முச்சந்தி

தமிழர் தேசத்தின் அடையாளம் கார்த்திகைப் பூ!..  செங்காந்தள் மலர் தமிழ்நாட்டின் மாநில மலர் !!… நவீனன்

(எத்தகைய அடக்குமுறை வந்தபோதும், ஆலயங்களில் மணி ஒலிப்பதோ, தீபம் ஏற்றுவதோ தடைசெய்யப்பட்ட போதும் மாவீரர் நாளில் கார்திகை மலர்கள் இதழ்களை விரித்து மாவீரர்களை அஞ்சலிக்க தவறவில்லை. தமிழரின் இதய அஞ்சலியை துப்பாக்கி முனையில் அதிகாரம் தடுத்து நிறுத்தினாலும், இயற்கையாக, கார்த்திகைப் பூ வடிவில் மாவீரர் நாளினை நினைவேந்துவதை யாராலும் அடக்க முடியவில்லை)

பண்டைய தமிழ் மன்னர்கள் தமது இராட்சியங்களுக்கு தனித்தனியான மலர்களைக் கொண்டிருந்தனர் என்பது வரலாற்றிலிருந்து அறியக்கூடியதாக உள்ளது.

கார்த்திகைப் பூவின் வரலாற்றுப் பாரம்பரியம்:

சோழருக்கு அத்திப் பூவும், சேரருக்கு பனம் பூவும், பாண்டியர்க்கு வேப்பம் பூவும் தேசிய மலர்களாக இருந்ததுள்ளன. மேற்குறிப்பிட்ட பூக்களின் மாலைகளையே அவர்கள் களமுனைகளுக்கு செல்லும் போது அணிந்து சென்றதாக வரலாறு கூறுகின்றன.

இங்கே காந்தள் என்பது கார்த்திகைப் பூவின் பாரம்பரியத் தமிழ்ப் பெயராகும். இவ்வரலாற்றுச் சான்றாதாரத்தினூடாக கார்த்திகை மலருக்கும் தமிழர் வரலாற்றுக்கும் உள்ள தொடர்பு உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெட்டத்தெளிவாகின்றது.

தேசத்தோடு மாத்திரமின்றி தேசத்தில் வாழுகின்ற மக்களின் நம்பிக்கைளிலும் பூக்கள் பங்கு வகிக்கின்றன. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு உள்ளிட்ட சங்க இலக்கியங்களிலும் செங்காந்தள் மலர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. அத்தகைய சிறப்புமிக்க மலர்தான் தமிழ்நாட்டின் மாநில மலராகப் போற்றப்படுகிறது.

தமிழ்நாட்டின் மாநில மலராக செங்காந்தள் :

செங்காந்தள், காந்தள் அல்லது கார்த்திகைப் பூ என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன. ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் காணப்படும் இந்த மலர் தமிழ்நாட்டின் மாநில மலராகத் திகழ்வது மிகவும் சிறப்புக்குரியது.

இம் மலர் `Gloriosa Superba’ என்ற தாவரவியல் பெயரைக்கொண்டது. செங்காந்தள் மலர்ச் செடியின் அனைத்துப் பாகங்களிலும் `கோல்ச்சிசின்’ (Colchicine) என்ற அல்கலாய்டுகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

கார்த்திகை மாதத்தில் பூக்கும் இந்தப்பூ வேலிகளில் மட்டுமல்ல சாலையோரங்கள் மற்றும் காடுகளிலும் படர்ந்து வளரக்கூடியது. குறிப்பாக, மலைகள் மற்றும் சரிவுகளில் காணப்படும் இந்த மலர் அழகிய விரல்களைப் போலவும், சுடர்கள்போலவும் காட்சியளிக்கும்.

காந்தள் மலராக மலர்ச் செடியின் வேர்ப்பகுதியை `கண்வலிக்கிழங்கு’, `கலப்பைக்கிழங்கு’, `வெண்தோன்றிக்கிழங்கு’, `கார்த்திகைக்கிழங்கு’ என்றும் அழைக்கிறார்கள்.
செங்காந்தள் செடியின் கிழங்கிலிருந்துதான் புதிய கொடிகள் கிளைவிட்டுப் படரும். செடி வகையான இது, கொடிபோல் படரக்கூடியது. இலைகளின் நுனி நீண்டும் சுருண்டும் பற்றுக்கம்பிகள் போல அருகில் உள்ள மரம், செடி போன்றவற்றைப் பற்றிப் பிடித்து வளரக்கூடியது. இதன் இலைகளுக்கு காம்பு கிடையாது. ஆனால், கிழங்கின் ஒவ்வொரு பகுதியின் முனையிலும் புதிய கணு முளைக்கும்.

