செம்மணிப் புதைகுழியில்அகழ்வுப் பணி நடக்க வேண்டும்; புதைகுழிப் பரிசோதனையும் தொடர்ந்து செய்யப்பட வேண்டும்

தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கையில் குறிப்பிடத்தக்க இடைவெளியும் போதாமையும் உள்ளதாக தெரிவித்த காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளரும் சட்டத்தரணியுமான மீராக் ரஹீம், தனியான அறிக்கையை கொண்டு முடிவெடுக்காமல் அகழ்வு பணியை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றார்.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற செம்மணி மனித புதைகுழி பற்றிய கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த போதே காணாமல் போனோர் பற்றிய அலுவலக ஆணையாளரும் சட்டத்தரணியுமான மீராக் ரஹீம் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி மனித புதைகுழியில் இரண்டாவது அகழ்வுக் குழி மூடப்பட்டது தொடர்பான அவதானிப்பு இந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.பேராசிரியரின் குறித்த தனியான அறிக்கையை கொண்டு தீர்மானிக்க முடியாது. ஒரு தனித்த அறிக்கையின் மீது தங்கியிருந்து முடிவெடுக்கக் கூடாது. இந்த அகழ்வு பணி எல்லையை தீர்மானிக்கும் போது அகழ்வு இடம் பற்றி பூரண ஆய்வு செய்யப்பட வேண்டும்.
மயானத்தின் மதில் அமைக்க முன்னர் அது எவ்வாறு இது இருந்தது என்பதை நாம் பார்க்க வேண்டும். இதை ராஜ் சோமதேவா தான் செய்ய வேண்டும் என்று நான் சொல்லவில்லை. பொலிஸாரோ குற்றப் புலனாய்வுத்
திணைக்களத்தினரோ அதனை செய்ய முடியும். அந்த ஆய்வை கொண்டே அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லலாம்.
இதுவரை அகழ்வு செய்யப்பட்ட பகுதிகள் மதிலுக்கு உள்ளே உள்ள பகுதி ஆகும் அந்த எல்லைக்குள்ளே ஆய்வு செய்யப்படாத பகுதிகளிலும் மனித என்பு கூடுகள் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அகழ்வு செய்த பகுதிக்கும் அகழ்வு செய்யாத பகுதிக்கும் ஒத்தத் தன்மை இருக்கிறதா இல்லையா என்பதை பார்க்க தொடர்ந்து அகழ்வு பணி நடக்க வேண்டும். குழி பரிசோதனை தொடர்ந்து செய்யப்பட வேண்டும் – என்றார்.
![]()