ஆவணிச் சதுர்த்தி அருள்மிகு சதுர்த்தி!… கவிதை… ஜெயராமசர்மா
ஆவணிச் சதுர்த்தி அருள்மிகு சதுர்த்தி
அரனார் திருமகனைப் போற்றிடும் சதுர்த்தி
பூதலம் காத்திட மோதகப் பிரியோன்
புனிதமாய் அவதாரம் செய்திட்ட சதுர்த்தி
மோதகம் கொழுக்கட்டை முப்பழம் விரும்பும்
தொப்பை அப்பனைத் தொழுதிடும் பெருநாள்
கைத்தலம் நிறைகனி கொண்டிடும் அப்பனை
கைதொழு தடியார் போற்றிடும் திருநாள்
இந்தியா இலங்கை எங்கணும் அடியார்
இஷ்டமாய் இனிப்புகள் செய்துமே படைத்து
இன்னல்கள் வாழ்வில் அணுகிடா வண்ணம்
ஏற்றியே போற்றி கொண்டாடும் திருநாள்
ஆலயம் தோறும் விநாயக சதுர்த்தி
ஆகம திருமுறை இன்னிசை இணைய
வேதம் ஒலிக்க பூசைகள் நடக்க
நாதன் திருமகன் நல்லருள் புரிவான்
வீதிகள் எங்கும் அலங்காரம் சிறக்க
வீடுகள் தோறும் விளங்குகள் ஒளிர
காதலாய் பக்தர்கள் கரிமுகக் கடவுளை
வீதி வீதியாய் கொண்டுமே வருவார்
தொடங்கும் காரியம் துலங்கிட வைப்பார்
துவழும் மனங்கள் துணிந்திட வைப்பார்
அனைத்தும் சிறப்பாய் ஆக்கியே வைப்பார்
அவரே விநாயகப் பெருமான் ஆவர்
அவரைப் போற்றும் விநாயக சதிர்த்தி
அனைத்தும் நல்கும் ஆன்மீகத் திருநாள்
அய்யன் விநாயகன் அடியினைத் தொழுவோம்
அல்லல் அகலும் ஆனந்தம் பெருகும்
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா