இலங்கை

எதுவும் இல்லையென்று பேராசிரியரே முக்கிய ஆதாரங்களைத் தந்துள்ளார்; சர்வதேச நீதியை எட்ட இந்த அறிக்கையே மிகப்பெரிய ஆதாரம்

சர்வதேச நீதியை நோக்கி போவதற்கு, தொல்லியலாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவவின், செம்மணி குறித்த அறிக்கை மிகப்பெரிய ஒரு ஆதாரமாக அவர்களே தந்திருக்கிறார்கள். இதில் உடனடியாக சர்வதேச நாடுகள் தலையிட்டு இதற்கான சரியான முடிவை எட்டுவதற்கு உதவ வேண்டும் என மக்கள் செயல் அமைப்பின் பிரதிநிதி வைத்தியர் கற்கண்டு உதயசீலன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

“செம்மணி மனிதப் புதைகுழிக்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை என்று கூறுவதே, இங்கு மிகப்பெரிய ஆதாரமாக இருக்கிறது. ஒரு தேர்ந்த கொலைகாரனால் நிகழ்த்தப்படும் கொலைகளுக்கு எளிதில் ஆதாரங்கள் கிடைக்காது. அவசரத்தில் அல்லது புதிதாகக் குற்றம் செய்பவர்களே ஆதாரங்களைப் பலவற்றை விட்டுச் செல்வார்கள். இந்த வெளிப்படையான உண்மை இதற்குப் பின்னாலும் இருக்கிறது.

செம்மணி முகாம்களில் மக்கள் வெற்றுடலாக்கப்பட்டனர் (சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர்) என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. அப்படி இருந்தும், தொல்லியலாளர் ராஜ் சோமதேவ அதனைச் சமயம் சார்பானது அல்லது ஒரு மக்களின் சடங்கு ரீதியாக நிகழ்த்தப்பட்டது எனக் கூறிவிட்டுச் செல்கிறார்.

மிகவும் மிலேச்சத்தனமான ஒரு விஷயம் என்னவென்றால், அறிக்கையில் ‘சமாதி நிலையில்’ இருந்த என்புக் கூடுகள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பதாகும். அவை தியான நிலையில் அமர்ந்திருந்ததாக அவர் கூறி வைத்திருக்கிறார். ஆனால், அகழ்வாராய்ச்சியின் போது வெளிவந்த புகைப்படங்களும், அக்காலப்பகுதியில் பேசப்பட்ட விடயங்களும் எதை உணர்த்தின? பாதிக்கப்பட்டவர்களின் தாடை நொறுக்கப்பட்டிருக்கிறது; மண்டையோடு சிதைக்கப்பட்டிருக்கிறது; கைகள் பிணைத்துக் கட்டப்பட்டிருக்கின்றன. ஆனால், சொல்லப்பட்ட இந்த விடயங்களுக்கு இப்போது என்ன நடந்தது? அவை எதுவுமே அறிக்கையில் இல்லை. அவர் முற்றிலுமாக உண்மைகளை மூடிமறைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இதனைச் செய்கிறார்.

தடயவியல் தொல்லியல் (Forensic Archaeology) என்பது வேறு; தொல்பொருள் தொல்லியல் (Conventional Archaeology) என்பது வேறு. தடயவியல் தொல்லியல் என்பது தொல்லியலின் ஒரு விசேட பிரிவாகும். ராஜ் சோமதேவ ஒரு தொல்பொருள் தொல்லியலாளர் மட்டுமே. இலங்கையில் தடயவியல் தொல்லியலாளர்கள் இல்லை என்றால், வெளிநாட்டிலிருந்து வல்லுநர்களை அழைத்து வந்திருக்க வேண்டும். ஆனால், எங்கு மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டாலும் இவரே சென்று நிற்பது ஏன்?

இவர் தன்னுடைய ஊகத்தை முற்றிலுமாக மடைமாற்றி, ஒரு மிகப்பெரிய மனிதப்படுகொலை நிகழ்த்தப்பட்ட இடத்தில் நின்று கொண்டு இவ்வாறு பொறுப்பற்ற முறையில் கூறிவிட்டுச் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, அந்த அறிக்கையை ‘மக்கள் செயல் அமைப்பாக’ நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறோம்.

