எந்நேரத்திலும் நான் கைது செய்யப்படலாம்
நான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்றும், அரச இரகசிய பாதுகாப்பு சட்டத்தில் என்னை கைது செய்வதற்காக அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் பிவித்துறு ஹெல உறுமய தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
விசேட செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து அவர் இதனை கூறியுள்ளார்.
மக்களுக்கு உண்மைகளை கூற முயற்சிக்கும் போது அதற்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. நான் கூறிய விடயங்கள் தொடர்பில் அரச தரப்பினர் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முயற்சிக்கின்றனர். ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையை வெளியிட வேண்டும் என்று தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவிக்கு வர முன்னர் கூறிவந்தவர்.
ஆனால் இப்போது அதனை வெளியிடாது இருக்கின்றார். நான் வீட்டுக்கு இப்படியே போவேனோ அல்லது கைது செய்யப்படுவேனா என்றும் தெரியவில்லை. ஆனால் திங்கட்கிழமை முற்பகல் 10 மணி வரையில் அவருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் நான் அறிக்கையை வெளியிட நேரிடும்
என்னை அச்சுறுத்த முடியாது. அரச இரகசிய பாதுகாப்பு சட்டத்தை நான் நன்கு ஆராய்ந்துள்ளேன். நான் எதற்கும் பயப்படவில்லை. அரசியலில் எதற்கும் தயாராக இருக்கின்றேன் என்றார்.