கட்டுரைகள்
விடுதலைப் பேரொளியான வீரத்தின் விருட்சங்கள்: ஹோ சி மின் – சே குவாரா – பிரபாகரன்.. – நவீனன்
வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளுவோம். நான் சாகசவாதியல்ல, எனது மக்களுக்காகப் போராடும் விடுதலைப் போராளி எனும் மேதகுவின் கூற்றுக்கிணங்க தமிழர்களின் தேசிய விடுதலையை முன்னெடுத்தவரே பிரபாகரன்.
புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள் எனும்
சே குவேராவின் கூற்றுக்கிணங்க மக்களின் நலனுக்காக தன்னையே தியாகித்த வீரன் தான் சே குவாரா.
இப்பூமிப் பந்தில் பலர் உதிக்குன்றனர், பலர் மறைகின்றனர். ஆயினும் ஒருசிலரே இன்றுவரை நீடித்து நிலைத்து சாதனை படைக்கிறார்கள். அந்தவகையில் வரலாற்றின் பொன் எழுத்துக்களால் பதிக்கப்பட்ட விடுதலைப் போராளிகளாக ஹோ சி மின் – சே குவாரா – பிரபாகரன் விளங்குகின்றனர்.
என்றும் விலைபோகாத பிரபாகரன்:
எந்தவித அற்ப அதிகாரங்களுக்காகவும் விலைபோகாத, தமிழ் மக்களின் உரிமைகளை அடகுவைக்காத போராட்டத்தை முன்னெடுத்த பெருந் தலைவனே பிரபாகரன்.
தமிழரின் விடுதலைக்காக முன்னின்ற பிரபாகரனையே தங்களின் அடையாளமாக ஏற்கத் துணிந்தார்கள் ஈழத்தமிழ் மக்கள். அப்படித்தான் பிரபாகரன் ஈழத் தமிழர்களின் தேசியத் தலைவரானார்.
பதினெட்டாவது அகவையில் போராடத் தொடங்கிய பிரபாகரன் உலகத் தமிழர்களின் தேசியத் தலைவராகவே அன்றும் இன்றும் என்றும் விளங்குகிறார்.
பிரபாகரன் சிறுவனாக இருந்த போது, 1958 ஆம் ஆண்டில் நடந்த தமிழர் இன அழிப்பில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் இவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இனவெறியரால் ஈழத்தமிழர்கள், கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவங்களை பலதை கேள்விப்பட்டார்.
இவருடைய பெற்றோருக்கு நன்கு தெரிந்த ஒரு விதவைத்தாய் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தைச் சிறுவனாக இருந்த பிரபாகரனுக்குக் கூறினார். பாணந்துறையில் இந்து குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம் போன்ற கொடூரமான வன்முறைகளை இவர் அறிந்தபோது, சிங்கள அரசின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உள்ளுணர்வும் முனைப்பும் இவர் மனதில் இளம் வயதிலேயே உருவாகியது.
அன்றில் இருந்து நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று இவர் முடிவு செய்தார்.
அத்துடன் தமிழ் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்தபிறகு மேற்படிப்புக்குச் செல்ல இலங்கை அரசின் மேற்கல்வி தரப்படுத்தல் கொள்கை ஒரு தடையாக இருந்தது. இவற்றை எல்லாம் விடிவிக்க தமிழ் ஈழமே ஓரே தீர்வாகும் என முடிவெடுத்துப் போராடினார்.
இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி எனும் பிரபாகரன் கூற்றுக்கிணங்க தன் வாழ் நாளை தமிழர்க்காக அர்ப்பணித்தார்.
ஒரு தவறு நடந்தால் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்.
உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக உழைத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள் தான் உண்மையானவர்கள் – உயர்ந்தவர்கள் என மாவீரர்களை என்றும் போற்றிக் கௌரவித்த பெருந் தலைவனே பிரபாகரன்.
