தமிழரசுக்கு ஒரு ஆசனம் கேட்பது தமிழ் தேசியத்தை அழிப்பதற்கா ?
தமிழரசுக் கட்சிக்கு ஒரு ஆசனத்தையாவது பெற வேண்டும் என கிளிநொச்சியில் ஒருவர் பிரசாரம் செய்வது தமிழ் தேசியத்தை அழிக்கும் நபர் ஒருவர பாராளுமன்றம் கொண்டு செல்வதற்கான முயற்சியா என தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சுயேச்சையாக மாம்பழம் சின்னத்தில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுபவருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் கேள்வி எழுப்பினார்.
யாழ் பஸ் நிலையத்தில் இடம்பெற்ற பிரசார நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
தமிழரசு கட்சியில் இருக்கும் ஒருவரின் சூழ்ச்சியால் தமிழ் தேசியத்தை நேசிக்கும் பலர் தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறி சுயேட்சையாக மாம்பழச் சின்னத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறோம்.
தமிழரசு கட்சியில் இருந்து பல்வேறுபட்ட சூழ்ச்சிகளால் தமிழ் தேசியத்தை அழிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அதனை நாம் வேடிக்கை பார்க்க முடியாது.
இவ்வாறான நிலையில் ஒருவர் தமிழரசு கட்சிக்கு ஒரு ஆசனத்தை யாவது பெற வேண்டும் என்ற முயற்சியில் தமிழ் தேசியத்தை அழிக்கும் நபரை போனஸ் ஆசனத்தில் பாராளுமன்றம் செல்ல வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் வேறு யாரும் அல்ல அண்ணன் பாலசிங்கத்துக்கு ஒப்பானவர் என தனது நண்பரை அறிமுகம் செய்த நண்பரே பாராளுமன்றம் செல்வதற்கு மக்களிடம் வாக்கை கேட்கிறார்.
தமிழ் தேசியத்தை நேசிக்கும் மக்கள் பாராளுமன்ற தேர்தலில் தெளிவாக இருக்கிறார்கள். யாருக்கு வாக்களிக்க வேண்டும் யாரை நிராகரிக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார்கள்.
ஆனால் தமிழரசு கட்சியில் உள்ள ஒருவர் எப்படியாவது தான் தோற்றாலும் பரவாயில்லை தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு தமிழ் தேசியத்தை விலை பேசும் ஒருவரை போனஸ் ஆசனத்தில் பாராளுமன்றம் செல்ல வைப்பதற்கு படாத பாடுபடுகிறார்.
ஆகவே இம்முறை பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ் தேசியம் சார்ந்தவர்களை பாராளுமன்றம் அனுப்புவதன் மூலம் எமது அபிலாசைகளை ஒரே குரலில் ஒலிக்கச் செய்ய முடியும் என்றார்.