வெளிநாடுகளில் உள்ள பழைய மாணவர் சங்கங்கள் அனுப்பும் நிதி லஞ்சம், ஊழலை வளர்த்துவிடுகின்றது!”
“யாழ் பாடசாலைகள் சில நேரடியாக வெளிநாடுகளிலிருந்து பழைய மாணவர் சங்கங்களுடாக நிதியைப் பெறுகிறார்கள். ஆனால் அவை எவ்வாறு செலவிடப்படுகின்றது என்ற பொறுப்புக் கூறல் எதுவும் அங்கில்லை. இது ஊழலுக்கே இட்டுச் செல்லும்” என ஆளுநர் நா வேதநாயகம், ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
யாழில் உள்ள சில முன்னணிப் பாடசாலைகள் சட்டவிரோதமாக அன்பளிப்பு என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் லட்சக் கணக்கிலும் அன்பளிப்புக் கோருகின்றனர். பாடசாலைகளில் நடைபெறும் எந்தவொரு நிகழ்வுக்கும் மாணவர்களிடமோ ஆசிரியர்களிடமோ பணம் கோரக்கூடாது என அளுநர் அங்கு அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் துறைசார் மீளாய்வுக் கூட்டத்திலேயே இக்கருத்தை ஆளுநர் வெளியிட்டார்.
“வடக்கில் 12 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்கின்றார். ஆனால் நாட்டில் சராசரியாக 17 மாணவர்களுக்கே ஒரு ஆசிரியர்” எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம பற்றிக் டிறன்ஞன் வடக்கில் பாட ரீதியாகவே ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாகக் குறிப்பிட்டார்.
யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடப் பட்டதாரி ஆசிரியர்களால் கலைப்பாடங்களுக்கான ஆசிரியர்கள் தேவைக்கதிகமாக குவிக்கப்பட்டுள்ளது.