சீன லைட்டர் இறக்குமதிக்கு தடை; தீப்பெட்டி உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு ஏற்பாடு
இந்தியாவின் தென் தமிழகத்திலுள்ள மக்களுக்கு தொழில் வாய்ப்பு அளிக்கும் முக்கிய ஆதாரமாக தீப்பெட்டி உற்பத்தி காணப்படுகிறது.
இந்நிலையில் சீனா போன்ற நாடுகளிலிருந்து மலிவான விலையில் ப்ளாஸ்டிக் லைட்டர்களை இறக்குமதி செய்வதன் காரணமாக இத் தீப்பெட்டி உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, உள்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தியை அதிகரித்து சீன பொருட்களின் பயன்பாட்டை கட்டுக்குள் கொண்டு வரும் இலக்குடன் பல்வகை லைட்டர் உதிரிபாகங்களின் இறக்குமதியை மத்திய அரசு தடை செய்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ப்ளாஸ்டிக் லைட்டர்களுக்கு தடை விதிக்கும்படி மத்திய அரசக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ரூபாய் 20 இற்கும் குறைவான விலையில் விற்கப்படும் அனைத்து லைட்டர்களின் இற்ககுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.
அதேபோல் இந்திய தரநிலை ஆணைக்குழுவின் முத்திரையில்லாத லைட்டர்களை இந்தியாவில் விற்பனை செய்ய முடியாது.
இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் லைட்டர் உதிரிபாகங்களின் இறக்குமதி 38 இலட்சம் டொலர். கடந்த ஆண்டு 48.6 இலட்சம் டொலராக இது இருந்தது. இந்த வர்த்தகத்தில் பெரும்பான்மையானது சீன இறக்குமதி ஆகும்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த வருடம் சீன இறக்குமதி 10,173 கோடி டொலராகவும் ஏற்றுமதி 1,165 கோடி டொலராகவும் இருந்தது.
அதன்படி கடந்த 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 4,400 கோடி டொலரிலிருந்து கடந்த வருடத்தில் 8500 கோடி டொலராக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.