திட்டங்கள் அற்ற கடன்களை மீளச் செலுத்தும் புதிய அரசாங்கம்; குற்றச்சாட்டுக்களுக்கு பேராசிரியர் வழங்கும் பதில்! நடந்தது என்ன?
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் புதிய கடன்கள் எதனையும் பெறவில்லை. ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த மற்றும் பெறப்பட்டிருந்த கடன்கள் தொடர்பாக மாத்திரமே உரையாடல்களை நடத்தி வருகின்றது. இப் பின்னணியில் புதிய அரசாங்கம் கடன்களைப் பெற்றதாகவும் மக்களுக்கு எந்தவொரு நிவாரணமும் கிடைக்கவில்லையெனவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளமைக்கு பேராசிரியர் ஒருவர் வழங்கிய பதில், மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதாக அமைகின்றது.
அதாவது மக்கள் அநுரவுக்கு வழங்கிய வாக்குகள் வீண்போகவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அந்தப் பேராசிரியர் விளக்கமளித்திருக்கிறார்.
குறிப்பாக “இலங்கை அரசு” என்ற கட்டமைப்பையும் அரசின் கீழ் வாழும் மக்களையும் நோக்கிய எந்தவொரு கடன்களும் மற்றும் பொருளாதாரத் திட்டங்களும் அமையுமே தவிர அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் சொந்த நலன்கள் அடிப்படையில் அமைந்தது அல்ல என்ற தொனியிலும், அவ்வாறான கடன்கள் எந்தவொரு திட்டங்களும் இன்றிப் பெறப்பட்டது என்ற தகவல்களும் அவருடைய விளக்கத்தின் ஊடாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.
எந்தவொரு மீளசெலுத்தும் திட்டமும் இல்லாது கடந்த அரசாங்கம் உள்நாட்டு சந்தையில் இருந்து மாதமொன்றுக்கு 800 பில்லியன் ரூபா கடன் பெற்றதாக தெரிவித்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரள, இக் கடன்களை மீளசெலுத்தவே தற்போதைய அரசாங்கம் கடன் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதென்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அநுரவின் அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து பாரியளவிலான கடன்களை பெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போதே பேராசிரியர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
அந்த விளக்கத்தில் பேராசிரியர் மேலும் கூறியிருப்பதாவது,
“முன்னர் இருந்த அரசாங்கத்திடம் நிதியை உரிய முறையில் செலவிடுவதற்கான பொருத்தமான திட்டங்கள் எதுவும் இருந்திருக்கவில்லை. ஆகவே திட்டங்கள் எதுவுமின்றி
திறைசேரிப் பத்திரம் மற்றும் பிணைமுறி மூலம் திரட்டப்பட்ட கடனை தற்போதைய அரசாங்கம் செலுத்தி வருகிறது.குறிப்பாக திறைசேரி பத்திரம் மற்றும் பிணைமுறி அடுத்த வருடம் முதிர்ச்சியடைவதற்கு முன்னர் கடனை மீள செலுத்த அரசாங்கம் 4,859 பில்லியன் ரூபாவை கடனாக பெற வேண்டியிருக்கும்.
சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட 17 பில்லியன் அமெரிக்க டொலர்களில் சுமார் 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கிடையில் பெறப்பட்டன. இது குறித்த காலப் பகுதியில் மொத்த வெளிநாட்டுக் கடன்களில் சுமார் 70 சதவீதம் ஆகும். ஃபிட்ச் (Fitch) போன்ற நிறுவனங்களால் இலங்கையின் கடன் தரமதிப்பீடு குறைக்கப்பட்டதால், நாடு வெளிநாட்டுச் சந்தைகளில் இருந்து கடன் பெறும் திறனை இழந்துள்ளது.
வெளிநாட்டு கடன்கள் குறைந்துள்ள போதிலும், இலங்கை இன்னும் இருதரப்பு மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து கடன்களை பெறுகிறது. உள்நாட்டில், அரசாங்கம் தனது நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒவ்வொரு வாரமும் திறைசேரி பத்திரம் மற்றும் பிணைமுறி மூலம் மூலம் நிதி திரட்டுகிறது.
அரசாங்கம் திறைசேரி பத்திரம் மூலம் பெற்ற 3,774 பில்லியனை ரூபா கடன்களை இந்த வருடம் நவம்பர் மாதத்திலிருந்து அடுத்த வருடம் நவம்பர் மாதத்திற்குள் மீள செலுத்த வேண்டும் என்பதுடன் பிணைமுறியினூடாக பெற்ற 13,237 பில்லியன் ரூபாவை 2045 ஆம் ஆண்டிற்குள் செலுத்த வேண்டும்.
1,125 பில்லியன் ரூபா பிணைமுறிகள் அடுத்த வருடம் முதிர்ச்சி அடையும். மொத்தமாக 4,859 பில்லியன் ரூபா இந்த வருடம் நவம்பர் மாதத்திலிருந்து அடுத்த வருடம் நவம்பர் இடையே முதிர்ச்சியடையும்.
உள்ளூர் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற இந்தக் கடன்களைத் தவிர்க்க முடியாது. அவற்றைத் திருப்பிச் செலுத்தத் தவறினால் வங்கி அமைப்புகள் நெருக்கடிக்குள் தள்ளப்படும்.
எனவே, முதிர்ச்சியடையும் கடன்களைத் தீர்ப்பதற்காக ஒவ்வொரு வாரமும் சந்தையில் இருந்து அரசாங்கம் கடன் பெறும் நிலைமை தொடரும். கடந்த அரசாங்கங்கள் கடன் சுமையைக் குறைக்க நீண்ட காலத் திட்டம் எதுவுமின்றி கடனைத் திருப்பிச் செலுத்த கடன் பெற்றுள்ளது. தற்போதைய அரசாங்கம் இந்தக் கடன்களை மீள செலுத்த சிறந்த உத்தியை கையாள வேண்டும்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒகஸ்ட் மாதம் வரை உள்நாட்டு சந்தையில் இருந்து மாதமொன்றிற்கு சுமார் 800 பில்லியன் ரூபா கடன் பெறப்பட்டுள்ளது. கடனை மீள செலுத்துவதற்காக அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் சுமார் 400 பில்லியன் ரூபாவை பெற வேண்டும்” என்றார் பேராசிரியர்.
அதேவேளை கடன் பெறுவதை படிப்படியாக குறைக்கும் திட்டத்தை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை பேராசிரியர் அத்துகோரள வலியுறுத்தினார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், நிலையான கடன் முகாமைத்துவத்தை உறுதி செய்வதற்காக, மாதாந்த உள்நாட்டுக் கடன்களை சுமார் 200 முதல் 250 பில்லியன் ரூபாவாக குறைப்பதை அரசாங்கம் இலக்காகக் கொள்ளவதன் மூலம் அத்தகைய திட்டம் எதிர்கால கடன் நெருக்கடிகளைத் தவிர்க்க உதவும்.
கடந்த அரசாங்கங்கள் கடனாகப் பெற்ற நிதியை வீண்விரயம் செய்ததை சுட்டிக்காட்டிய பேராசிரியர், அநுர அரசாங்கத்தின் கீழ் தேவையற்ற செலவுகள் குறைவதற்கான சாத்தியங்கள் தென்படுவதாகவும் மதிப்பிட்டுள்ளார்.
பிரதான எதிர்க்கட்சி முன்வைத்த குற்றச்சாட்டு
தற்போதைய அரசாங்கம் கடந்த 02 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையிலான 13 நாட்களில் 419 பில்லியன் ரூபா திறைசேறி பத்திரம் மற்றும் பிணைமுறி கடன்களை பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன குற்றம் சுமத்தியிருந்தார்.
விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இந்த அறிக்கையில் அவர் மேலும் வலியுறுத்தியிருந்ததாவது,
“இம்மாதம் 02 ஆம் திகதி 142.2 பில்லியன் ரூபாவும் 09 ஆம் திகதி 85 பில்லியன் ரூபாவும் 11 ஆம் திகதி 95 பில்லியன் ரூபாவும் 15 ஆம் திகதி 97 பில்லியன் ரூபாவும் அரசாங்கம் கடன் பெற்றுள்ளது.
எல்லையற்ற கடன்களை அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ள போதிலும், நாட்டு மக்களுக்கு நிவாரணம் எதுவும் கிடைக்கவில்லை.
கடந்த சில நாட்களாக அரசாங்கம் ஒரு நாளைக்கு 32.23 பில்லியன் ரூபா வீதமும் ஒரு மணித்தியாலத்திற்கு 1.34 பில்லியன் ரூபா படியும் கடன் பெற்றுள்ளது.
இந்த நிதியைப் பயன்படுத்தி எவ்வாறான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்” எனவும் ரோஹினி கவிரத்ன குறித்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டியது என்ன?
ஆகவே நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள இச் சந்தர்ப்பத்தில்,எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள் பற்றியும் குறிப்பாக இலங்கையின் பொருளாதார ரீதியான செயல் முறைகள் தொடர்பான உண்மைகள் தொடர்பாகவும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
பொருளாதார நிமைகள் மற்றும் பெறப்பட்ட கடன்கள் தொடர்பாக பொருளியல் நிபுணர்கள், பொருளியல் பேராசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத்தீவின் பொருளாதார நெருக்கடிக்கும் கடன் சுமைகளுக்கும் யார் காரணம் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
இங்கு பேரசிரியர் வசந்த அத்துகோரள சுட்டிக்காட்டி விடயங்கள் அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தை புகழ்வதாகவோ அல்ல ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை குறை சொல்வதோ அல்ல. மாறாக பொருளாதார ரீதியில் உரிய திட்டங்களை முன்வைக்காமல் பெறப்பட்ட கடன்களால் மக்களுக்கு ஏற்பட்ட பொருளாதார சுமை மற்றும் நெருக்கடிகளை தவிர்ப்பதற்கான வழிகாட்டுதலாகவே அமைந்துள்ளன.
ஆகவே நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் ஒவ்வொரு பிரஜைகளும் பொருளாதாரச் சுமைகளுக்குக் காரணமாக அமைந்த அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகள் பற்றிய உண்மைத் தன்மைகளை அறிந்துகொள்ளத் தலைப்பட வேண்டும்.