இதன் பூக்கள் பெரியவை. முதலில் பச்சை நிறத்துடன் பூக்கும் இந்த மலர் பிறகு வெண்மை கலந்த மஞ்சள், பிறகு மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு, நீலம் கலந்த சிவப்பு என நிறம் மாறிக்கொண்டே போகும்.

கார்த்திகை பூ தமிழரை காத்தவர்களின் பூ !

தீ கொழுந்துவிட்டு எரிவதுபோலக் காணப்படும் செங்காந்தள் பூவை `அக்னிசலம்’ என்றும் சொல்வார்கள். கிழங்கு கலப்பையைப்போன்ற தோற்றத்துடன் காணப்படுவதால், அதை `கலப்பை’ என்றும், `இலாங்கிலி’ என்றும் சொல்வார்கள்.

இலைகளின் நுனி சுருண்டு காணப்படுவதால், `தலைச்சுருளி’ என்பார்கள். மற்ற தாவரங்களைப் பற்றிக்கொண்டு வளர்வதால் `பற்றி’ என்றும் சொல்வார்கள். வளைந்து பற்றிக்கொள்வதால், `கோடல்’, `கோடை’ என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் பூ பூப்பதால் `கார்த்திகைப்பூ’ எனப்படுகிறது.

மழைக்காலத்தில் வனப்புடன் காணப்படுவதால், `தோன்றி’ என்றும் நாட்டு மருத்துவத்தில் `வெண்தோண்டி’ என்று அழைப்பார்கள். இதன் பூக்களின் நிறம் வேறுபடுவதால், `வெண்காந்தள்’ என்றும், `செங்காந்தள்’ என்றும் வர்ணிக்கிறார்கள். கிழங்கு பிரிந்து கணுக்கள் காணப்படுவதை, `ஆண்காந்தள்’ என்றும் கணுக்கள் இல்லாததை `பெண்காந்தள்’ என்றும் சொல்வார்கள்.

தேனீக்களும் வட்டமிடும் காந்தள் மலர் :

செங்காந்தள் மலரில் தேன் அதிகமாகக் காணப்படுவதால், எப்போதும் வண்டுகளும் தேனீக்களும் வட்டமிட்டுக்கொண்டிருக்குமாம். பொதுவாக, மலர்கள் அனைத்துமே பூத்து உதிரக்கூடியவை.

ஆனால், செங்காந்தள் மலர் மட்டும் வாடினாலும் உதிர்வதில்லை. இந்தப் பூவை உற்றுப்பார்த்தால், கண்வலி வரும் என்று சொல்கிறார்கள், அதனால் இதை `கண்வலிப்பூ’ என்றும் கிராப்புறங்களில் அழைக்கிறார்கள்.
இத்தகைய சிறப்புவாய்ந்த வரலாறுகளைக் கொண்ட செங்காந்தள் மலர் புற்றுநோய்க்கு நல்லதொரு மருந்தாகச் செயல்படுகிறது என்று கூறப்படுகிறது. குறிப்பாக, புற்றுநோய் பரவாமல் தடுக்கும் கால்சிசின் (colchicine) செங்காந்தளின் விதை, கிழங்கில் அதிகமாக உள்ளது.
இதற்காக செங்காந்தள் செடியின் விதையை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த மருந்து நிறுவனங்கள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றன எனவும் அறியப்படுகிறது.

மருந்தாக பயன்படும் செங்காந்தள் :

செங்காந்தள் பாம்புக்கடி, தேள்கடி போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. பாம்பு கடித்தவர்கள் இந்தச் செடியின் வேருடன் குப்பைமேனி வேர், நீலி வேர் சேர்த்து அரைத்து, அரை நெல்லிக்காய் அளவு தினமும் காலை, மாலை என மூன்று நாள்கள் சாப்பிட்டுவந்தால், விஷம் இறங்கும் என தமிழ்நாட்டில் கிராமிய வைத்தியர்கள் நம்புகின்றனர்.

