கொரோனா ஊரடங்கால்… நிலவின் வெப்பநிலை சரிவு
சீனாவின் உகான் பகுதியில் 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலக நாடுகள் முழுவதும் பரவியது.
இந்த பெருந்தொற்று பரவலால், திணறி போன நாடுகள் அதனை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தன.கொரோனா காலத்தில் பரவலை தடுக்க, உலக அளவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
ரெயில், பஸ், விமானம் உள்ளிட்ட வாகன போக்குவரத்து முடங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. உலகம் முழுவதும் 2 ஆண்டுகளுக்கும் மேல் பல கொரோனா அலைகள் பரவி, பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றது.
இந்த தொற்றை கட்டுப்படுத்த பின்னர் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியில் நாடுகள் ஈடுபட்டன.இதனால், தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு நாடுகள் திரும்பின. கொரோனா தொற்றால் பூமி முழுவதும் பாதிப்பு ஏற்பட்டது மட்டுமின்றி, அது நிலவிலும் கூட தாக்கம் ஏற்படுத்தி உள்ளது ஆய்வு ஒன்றில் இருந்து தெரிய வந்துள்ளது. உலகளாவிய ஊரடங்கு உத்தரவால், நிலவின் மேற்பரப்பு வெப்பநிலை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து போயிருந்தது என எதிர்பாராத ஆய்வு முடிவு ஒன்றை இந்திய ஆய்வாளர்கள் வெளியிட்டு உள்ளனர்.
ஊரடங்கின்போது, பூமியில் மனிதர்களின் செயல்பாடுகள் குறைந்தன. ஊரடங்கால் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் மற்றும் தூசிகள் அதிக அளவில் குறைந்து, பூமியின் கதிரியக்க வெளியேற்றத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என தெரிகிறது. இந்த ஊரடங்கால், நிலவின் வெப்பநிலை குறைந்து போயிருப்பது தெரிய வந்துள்ளது.
நாசாவின் எல்.ஆர்.ஓ. எனப்படும் விண்கலம் பல ஆண்டுகளாக நிலவை சுற்றி வருகிறது. நிலவின் மேல்புறம் மற்றும் சுற்றுச்சூழலை பற்றி ஆய்வும் செய்து வருகிறது. இந்நிலையில், அதனிடம் இருந்து கிடைத்த தகவல்களை இந்திய விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். ஆய்வாளர்கள் துர்கா பிரசாத் மற்றும் ஆம்பிளி ஆகியோர் 2017 முதல் 2023 வரையிலான ஆண்டுகளில் நிலவின் 6 வெவ்வேறு பகுதிகளில் வெப்பநிலை பற்றிய ஆய்வை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்படி, நிலவில் அதிக குளிரான வெப்பநிலை நிலவியது, 2020-ம் ஆண்டு என பதிவாகி உள்ளது. இதில், நிலவில் இரவில் மேற்புறம் 8 முதல் 10 கெல்வின் வரை வெப்பநிலை குறைந்து போயிருந்தது.
பூமியின் வளிமண்டலத்தில் குறைவான வெப்பமே இருந்துள்ளது. இதனால், நிலவின் மேற்பரப்பிலும் அதன் தாக்கம் எதிரொலித்து உள்ளது.அதற்கடுத்த ஆண்டுகளில் மனித செயல்பாடுகள் அதிகரித்து வெப்பமும் அதிகரித்தது உணரப்பட்டு உள்ளது.
இந்த ஆய்வானது, மனித நடவடிக்கைகளின் செயல்பாட்டு குறைவால் அருகேயுள்ள மற்ற கோள்கள் மற்றும் விண்ணுலகில் உள்ள பிற பகுதிகளில் ஏற்படும் விளைவுகளை கவனிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்தி தந்துள்ளது என ஆய்வாளர்கள் சுட்டி காட்டியிருக்கின்றனர்.
பூமியின் பருவநிலை மாற்றம், நிலவின் சுற்றுச்சூழலை எப்படி பாதிக்கும்? என்பது பற்றி ஆழ்ந்த ஆய்வை மேற்கொள்ள, வருங்காலத்தில் நிலவின் ஆய்வகங்கள் அதற்கான வசதிகளை வழங்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.