புத்தங்கல கழிவு முற்றத்தில் காட்டு யானை உயிரிழப்பு: பொது மக்கள் குற்றச்சாட்டு
அம்பாறை மாநகர சபையின் கட்டுப்பாட்டில் உள்ள புத்தங்கல வீதியில் அமைந்துள்ள கழிவு முற்றத்தில் காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது.
இந்த யானை இன்று (06) அதிகாலை உயிரிழந்துள்ளதாக அம்பாறை வனஜீவராசிகள் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுமார் 08 அடி உயரம் கொண்ட இந்த காட்டு யானை 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த இடத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை உண்பதற்காக தினமும் காட்டு யானைகள் வருவதாகவும், இந்த யானைகளை விரட்ட அம்பாறை மாநகர சபை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கிராம மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வனவிலங்கு திணைக்களம் யானை வேலிகளை அமைத்துள்ளது, ஆனால் காட்டு யானைகள் இந்த வேலியை அகற்றி குப்பைகளை சாப்பிடுகின்றன.
வேலி அமைக்கப்பட்டதன் பின்னர் அதனை பராமரிக்கும் பொறுப்பு மாநகரசபையின் கடமை என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், இந்த குப்பை மேட்டின் பல இடங்களில் காட்டு யானைகள் இறந்துள்ளன.
உயிரிழந்த யானையின் பிரேத பரிசோதனை கிழக்கு வனவிலங்கு சுகாதார பிரிவின் கால்நடை வைத்தியர் நிஹால் புஸ்பகுமாரவினால் நடத்தப்பட்டுள்ளது.
காட்டு யானை பொலித்தீன் குப்பைகளை உண்டதால் வயிற்றில் தொற்று ஏற்பட்டு இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.