முச்சந்தி

வலி.வடக்கில் ஒரு பகுதி நிலம் இம்மாத இறுதிக்குள் விடுவிக்கப்படும் சாத்தியம்

2015 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை 3000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்டுள்ளன. தற்போதும் 2400 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் விடுவிக்கப்படவேண்டிய நிலையுள்ளது. அதில் ஒரு பகுதி நிலங்கள் இந்த மாத இறுதிக்குள் விடுவிக்கக்கூடிய ஔிக்கீற்றுக்கள் தென்படுவதாக வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

வலிகாமம் வடக்குப் பிரதேச சபைக்குட்பட்ட மயிலிட்டிப் பொதுநூலகத்தின் தேசிய வாசிப்பு மாத இறுதி நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்   யாழ்.குரும்பசிட்டிப் பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏனைய உள்ளூராட்சி மன்றங்களை விட எமது உள்ளூராட்சி மன்றம் விசேடமானது. குறிப்பாக வலிகாமம் வடக்கானது உரிமைப் போராட்டத்தால் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் மிகவும் அழிவடைந்த பிரதேசமாகக் காணப்படுகின்றது. எமது சபைக்குட்பட்டு நான்கு நூலகங்கள் காணப்படுகின்ற போதும் இன்றுவரை சொந்த இடத்திற்குத் திரும்பாத நூலகமாக மயிலிட்டி நூலகம் காணப்படுகின்றது.

இந்த நூலகக் காணியானது வயாவிளான் சந்திக்கு அண்மையிலே பலாலி வீதிக்கு மேற்குப் புறமாகக் காணப்படுகின்றது. காணியை விடுவிப்பதற்கான பல முயற்சிகளில் ஈடுபட்ட போதும் இதுவரை கைகூடவில்லை. விரைவில் வயாவிளான் சந்திக்கு அண்மையில் காணிகள் விடுவிக்கின்ற சிறப்பான செய்தி கிடைக்கின்ற நேரத்தில், வயாவிளான் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாலயம் சொந்த இடத்துக்குச் செல்லும் காலத்திலே மயிலிட்டி நூலகத்தையும் சொந்த இடத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

மக்களுடைய காணி மக்களுக்கு என்ற இந்த அரசின் செயற்பாட்டினூடாக வயாவிளானின் பலாலி வீதியின் கிழக்குப் பகுதியானது முழுமையாக விடுவிக்கப்படுவதற்கான சாத்தியம் சில தினங்களுக்கு முன் தென்படத் தொடங்கியுள்ளது.

2011 ஆம் ஆண்டு வலிகாமம் வடக்குப் பிரதேச சபையைப் பொறுப்பெடுத்த தருணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்துக்கு அப்பால் செல்ல முடியாத நிலை காணப்பட்டதுடன் மறுபுறம் வயாவிளான் மத்திய கல்லூரிக்கு அப்பால் செல்ல முடியாத நிலை காணப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *