பிரிந்து சென்றவர்கள் திரும்புவார்களா?; மகிந்த தலைமையில் மீள அணி திரள பேச்சு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பிரிந்து சென்று தற்போது பல்வேறு கூட்டணியாக செயற்படும் உறுப்பினர்களை மீண்டும் ஒன்றிணைப்பது தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து தற்போது பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்கனவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து விலகி வேறு கட்சிகளில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களும் இணைந்து பாராளுமன்றத்தில் ஒரே குழுவாக செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
மேலும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களை குழுவில் சேர்ப்பது குறித்து கட்சி கவனம் செலுத்தி வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக பெரும்பாலான பெரமுன உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து கட்சியிலிருந்து விலகியிருந்தனர்.
அவர்கள் தற்போது தினேஷ் குணவர்தன தலைமையிலான பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி மற்றும் நிமல் லான்சா – பிரியதர்சன யப்பா ஆகியோரைக் கொண்ட புதிய கூட்டணி என செயற்பட்டு வருகின்றனர். பாராளுமன்றத் தேர்தலிலும் சிலிண்டர் சின்னத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிட்டிருந்தனர்.
இவ்வாறான நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து விலகி தற்போது பல கூட்டணிகளாக செயற்பட்டு வரும் முன்னாள் உறுப்பினர்களை மீண்டும் கட்சிக்குள் இணைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை மீண்டும் பலமான அமைப்பாக கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராக பாராளுமன்றத்தில் செயற்பட தாம் நம்புவதாகவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கு போதியளவு எம்.பி.க்கள் இருப்பதால், அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க எதிர்பார்க்கவில்லை எனவும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.