சகலருக்கும் சம உரிமை! அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்! பிமல் ரத்நாயக்க உறுதி
‘தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு தேவையில்லை என்று ரில்வின் சில்வா தெரிவித்தமை தொடர்பாக நான் கேள்விப்படவில்லை. அவ்வாறான ஒரு கருத்தை ரில்வின் சில்வா சொல்லியிருப்பார் என்று நான் நினைக்கவில்லை. இலங்கையில் அனைவருக்கும் சமமான உரிமை உண்டு என்பதை ஏற்றுக்கொள்கின்றோம் என தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில்று நடைபெற்றது.
அதன்பின்னர் அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு தேவையில்லை என்று ரில்வின் சில்வா தெரிவித்தமை தொடர்பாக நான் கேள்விப்படவில்லை. அவ்வாறான ஒரு கருத்தை ரில்வின் சில்வா சொல்லியிருப்பார் என்று நான் நினைக்கவில்லை.
உண்மையில் நாம் ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்களுக்கு அரசியல், கலாசார அசாதாரணங்கள் இந்த நாட்டில் ஏற்பட்டமையை ஏற்றுக்கொள்கின்றோம்.
இலங்கையில் அனைவருக்கும் சமமான உரிமை உண்டு என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அது எமது கொள்கைகளிலும் ஒன்று. அடுத்து அனைவருக்குமான நீதி சமமானதாக இருக்க வேண்டும். புத்தகத்தில் மாத்திரம் அல்ல செயற்பாட்டிலும் அது இருக்க வேண்டும்.
தமிழ், முஸ்லிம் மக்களின் கலாசார உரிமைகள் ஒழுங்காகப் பாதுகாக்கப்படவில்லை அதை ஏற்றுக்கொள்கின்றோம். அதனைப் பாதுகாப்பதற்காகவே 13 ஆவது திருத்தம் இந்தியாவால் கொண்டு வரப்பட்டிருந்தாலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால், தமிழ், முஸ்லிம் மக்கள் நினைக்கின்றார்கள் அந்தச் சீர்சிருத்தம் மாத்திரம் இருந்தால் போதும் என்று.
ஆனால், நாங்கள் புதிய அரசியல் யாப்பைக் கொண்டு வருவோம். அதனூடாக அனைவரது உரிமைகளும் பாதுகாக்கப்படும். அதுவரைக்கும் மாகாண சபை முறைமையைப் பாதுகாப்போம். மாகாண சபைத் தேர்தலும் நடத்தப்படும்.
அத்துடன் காணாமல் ஆக்கப்பட்ட லலித், குகன் மற்றும் திருகோணமலையில் காணாமல் ஆக்கப்பட்ட மாணவர்கள் தொடர்பாக தற்போதே விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம்.
தராகி சிவராம் கொலை தொடர்பான விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்து 3 வாரங்களே ஆகுகின்றன. எனினும் இதற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம். அத்துடன் அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி ஏற்கனவே தெரிவித்துள்ளார். – என்றார்.