எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது!… கவிதை… கிறிஸ்டி நல்லரெத்தினம்
எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது
அது என் இதயத்தில் இறங்கி இடம் கேட்டது
போகட்டும் என்று நான் அயர்ந்திருந்தேன்
நிரந்தரமாய் அது குடிகொண்டது… இறைவா குடிகொண்டது
என்னுள் குடிகொண்டது!
மௌனம்தான் அவள் தாய் மொழியோ
சிறு முத்துச்சரம் அவள் சிரிப்பதுவோ
முந்தானை அவள் கேடயமோ
கண் வீச்சே அவள் ஆயுதமோ
அவள் நடைதான் ஒரு தேரோட்டமோ?
நான் மயங்கிய கதையின் முன்னுரையோ ?
துறவறம் பூண்ட இந்த முனிவனிடம்
இல்லறம் தேடி அவள் ஓடி வந்தாள்…..ஓடி வந்தாள்!
ஒன்றும் இல்லை என்றேன் நான்
உன்னை தா என்று அடம்பிடித்தாள்
அன்பாய் அடம்பிடித்தாள்!
அவள் அடம்பிடித்தாள்!
என்னை நானே கேட்கின்றேன்
இறைவா மீண்டும் கேட்கின்றேன்
சொல், நீ சொல்
ஆயிரம் வேதங்கள் ஓதியவன்
அமைதியை இழந்து அழைகின்றேன்
அவளை மீண்டும் எடுத்துக்கொள்
அந்த ஆசையை உடனே துடைத்துக்கொள் !
போதும் வாழ்வு புவிமீது
புனிதனாய் போய் சேரவிடு
இறைவா சேர விடு
இறைவா… ! இறைவா!
கிறிஸ்டி நல்லரெத்தினம்