இலங்கையில் அதானி குழுமத்தின் முதலீடுகள் சாத்தியமா?: தீவிர பரிசீலனையில் அரசாங்கம்
பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்துள்ள இந்திய கோடீஸ்வரரான கௌதம் அதானியின் இலங்கை முதலீடு குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
இலங்கையில் அதானியின் தற்போதைய திட்டங்களை அரசாங்கம் மீளாய்வு செய்து வருகிறது.
அமைச்சரவைக் கூட்டத்தில் அதானியின் திட்டங்கள் தொடர்பில் எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.
அரசாங்கம் இது குறித்து ஆராய்ந்து வருகிறது.
மேலதிக மதிப்பீட்டிற்காக தொடர்புடைய அமைச்சுக்களிடமிருந்து அறிக்கைகள் கோரப்பட்டுள்ளன” என்றார்.
அதானி குழுமத்திற்குச் சொந்தமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்திற்கு பில்லியன் டொலர் மதிப்புள்ள ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரச அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டொலர்களுக்கு மேல் இலஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக நியூயோர்க் சமஸ்டி நீதிமன்றத்தில் (Federal Court) கடந்த புதன்கிழமை (20.11.2024) அமெரிக்கா வழக்கு தாக்கல் செய்தது.
இந்த குற்றச்சாட்டை அதானி குழுமம் மறுத்த போதிலும் அந்த நிறுவனத்தின் பங்குகள் சரிவடைந்தது. அத்துடன் கென்யாவில் அதானி நிறுவனம் முன்னெடுக்க இருந்த விமான நிலைய விரிவாக்கம் மற்றும் மின்சார திட்டம் இரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் மேலும் பல நாடுகள் அதானியின் முதலீட்டு திட்டங்களை இரத்து செய்யகூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில் மன்னாரிலும், பூநகரியிலும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டமொன்றையும், மின் விநியோகக் கட்டமைப்பொன்றையும் உருவாக்கும் பணியை இந்தியாவின் அதானி குழுமம் முன்னெடுத்து வருகின்றது.ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம்
இந்தியாவின் அதானி குழுமத்துடனான கற்றாலை மின் உற்பத்தி ஒப்பந்தத்தை மீளாய்வு செய்யவுள்ளதாக முன்னதாகவே தெரிவித்தது.புதிய குற்றச்சாட்டுக்கள் அவற்றை மேலும் மெருகூட்டும் வகையில் அமைந்திருக்கிறது.
மன்னாரிலும், பூநகரியிலும் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டங்களுக்காக அதானி குழுமம் 442 மில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது. இந்த முதலீடானது இலங்கையில் அதானி குழுமத்தின் இரண்டு பெரிய திட்டங்களில் ஒன்றாகும்.
இதேவேளை, இலங்கையில் அதானி குழுமத்தின் ஆதரவுடன் செயல்படும் கொழும்பு, துறைமுக அபிவிருத்திக்கு 500 மில்லியன் டொலருக்கும் அதிகமான கடனுதவி வழங்க ஒப்புக்கொண்ட அமெரிக்க நிறுவனம்,குறித்த திட்டத்தில் உரிய கவனம் செலுத்தி வருவதாகக் கூறியுள்ளது.