வியட்நாமில் ஹோ சி மின்:
ஈழத் தமிழர் போராடியதைப் போன்றே வியட்நாமிய மக்களும் போராடினார்கள். பல்லாயிரம் மக்களின் தியாகங்களால் உருவானதே வியட்நாம் தேசம். வியட்நாமில் காலனித்துவ குடியேற்றவாதிகளிடம் இருந்து முழுமையாக விடுதலை அடைந்து சுதந்திர நாடாக விளங்க
ஹோ சி மின் ஆற்றிய பணி அளப்பரியது.
ஹோ வியட் மின் விடுதலை இயக்கத்தை 1941 இலிருந்து முன்னின்று நடத்தி, 1954 இல் வரை பிரெஞ்சுப் படையினருடன் சண்டையிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அவ்வெற்றியானது அவருக்கு கம்யூனிச நாடாக வடக்கு வியட்நாமை அமைக்க உதவியது.
வியட்நாம் போரை அவரது இறப்பு வரையில் முன்னின்று நடத்தினார். ஆறு ஆண்டுகளின் பின்னர் வட வியட்நாமின் வெற்றியுடன் போர் முடிவுக்கு வந்ததுடன் இரண்டு வியட்நாம்களும் ஒன்றிணைந்தன.
அமெரிக்கர்களை விரட்டியடித்த பின்னர் தெற்கு வியட்நாமின் தலைநகராயிருந்த சாய்கோன் (Saigon) நகரம் ஹோவின் நினைவாக ஹோ சி மின் நகரம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
புரட்சியின் முகம் சே குவேரா:
சே குவேரா ஆர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர் மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் புரட்சிகளில் பங்குபெற்றிய போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர்.
பரவலான வறுமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு என்பவற்றை இலத்தீன் அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும், மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சே குவேரா நம்பலானார்.
இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற ஸ்பானிய அமெரிக்கா என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது.
பிற்காலத்தின் பின்னர் சே குவேரா தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது.
அதன் பின்னர் கியூபாவின் மத்திய வங்கியின் தலைவராக 14 ஆண்டுகள் பணியாற்றினார்.அக்காலகட்டத்தில் கரந்தடிப் போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும், புத்தங்களையும் எழுதியிருந்தார். 1964 டிசம்பர் 11ம் தேதியன்று கியூபாவின் பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் அவையின் 19 வது பொது அமர்வில் உரையாற்றினார்.
பின்னர் பதவிகள் அனைத்தையும் துறந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அதுவும் வேறு நாட்டு மக்களுக்காக போராடிய இவரது போராட்டம் அளப்பரிய ஒன்றாகும்.
பூமியின் நடுவினில் ஆழப்பதிந்த பெயர் பெற்ற சேகுவாரா தனது இறுதிக்கணங்கள் கூட ஒரு பரட்சி வீரனின் உன்னத தியாகத்தை உலகறியச் செயத்து.
எந்த மண்ணிலோ பிறந்து எந்த மண்ணிற்காகவோ போராடி எந்த மண்ணிலோ துணிச்சலாக மரணத்தை சந்தித்த சே குவேரா இந்த யுகத்தின் ஒப்பற்ற தலைசிறந்த விடுதலைப்போராளி. எக்காலமும் முகிழும் வீரத்தின் வித்தான சே குவேரா, எல்லா யுகங்களிலும் ஒளிரும் புரட்சிமுகமானார்.
உலகப் பந்தில் விடுதலைப் பேரொளியாக ஹோ சி மின், சே குவாரா, பிரபாகரன் என்றுமாக மிளிர்கின்றனர்.
சுதந்திர விடுதலை வேண்டிய மக்களின் வீர விருட்சங்களாக
ஹோ சி மின் – சே குவாரா – பிரபாகரன் விளங்குகின்றனர். அவர்களின் வரலாறு அடுத்த தலைமுறைக்கும் உணர்த்தப்பட வேண்டும்.