இலங்கை

மக்களின் ஆணையால் ஆட்சி மாறியுள்ளதே தவிர அதிகார பீடங்களின் மனோ நிலை மாறவில்லை

மாற்றத்தை விரும்பிய மக்களின் ஆணையால் இலங்கையில் ஆட்சி மாறியிருக்கிறதே தவிர, அதிகாரபீடங்களின் செயல்நோக்கும், மனோநிலையும் சிங்கள வல்லாதிக்கத்தின் வெளிப்பாடாகவே இன்றும் தொடர்கிறது என முன்னாள் எம்.பி.யும் இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்மாவட்ட முதன்மை வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் சிறீதரன், கிளிநொச்சி – கண்ணகிநகர் கிராமத்தில் தமது ஆதரவாளர்களை சந்தித்து கலந்துரையாடும் போதே இவ்வாறு தெரிவித்ததுடன் மேலும் கூறுகையில்,

காலம்காலமாக இந்த நாட்டின் அதிகாரபீடங்களும், கொள்கை வகுப்பாளர்களும் எத்தகையதோர் ஆதிக்க மனோநிலையுள் சிக்குண்டிருந்தார்களோ, அதே மனோநிலையில்தான் அநுர அரசின் நடவடிக்கைகளும் அமைந்திருக்கின்றன.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்ட யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர்களான முன்னாள் எம்.பி. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் யாழ்.மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் ஆகியோர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை கண்டனத்துக்குரியது.

அதேபோல், இலங்கையின் அரசகரும மொழியாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ்மொழி இதுவரைகாலமும் அரச ஆவணங்களில் இரண்டாம் மொழியாக பிரயோகிக்கப்பட்டுவந்த நிலையில், புதிய கடவுச்சீட்டுகளில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளமையும், ஜனாதிபதி செயலகத்தினால் அனுப்பப்படும் கடிதங்கள் தனிச்சிங்கள மொழியில் அமைந்திருப்பதும் இந்த நாட்டின் மொழிக்கொள்கையின் தளம்பலையே காட்டுகிறது.

இத்தகைய சம்பவங்களும் , திட்டமிட்ட நகர்வுகளும் “இந்தநாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளதே தவிர தமிழினத்தின் தலைவிதி ஒருபோதும் மாறப்போவதில்லை” என்ற அபாயச் செய்தியின் அறிவிப்புகளாகவே அமைந்துள்ளன.

இத்தகைய யதார்த்தப் புறநிலைகளை புரிந்துகொண்டு, இந்தத் தேர்தல் களத்தில் பெருந்தேசியவாத கட்சிகளை முழுமையாக நிராகரித்து, இனத்தின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் காலக்கடமை எமது மக்களின் கைகளிலேயே உள்ளது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.