நாமல் ராஜபக்சவை கைது செய்ய வேண்டும்: பொதுமக்கள் சொத்துக்கள் கொள்ளையடித்து பெருமை பேசுகிறார்கள்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்சவை கைது செய்ய வேண்டும் என “ப்ளஸ் வன்“ (Plus One) என்ற அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நாட்டு மக்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்ததன் நோக்கம் ராஜபக்ச குடும்பத்தினர் கொள்ளையடித்த பணத்தை மீள பெற்றுக்கொள்வதே என அவ் அமைப்பின் அழைப்பாளர் வின்சந்த யசஸ்மினி சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட மக்கள் செல்வத்தை முடியுமானால் கண்டுபிடிக்குமாறு நாமல் ராஜபக்ச ‘x’ தளத்தில் பதிவுகளை இட்டு சவால்களை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் “ப்ளஸ் வன்“ அமைப்பின் அழைப்பாளர் வின்சந்த யசஸ்மினி ஜனாதிபதி அலுவலகத்தில் மனு ஒன்றை கையளித்துள்ளார்.
பொதுச் சொத்தை கொள்ளையடித்தவர்கள் இவ்வாறு பெருமை பேசுவதை பார்க்க விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாமல் ராஜபக்சவை கைது செய்து கொள்ளையடித்த மக்கள் சொத்தை மீள பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிவில் சமூக செயற்பாட்டு அமைப்பான “ப்ளஸ் வன்“ இலங்கைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் ஊழ்மோசடி மற்றும் அதிகாரத் துஸ்பிரயோகங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.
இதேவேளை, 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட கடனுக்கு சமப்பட்ட தொகையை கொள்ளையடிப்பதற்கு நிஸ்ஸங்க சேனாதிபதியின் அவன்ட்கார்ட் நிறுவனத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் அண்மையில் பல வியடங்கள் வெளியாகியிருந்தன.
மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது வழங்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பில் தகவல்கள் வெளியானதையடுத்து நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு 9 துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருந்தன.
இவ்வாறு துப்பாக்கிகள் வழங்கப்பட்டமைக்கான காரணங்களை ஆராய்ந்தபோது மேலும் பல வரப்பிரசாதங்கள், கொடுக்கல் வாங்கல்கள் பற்றிய விபரங்களும் வெளிவந்திருந்தன.
இப் பின்னணியில், சர்வதேச கடற்பரப்பில் பயணிக்கும் வர்த்தகக் கப்பல்கள்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இலங்கைக் கடற்படையினருக்கு கிடைத்து வந்த ஆயிரக்கணக்கான மில்லியன் டொலர் வருமானம் கோட்டாபய ராஜபக்சவின் நண்பரான நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு வழங்கப்பட்டது.
இதனால் நாடு இழந்த வருமானம் 2015-2019 ஆண்டுகளில் சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் மூலம் பெற்ற கடன் தொகைக்கு சமமானது என தெரியவந்துள்ளது.
2015-2019 க்கு இடையில் இறையாண்மைப் பத்திரங்களிலிருந்து 12,050 மில்லியன் டொலர்கள் எரியும் வட்டிக் கடன், நாட்டை திவால் நிலைக்குள் தள்ளுவதற்கு ஒரு முக்கிய காரணியாக காணப்படுகிறது.
இதேவேளை, இலங்கை கடற்படையினரிடம் இருந்து ஏறக்குறைய 11,500 மில்லியன் டொலர்களை பெற்றுக் கொள்வதற்கு கொமாண்டர் நிஸ்ஸங்கவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் தெரியவந்துள்ளது.
அவன்ட்கார்ட் கடத்தல் தொடர்பில் வெளியான பிரத்தியேக தகவல்களை வெளிப்படுத்தும் காணொளி ஒன்றை ஐரிஎன் எனப்படும் அரச ஊடக நிறுவனமான சுயாதீன தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது.