புதிய சர்ச்சை?; பிரதமரின் தீர்மானத்தை நிராகரித்தாரா ஜனாதிபதி ?
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) புதிய தலைவர் நியமனம் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையில் தெளிவான வேறுபாடு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், முன்னாள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவை, தொடர்ந்தும் அந்த பதவியில் வைத்திருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், ராஜினாமா செய்வதற்கு முன்னர், இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக தென் கொரியாவுக்கு சென்றிருந்தார்.அங்கு அவர் இலங்கையில் உயர்கல்விக்கு உதவுவதற்காக கொரிய அரசாங்கத்திடமிருந்து மானியத்தைப் பெற்றிருந்தார். இலங்கை திரும்பியதும், பிரதமரைச் சந்தித்து, நாட்டின் உயர்கல்வித் துறைக்கான தனது எதிர்காலத் திட்டங்களை தெளிவுபடுத்தியிருந்தார். எனினும், மானியங்கள் ஆணைக்குழுவுக்குள் சில கீழ்மட்ட தொழிற்சங்கங்கள், முன்னாள் தலைவரால் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்களை எதிர்த்ததாக ‘டெய்லி மிரர்’ அறிகிறது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த முறையால் பயனடைந்த இந்த தொழிற்சங்கங்கள், தங்களின் பலன்கள் பாதிக்கப்படுவதாக அதிருப்தி தெரிவித்தனர்.
திடீர் திருப்பமாக, முன்னாள் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க உடனடியாக ராஜினாமா செய்வதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்தது. இருப்பினும் அவர் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் தெளிவாக இல்லை.
பேராசிரியர் சம்பத் தனது பதவியில் நீடிக்கலாம் என பிரதமர் அமரசூரிய கூறிய ஒரு நாளின் பின்னர், ஜனாதிபதி அலுவலகம் பேராசிரியர் சம்பத்தை, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியை இராஜினாமா செய்யுமாறு கோரியுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பதவி விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத்தை தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்தும் பலனில்லை என ‘டெய்லி மிரர்’ தெரிவித்தது.
ஒக்டோபர் 18 ஆம் திகதி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க பதவி விலகியதை அடுத்து, சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன நியமிக்கப்பட்டார்.