ஒரு நாள் மாவீரர் தினத்தை எதிர்த்த ஜே.வி.பி இன்று ஒருவார நிகழ்வுகளுக்கு அனுமதி
கடந்த எமது ஆட்சியில் வடக்கு மக்களுக்கு மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு ஒரு தினத்துக்கு அனுமதி வழங்கியபோது அதற்கு எதிராக போராட்டம் மேற்கொண்டு, வடக்கில் பிரச்சினைகளை ஏற்படுத்தி வந்த ஜே .வி.பி தற்போது மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க ஒருவார காலம் அனுமதி வழங்கியுள்ளது . அதனை மறைப்பதற்காகவே புதையல்தோண்டும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதென ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள்எம்.பி.யான சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
கொழும்பிலு ள்ள புதிய ஜனநாயக முன்னணிஅலுவலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
வடக்கு,கிழக்கு மக்கள் ”மாவீரர்கள் தினம்” என குறிப்பிட்ட ஒரு நாளை அனுஷ்டித்து வருகின்றனர். அந்த நாளில் அவர்களின் மரணித்த உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு எந்த தடையும் நாட்டில் இருக்கவில்லை. எமது அரசாங்க காலத்திலும் கூட அதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் விடுதலைப் புலிகளை நினைவுகூரும் வகையில், அவர்களின் கொடி, இலச்சினைகளை காட்சிப்படுத்தி அந்த தினத்தை அனுஷ்டிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்து.
ஆனால் இந்த முறை வடக்கு,கிழக்கு மக்கள் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அரசாங்கம் ஒரு வாரம் அனுமதி வழங்கியுள்ளது அதனால் வடக்கில் பல்வேறு இடங்களில் கொடிகளை பறக்கவிட்டு பெருமெடுப்பில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .
கடந்த காலங்களில் எமது ஆட்சியில் வடக்கு மக்களுக்கு மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு ஒரு தினத்துக்கு அனுமதி வழங்கியபோது அதற்கு எதிராக போராட்டம் மேற்கொண்டு, வடக்கில் பிரச்சினைகளை ஏற்படுத்தி வந்த ஜே .வி.பி அதாவது தேசிய மக்கள் சக்தியினர் தற்போது இதற்கு ஒரு வாரம் அனுமதி வழங்கியுள்ளனர் . அதேநேரம் இந்த ஒருவாரகாலத்தை மறைப்பதற்காவே அரசாங்கம் புதையல் தோண்ட ஆரம்பித்திருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
ஏனெனில் அரசாங்கம் பல கோடி ரூபாவை செலவிட்டு, பொலிஸ் பாதுகாப்புடன் வியாங்கொடை பிரதேசத்தில் புதையல் தோண்டி வருகிறது. ஆனால் அரசாங்கத்துக்கு பாரிய கருங்கல் ஒன்றே தற்போது கிடைத்திருக்கிறது. இலங்கை வரலாற்றில் உத்தியோகபூர்வமாக அரச பாதுகாப்புடன் புதையல் தோண்டிய ஒரே அரசாங்கம் இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்தான் என்றார்.