பைலட்களும், கோ-பைலட்களும் ஒரே உணவை சாப்பிட மாட்டார்கள்…
விமான பயணம் என்பது அலாதியானது. விமானங்களில் பயணம் செய்யும்போது பல்வேறு சுவாரஸ்யமான அனுபவங்கள் கிடைக்கும். எனவே விமானங்களில் பயணம் செய்ய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதே சமயம் விமான பயணங்கள் மிகவும் ஆபத்தானவை என்பதையும் மறுத்து விட முடியாது. எனவே பாதுகாப்பிற்காக விமானங்களில் பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.
இதில், விமானங்களின் பைலட்களும், கோ-பைலட்களும் ஒரே உணவை சாப்பிட கூடாது என்ற விதிமுறையும் ஒன்று. ஆம், உண்மையில் இப்படி ஒரு விதிமுறை நடைமுறையில் இருந்து வருகிறது. கேட்பதற்கு இது ஏதோ நியாயமற்ற விதிமுறை என்பது போல் உங்களுக்கு தோன்றலாம். ஆனால் அதற்கு பின்னால் அருமையான காரணம் ஒன்று அடங்கியுள்ளது.
அதாவது ஒரு உணவில் விஷம் கலக்கப்பட்டிருந்தாலோ அல்லது அது ஃபுட் பாய்சனை ஏற்படுத்த கூடியதாக இருந்தாலோ ஒரு பைலட் மட்டுமே பாதிக்கப்படுவார். மற்றொரு பைலட் பாதிப்படைய மாட்டார். எனவே அவர் மேற்கொண்டு பணிகளை தொடரலாம். இதன் காரணமாகதான் விமானங்களின் பைலட்கள், கோ-பைலட்களுக்கு வெவ்வேறு உணவுகள் வழங்கப்படுகின்றன.
இது தொடர்பாக பெரும்பாலான விமான நிறுவனங்களும் தங்களுக்கென விதிகளை வகுத்து வைத்துள்ளன. பொதுவாக விமானங்களில் ஃபுட் பாய்சன் ஏற்படுவது என்பது மிகவும் அரிதான ஒரு நிகழ்வுதான். அதற்காக வாய்ப்பே இல்லை என்று கூறி விட முடியாது. இதற்கு முன்பாக விமான ஊழியர்கள் ஃபுட் பாய்சனால் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
கடந்த 1982ம் ஆண்டு, பாஸ்டன் நகரில் இருந்து லிஸ்பன் நகருக்கு பறந்து கொண்டிருந்த ஒரு விமானத்தில், 10 ஊழியர்களுக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டது. இதில், பைலட், கோ-பைலட் மற்றும் விமானத்தின் இன்ஜினியர் ஆகியோரும் அடங்குவர். மரவள்ளி கிழங்கால் சமைக்கப்பட்ட ஒரு உணவை உட்கொண்டதால் தான், அவர்களுக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக எந்தவிதமான விபரீதமும் அப்போது நடைபெறவில்லை. விமான ஊழியர்களுக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டதால், அந்த விமானம் மீண்டும் பாஸ்டன் நகருக்கே திரும்பி, பத்திரமாக தரையிறங்கி விட்டது. இதுபோன்ற நிகழ்வுகள் எதிரொலியாக தான், பைலட் மற்றும் கோ-பைலட் ஆகியோருக்கு வெவ்வேறான உணவுகள் வழங்கப்படுகின்றன.
விமானங்களில் பயணிக்கும் அனைவரின் பாதுகாப்பும் பைலட்களின் கைகளில்தான் உள்ளது. பைலட்கள் பார்த்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் பயணிகளால் விமானங்களில் ரிலாக்ஸாக பயணம் செய்ய முடிகிறது. எனவே பைலட்களின் உடல் நலனும் மிகவும் முக்கியமானது.
பைலட் மற்றும் கோ-பைலட்களுக்கு வழங்கப்படும் உணவு தொடர்பாக மற்றொரு விஷயத்தையும் இங்கே பகிர்ந்து கொள்கிறோம். ஒரு சில விமானங்களில், படிநிலை அடிப்படையில்தான் பைலட் மற்றும் கோ-பைலட்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. சீனியாரிட்டி அடிப்படையில், உணவு வழங்கும் நடைமுறையை ஒரு சில விமான நிறுவனங்கள் பின்பற்றுகின்றன.
அதாவது விமானங்களின் பைலட்களுக்கு ஃபர்ஸ்ட் கிளாஸ் உணவு வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதே சமயம் விமானங்களின் கோ-பைலட்கள், பிஸ்னஸ் கிளாஸில் இருந்துதான் தங்கள் உணவை பெறுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.