உப்பில்லா பத்தியம் அவசியம். சிறிய பாம்புகள் கடித்தாலோ, வண்டு கடித்தாலோ இதன் இலையை அரைத்துப் பூசி சீயக்காய் தேய்த்துக் குளித்தால் விஷம் இறங்கிவிடும்.
செங்காந்தள் வேரில் செய்யப்பட்ட தைலத்தை வாரம் ஒருநாள் தலையில் தேய்த்துக் குளித்துவந்தால் எலி, வண்டு, பூரான், சாரைப்பாம்பு கடிபட்டவர்களுக்கு விஷத்தன்மை குறைந்துவிடும்.

மேலும், இந்தத் தைலத்தை மேகநோய், சொறி, சிரங்கு, படை உள்ளவர்கள் குளித்து வந்தால் நோய் குணமாகும். இத்தகைய சூழலில் புளி, புகைப்பிடித்தல், போதைப்பொருள் பயன்படுத்தக் கூடாது. வாதநோய், மூட்டுவலி, தொழுநோயைக் குணப்படுத்துவதுடன் பால்வினை நோய், வெண்குஷ்டம் போன்றவற்றைக் குணப்படுத்தவும் இது பயன்படுகிறது. பிரசவவலியைத் தூண்டும் நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது.

மகத்தான மருத்துவப் பலன்கள் :

பிரசவத்தின்போது நஞ்சுக்கொடி இறங்காமல் அவதிப்படும் பெண்களுக்கு பச்சை செங்காந்தள் வேர்க்கிழங்கை அரைத்து தொப்புள், அடிவயிறு, உள்ளங்கை, உள்ளங்கால் போன்ற இடங்களில் தடவுவார்கள். உடனடியாக நஞ்சுக்கொடி இறங்கிவிட பச்சைச் செங்காந்தள் கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி அது மூழ்குமளவு வேப்பெண்ணெய் ஊற்றிக் காய்ச்ச வேண்டும். கிழங்குகள் மேலே மிதக்கும்போது அடுப்பிலிருந்து இறக்கி, ஆறவைத்து, பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பாரிசவாயு, தலைவலி, கழுத்து நரம்புவலி போன்றவற்றுக்கு இந்த எண்ணெயைத் தேய்த்துவந்தால், குணம் கிடைக்கும். மேலும் தலைப்பேன்களை ஒழிக்கும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. செங்காந்தள் செடியின் கிழங்கு ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருந்துகளில் பல்வேறு விதமாகப் பயன்படுத்தப்படுகிறது.

தமிழர் தேசத்தின் அடையாளம் கார்த்திகைப் பூ:

தமிழர் தேசியத்தின், தமிழர் தேசத்தின் அடையாளச் சின்னமாக பூக்கள் விளங்குவது யாவரும் அறிந்ததே. பூக்கள் அந்தந்த தேசியத்தினதும், தேசத்தினதும் வரலாற்று சமூக பண்பாட்டின் பால் பின்னிப்பிணைந்து உள்ளதை நாம் காணலாம்.

ஒவ்வொரு நாட்டினதும் தொடர்புபட்டுள்ள மலர்கள் தேசியப் பூக்களாக பிரகடனப்படுத்தப்பட்டு அந்தந்த தேசியங்களால் கௌரவிக்கப்படுவதும், தேசியக்கொடிக்கு சமமாக பேணப்படுவதும், தொன்றுதொட்டு நிலவிவரும் மரபு.
தழிழர்களின் தேசியப்பூவாக, தமிழீழத்தின் தேசியப் பூவாக கார்காலத்தில் மலர்ந்திடுவதும், தமிழீழ தேசியக்கொடியின் வர்ணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

தமிழீழத் தேசியத் நாளாம் மாவீரர் நாள் வருகின்ற நாட்களில் கொடிபரப்பி பூத்துக் குலுங்குவதும், தமிழீழ தேசமெங்ஙனம் பரவி முகிழ் விடுவதுமான காந்தாள் (கார்த்திகை) பூ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தேச நம்பிக்கைளின் பூக்கள்:

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்களோடு சேர்ந்து போரிட்டு உயிர் ஈந்த எல்லைப்படை துணைப்படை வீரர்களையும், புலிகளோடு இணைந்து உயிர் ஈந்த ஈழ புரட்சி இயக்க (ஈரோஸ்) உறுப்பினர்களையும், மற்றும் குட்டிமணி, தங்கத்துரை போன்ற வேறு பல ஈழப்போராட்ட போராளிகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் மாவீரர் நாளாகும்.

