரதிநிதியாக அறிமுகப்படுத்தி கொண்டு கிட்டத்தட்ட 22 டன் ஆடம்பர செடார் சீஸ்ஸை( luxury cheddar cheese) ஏமாற்றியுள்ளனர்.
இதன் மதிப்பு மட்டும் சுமார் 300,000 பவுண்டுகள் (3 கோடி ரூபாய்க்கு மேல்) என தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட Neal’s Yard Dairy நிறுவனம் மோசடியை உணர்வதற்கு முன்னதாகவே சிறிய அளவிலான உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்பட்ட 950 செடார் சீஸ் சக்கரங்களை அனுப்பி வைத்துள்ளது.
இது நிறுவனத்திற்கு மிகப்பெரிய இழப்பாக கருதப்படும் நிலையில், பாலாடைக்கட்டிகளை உற்பத்தி செய்த சிறு தயாரிப்பாளர்களுக்கு ஏற்கனவே பணம் செலுத்தி விட்டதாக Neal’s Yard Dairy நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அக்டோபர் 21ம் திகதி புகார் வழங்கப்பட்டுள்ள நிலையில், மெட் பொலிஸார் இந்த சம்பவத்தை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ஆனால் இதுவரை சந்தேக நபர்கள் என யாரையும் பொலிஸார் கைது செய்யவில்லை.
இந்த பகிரங்க திருட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக பிரபல சமையல்காரர் ஜேமி ஒலிவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.