தமிழ்த் தேசிய கொள்கை ஒன்றென்றால் தமிழ் கட்சிகள் ஏன் பிரிந்து நிற்கின்றன?; கஜேந்திரகுமாரிடம் கேட்ட அமெரிக்க தூதுவர்
தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் ஏன் பிரிந்து நின்று செயற்படுகின்றன என இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர் ஜூலி சங் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருக்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்,நேற்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் மற்றும் அக்கட்சியின் பொது செயலாளர் கஜேந்திரன் ஆகியோரை சந்தித்தவேளையிலேயே மேற்படி வினாவை தொடுத்திருக்கிறார்.
இந்த சந்திப்பு தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவிக்கையில்;
ஏன் தமிழ்த் தரப்புகள் பிரிந்து நிற்கின்றன என்ற கேள்வியை தூதுவர் எழுப்பியிருந்தார்.எங்களைப்பொறுத்தவரை 13 ஆவது திருத்தம் என்ற விடயத்தினால் தான் நாங்கள் கூட்டமைப்பிலிருந்து பிரியவேண்டிய தேவை ஏற்பட்டது.அந்த விடயத்தில் நாங்கள் தொடர்ச்சியாக இறுக்கமாக இருந்துவருகிறோம்.ஏனைய தரப்புகள் ஏன் பிரிந்து நிற்கிறார்கள் என்பது எங்களுக்கும் விளங்கவில்லை.ஏனெனில் அவர்களுக்கிடையில் கொள்கையளவில் எந்த வேறுபாடுகளும் இல்லை. ஆகவே ஏனைய தரப்பினர் ஏன் பிரிந்து நிற்கிறார்கள் என்பதை அவர்களிடம் தான் கேட்கவேண்டுமென நான் தெளிவாக அவரிடம் எடுத்துக் கூறினேன்.
மேலும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் தெற்கில் ஏற்பட்ட மாற்றத்தைப் போல் வடக்கு – கிழக்கு மாகாணங்களிலும் பொது தேர்தலில் ஒரு மாற்றம் ஏற்படும்.அதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் கணிசமாக தன்னுடைய பலத்தை முன்னேற்றும். அந்த அடிப்படையில்,அந்த மாற்றம் வடக்கு-கிழக்கில் ஏற்படும்பொழுது தேசிய நிலைப்பாடு சம்பந்தமான ஒரு உறுதியான மனோநிலையாகவே அந்த மாற்றத்தை சர்வதேசமும் இலங்கை அரசும் எடுக்கவேண்டும் என வலியுறுத்தியிருந்தோம்.
குறிப்பாக ஒற்றையாட்சியின் கீழ் இருக்கக்கூடிய எந்தவொரு தீர்வையும் நாங்கள் ஏற்கவில்லை.தமிழ் மக்கள் அதனை நிராகரித்துவிட்டார்கள். குறைந்தபட்சம் சம்ஷடி அடிப்படையில் தமிழ் தேசம் அங்கீகரிக்கப்படுகின்ற தீர்வை மாத்திரம் தான் தமிழ் மக்கள் விரும்புகிறார்கள் என்பதை அந்த மாற்றம் காட்டும் என்பதையும் நாங்கள் எடுத்துக்கூறியிருக்கிறோம்.
அமெரிக்காவின் அரசியலமைப்பே சமஷ்டி ஆட்சி முறைமைல் இருப்பதனால், தொடர்ந்தும் ஒற்றையாட்சிக்குள் இருக்கின்ற 13 ஆவது திருத்தத்தை பற்றி கதைப்பதை தவிர்த்துவிட்டு, மக்களுடைய ஆணைக்கு மதிப்பளித்து தெற்கில் சமஷ்டி தொடர்பாக இருக்கக்கூடிய தெளிவில்லா தன்மையை நீக்குவதற்கு அங்கு (தெற்கில்)இருக்கக்கூடிய ஆய்வு மையங்கள், சிவில் சமூக உறுப்பினர்கள், அரசியல்வாதிகளுக்கு கூடுதலாக சமஷ்டி பற்றிய அறிவை வளர்ப்பதற்கு தேவையான செயற்பாடுகளை அதிகரிப்பதற்கு தேவையான உதவிகளை செய்யுமாறும் இதன்போது தூதுவரிடம் வலியுறுத்தியிருந்தோம்.
அதேபோன்று பொறுப்புக்கூறல் விடயத்திலும் சர்வதேச குற்றவியல் விசாரணையூடாகத்தான் அதற்கு தீர்வை காணமுடியும் என்பது தொடர்பிலும் வலியுறுத்தியிருந்தோம்.ஆகவே எதிர்வரும் தேர்தல் முடிவுகளை வைத்துக்கொண்டாவது அமெரிக்கா போன்ற நாடுகளுடைய நிலைப்பாட்டில் மாற்றம் வரவேண்டுமெனவும் இதன்போது வலியுறுத்தியிருந்தோம் என்றார்.