இதற்குரிய நாளாக நவம்பர் 27 ஆம் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் 1989 ஆண்டில் அறிவிக்கப்பட்டது. சர்வதேச ரீதியில் நினைவுகூரும் நாள் போன்று மற்ற நாடுகளில் போர்வீரர்களை நினைவு கூரும் நாட்களோடு தமிழீழ மாவீரர் நாள் ஒப்பிடத்தக்கது.

ஈழத்தமிழர் அனேகர் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஈழப் போராட்டத்தில் மடிந்த வீரர்களுக்கு மரியாதை செய்வர்.
ஈழப் போரில் இறந்த போராளிகளை நினைவுகூருவது, மதிப்பது தமது அடிப்படைக் கடமைகளில், கொள்கைகளில் ஒன்றாகக் தமிழ் மக்கள் கருதுகிறார்கள். முதன் முதலில் மாவீரர் நாளாக நவம்பர் 27 விடுதலைப் புலிகளால் 1989 அறிவிக்கப்பட்டது.

தமிழீழ மாவீரர் நாளாக இந்நாளைத் தேர்ந்தெடுத்ததற்கு தமிழீழ போராட்ட வரலாற்றுடன் இணைந்த ஒரு முக்கிய காரணம் உள்ளது. இந்த நாளில்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது போராளியான சங்கர் (செ. சத்தியநாதன்) வீரமரணம் அடைந்தார்.

மாவீரர் நாள் அடையாளமாக கார்த்திகை பூ:

உலக அரங்கில் ஈழத் தமிழினத்தின் குறியீடாக, வேறு எந்தப்பூவை விடவும் பொருத்தமான தேர்வாகக் கார்த்திகைப்பூ சிறப்புப் பெற்றுள்ளது. ஆனால் கார்த்திகை பூ சொல்லும் செய்தியை, அது கமழும் தேசிய வாசத்தை நுகர்வதற்குப் பேரினவாதம் தயாராக இல்லை.

இலங்கைத் தீவின் ஒரே ஒரு பூ நீலோற்பலம்தான் என்று அதன் நாசி வழிகள் எங்கும் நீலோற்பலத்தால் அடைத்து வைத்திருக்கிறது. இயற்கை, அதன் பரிணாமப் பாதைக்குக் குறுக்காக நிற்கும் எதனையும் தூக்கி எறிந்து தன் பல்லினத்துவத்தை நிலைநிறுத்தும் பேராற்றல் பெற்றது என்பதை வரலாறு பூராவும் நிரூபித்தே வந்துள்ளது.

கார்த்திகைப்பூவும் கார்த்திகைக் கனவுகளும் ஈழத்தமிழர்களினதும் புலம்பெயர் தமிழர்களினதும் வாழ்வில் மறக்கமுடியாத நாளாக கார்திகை 27 ம் திகதி காணப்படுகிறது.
மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் தம் உயிர்களை ஆயுதமாக்கி போராடி மடிந்த மாவீரர்களை நினைவேந்தும் நாள் மாவீரர் நாளுக்கென்றே பிறந்தாற்போல் இந்தமாதத்திலேயே கார்திகைப்பூக்களும் மலரும்.

மாவீரர்களை அஞ்சலிக்கும பூ:

தமிழீழத்தை அடையாளப்படுத்தும் சிகப்பு மஞ்சள் வர்ணங்களோடும் மாவீரர் நாளில் ஏற்றப்படும் சுடரைப் போன்ற தோற்றத்துடனும் கார்திகை மலர்கள் எவருக்கும் சொல்லாமலேயே மாவீரர்களை நினைவூட்டும்.

2009 இல் போர் மௌனித்த பின்னரும், எத்தகைய அடக்குமுறை வந்தபோதும் – மாவீரர் நாளில் ஆலயங்களில் மணி ஒலிப்பதோ, தீபம் ஏற்றுவதோ தடைசெய்யப்பட்ட போதும் கார்திகை மலர்கள் இதழ்களை விரித்து மாவீரர்களை அஞ்சலிக்க தவறவில்லை. தமிழர்களின் அஞ்சலியை துப்பாக்கி முனையில் அதிகாரம் தடுத்து நிறுத்தினாலும் இயற்கை கார்த்திகைப் பூ வடிவில் மாவீரர் நாளினை நினைவேந்துவதை யாராலும் அடக்க முடியவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.