பலதும் பத்தும்

49 அடி நீளம், 6,000 கிலோ எடை; முடிவுக்கு வந்த டைனோசர் குறித்த விவாதம்…

இதுவரை உலகில் வாழ்ந்ததாக அறியப்பட்டுள்ள மாமிசத்தை உண்ணும் வகையை சேர்ந்த மிகப் பெரிய டைனோசரை பற்றிய நீண்டநாள் வாதம் முடிவுக்கு வந்துள்ளதாக தொல்லுயிர் எச்சங்களைக் கொண்டு முற்காலத்தினை ஆராயும் குழு ஒன்று தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த போர்ட்ஸ்மௌத் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தங்களுக்கு கிடைத்துள்ள 1,200க்கும் மேற்பட்ட டைனோசர்களின் பற்களின் மூலம் அவை “மிகப் பெரிய அசுரத்தனமான” விலங்காக வாழ்ந்தது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் பாய்ந்த நதியொன்றில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்களை ஆராய்ந்ததில் இதுகுறித்து தெரியவந்துள்ளதாக கிரெட்டேசியஸ் ரிசர்ச் (Cretaceous Research) என்ற சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய மொராக்கோவின் சஹாரா பாலைவனத்தின் ஊடாக ஓடிய ஒரு பழங்கால நதியின் படுக்கையில் இந்த ஸ்பைனோசொரஸ் வகை டைனோசர்களின் புதை படிவுகள் அதிக அளவில் கண்டறியப்பட்டன.

அவற்றை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், சுமார் 49 அடி நீளமும், ஆறு டன் எடையும் கொண்ட இந்த வகை டைனோசர் நிலத்தில் வேட்டையாடும் விலங்கினமாக அல்லாமல், பெரும்பாலும் நீர்வாழ் விலங்கினமாக வாழ்ந்ததாக தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், இதே ஸ்பைனோசொரஸ் வகை டைனோசரின் வால்பகுதியை கொண்டு கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த ஆராய்ச்சி முடிவுகளுக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த புதிய ஆய்வு முடிவுகள் இருக்கின்றன.

இதுதொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்ட போர்ட்ஸ்மௌத் பல்கலைக்கழகத்தின் பல்லுயிரியல் துறை பேராசிரியர் டேவிட் மார்டில், “எங்களுக்கு தெரிந்து, இதற்கு முன்னர் உலகின் வேறெந்த இடத்திலும் இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் டைனோசர்களின் பற்கள் புதைப்படிம நிலையில் கண்டறியப்பட்டதில்லை” என்று கூறுகிறார்.

“மற்ற வகை டைனோசர்களுடன் ஒப்பிடுகையில் ஸ்பைனோசொரஸ்களின் பற்கள் வேறுபட்டு உள்ளன. இது அதன் நீர்சார்ந்த வாழ்க்கையை பிரதிபலிப்பதாக உள்ளது.

“நமக்கு கிடைத்துள்ள ஸ்பைனோசொரஸ் ரக டைனோசர்களின் பற்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது, தண்ணீரை குடிப்பதற்காக அவ்வப்போது நதிக்கரைக்கு வந்து செல்லும் டைனோசர்களை விட, தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை நீரிலேயே கழித்த ஒன்றாக அவை இருந்திருக்க வேண்டுமென்று தெரிகிறது. அதனால்தான் நமக்கு புதைப்படிமங்கள் வரலாற்றுக்கு முந்தைய நதிக்கரையில் கிடைத்திருக்க வேண்டும்.”

ஸ்பைனோசொரஸ்களின் புதைப்படிமங்கள் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் முதன்முதலாக கண்டறியப்பட்டன. ஜெர்மனியில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் பாதுகாக்கப்பட்டு வந்த அந்த எச்சங்கள் இரண்டாம் உலகப் போரின்போது முற்றிலும் சேதமடைந்தன. அதன் பிறகு, ஸ்பைனோசரஸ்களின் எலும்பு துண்டுகள் சிறிய அளவிலேயே கிடைத்து வந்தன.

கடந்த 2001ஆம் ஆண்டு வெளிவந்த ஜுராசிக் பார்க் III திரைப்படத்தில் ஒரு முக்கிய காட்சியில் ஸ்பைனோசரஸ், டைரனோசொரஸ் ரக டைனோசரை வீழ்த்தியதன் மூலம் அதுகுறித்த பேச்சு பிரபலமடைந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.