அடுத்ததாக, அங்கு தொற்றுநோய் பரவியதால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகக் கூறப்படும் கூற்றுக்கு எந்தவிதமான ஆதாரங்களையும் அவர் அறிக்கையில் இணைக்கவில்லை. அப்படியொரு பேரழிவு நோய் வந்திருந்தால், அதற்கான பதிவுகள் இருந்திருக்க வேண்டும். 1833-ஆம் ஆண்டிற்குப் பிறகான பிரித்தானியர் ஆட்சிக்கால அரசியலமைப்பு மாற்றங்களைத் தொடர்ந்து, நாம் ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட சரியான நிர்வாக முறைமைக்குள் வந்துவிட்டோம். ஆனால், எந்தவொரு வைத்தியசாலையிலும் எந்தவொரு இடத்திலும் இதற்கான எந்தப் பதிவுகளும் இல்லை.

அடுத்ததாக, என்புக் கூடுகள் எடுக்கப்பட்ட ஆழத்தைப் பார்த்தீர்களானால், கிட்டத்தட்ட 40 சென்டிமீட்டர் ஆழத்திலேயே என்புக் கூடுகள் எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி ஒரு ஈரநிலப் பகுதியாகும். ஈரநிலத்தில் 5 அடிக்குத் தோண்டினாலே நீர் வந்துவிடும். அதனால் நீர் வருவதற்கு முன்பே விரைவாகத் தோண்டி, உடல்களைப் புதைத்துள்ளார்கள்.

அந்த நில அமைப்பைச் சரியாக அவதானித்தால் தெரியும்; அப்போது இராணுவத்தினுடைய பாதுகாப்பு அரண் அதற்கு மேலாகவே அமைந்திருந்தது. புதைக்கப்பட்ட இடங்களுக்கு மேலேதான் அந்தப் பாதுகாப்பு அரண் இருந்திருக்க வேண்டும். இவ்வளவு சான்றுகள் இருக்கையில், அவர் உண்மைகளை மூடிமறைக்க முயல்கிறார்.

எனவே, புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை மீள ஆய்வு செய்ய வேண்டும். சர்வதேசமே இதற்கான சரியான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். கொசோவோவில் (Kosovo) இதுவே நடந்தது. உள்நாட்டு ஆய்வாளர்களால் உண்மைகள் மழுங்கடிக்கப்பட்ட நிலையில், சர்வதேச ஆய்வாளர்கள் வருகை தந்து மனிதப் புதைகுழிகளைச் சரியாக அடையாளம் கண்டார்கள்.

இங்கு இந்தக் குற்றங்களைச் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்; அதற்காகச் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

அடுத்து, என்பு மாதிரிகள் கார்பன்-14 பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளன. எங்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அவை புளோரிடாவுக்கு அனுப்பப்படலாம் என்றும், ஒரு மாதிரிக்கு 500 முதல் 600 டொலர்கள் வரை செலவாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும், அவை சாதாரண அஞ்சல்/கூரியர் சேவையில்தான் அனுப்பப்படவுள்ளன.

கண்டெடுக்கப்பட்ட 583 என்புக் கூடுகளில் இருந்து வெறும் 5 அல்லது 6 மாதிரிகளை மட்டுமே அவர்கள் அனுப்பவுள்ளார்கள். இது எந்தளவுக்கு உண்மையைக் கண்டறிய உதவும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பரிசோதனையை முற்றிலுமாகச் செய்ய வேண்டும் அல்லது மிக அதிக எண்ணிக்கையிலான மாதிரிகளைக் கார்பன் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

ஏனெனில், மிகக் குறைந்த மாதிரிகளை மட்டும் பரிசோதித்து, அதன் காலம் 1900 அல்லது 1910-ஆம் ஆண்டு எனக் காட்டுவார்களேயானால், மீதமுள பகுதிகளை அகழாமல் மூடிவிழா நடத்தி முழு விவகாரத்தையும் மூடிமறைத்து விடுவார்கள்.

முன்னாள் இராணுவச் சிப்பாய் சோமரத்ன ராஜபக்சவின் வாக்குமூலங்களின் அடிப்படையில், அங்குப் பல்வேறு மனிதப் புதைகுழிகள் இருந்தது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். அது நீதிமன்றத்தில் முறைப்படி அளிக்கப்பட்ட வாக்குமூலம்.

சோமரத்ன ராஜபக்ச அடையாளம் காட்டிய செம்மணி மட்டுமல்லாது, மணியந்தோட்டம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சர்வதேச நீதியை நோக்கிச் செல்வதற்கு, இலங்கை அரசே இந்தச் செம்மணி அறிக்கையின் மூலம் மிகப்பெரிய ஆதாரத்தை வழங்கியுள்ளது. இதில் சர்வதேச நாடுகள் உடனடியாகத் தலையிட்டு நியாயமான முடிவை எட்டுவதற்குக் கைகொடுக்க வேண்டும்” – என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *