அமைச்சரவை இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைக்கப்படவில்லை
அமைச்சுக்களை கையாள்வதற்கான தகுதியானவர்களே தற்போது அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போதைய அமைச்சரவை இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைக்கப்படவில்லை எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அண்மைய அமைச்சரவை நியமனங்களில் முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்ட அவர், நாங்கள் இனம், மதம் அல்லது ஜாதி அடிப்படையில் அமைச்சரவையை அமைக்கவில்லை. அமைச்சர்கள் இலாகாக்களை கையாள்வதில் மிகவும் திறமையானவர்களை நாங்கள் தேர்ந்தெடுத்தோம் என குறிப்பிட்டுள்ளார்.
மேல் மாகாண ஆளுநராக முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பிரதி சபாநாயகர், பிரதி அமைச்சர் போன்ற பதவிகளை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வகிப்பதாகவும் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேசிய பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
குறிப்பிட்ட இனங்கள், மதங்கள் அல்லது சாதிகள் அன்றி ஒட்டுமொத்த இலங்கை தேசத்துக்கும் சேவை செய்வதிலேயே நாம் கவனம் செலுத்துவதாகவும் தற்போதைய நிலைமையை இனம் அல்லது மதத்தின் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் என்று அவர் முஸ்லிம் சமூகத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.