உக்ரைனில் மத சுதந்திர தடை… மரபுவழி திருச்சபை ‘ஆர்த்தடாக்ஸ்’ தேவாலயங்கள் மூடல்!!… ஐங்கரன் விக்கினேஸ்வரா
மரபுவழி திருச்சபைக்குரிய “ஆர்த்தடாக்ஸ்” மாஸ்கோவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மத அமைப்புகள் மற்றும் தேவாலயங்களைத் தடை செய்யும் மசோதா உக்ரேனிய பாராளுமன்றில் ஆகஸ்ட் 24இல் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு ஆதரவாகக் கூறப்படும் ரஷ்ய உறவுகளைக் கொண்ட மத அமைப்புகள் மற்றும் தேவாலயங்களைத் தடைசெய்யும் இரண்டு மசோதா நிறைவேறியுள்ளது.
2022 இல் ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு உக்ரேனிய ஆர்த்தடாக்ஸ் சர்ச் (UOC- Ukrainian Orthodox Church) குறிப்பாக ரஷ்யாவுடன் ஒத்துழைத்ததாக கீவ் அரசு குற்றம் சாட்டியுள்ளது)
உக்ரைனில் மரபுவழி திருச்சபைக்குரிய (ஆர்த்தடாக்ஸ்) மத அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்படுவதை வக்திக்கானில் போப் பிரான்சிஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அத்துடன் உக்ரைனில் உள்ள மரபுவழி திருச்சபையின் மாஸ்கோவுடன் வழிபாட்டு ரீதியாக இணைக்கப்பட்ட தேவாலயங்களை தடைசெய்யும் புதிய சட்டத்தில் அதிபர் ஜெலென்ஸ்கி கையெழுத்திட்டு உள்ளார்.
உக்ரைனில் மத சுதந்திரம் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாக சர்வதேச மத சுதந்திர ஆணையம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. அதேவேளை மத சுதந்திரத்துக்கு எதிரான வன்முறைகளை உக்ரைனில் தடுக்கவும் கோரியுள்ளது.
தேசிய அளவிலும், நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கு விரோதமான சட்டங்களை உக்ரைன் அரசு உருவாக்கியிருக்கிறது எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைனில் மக்கள் அமைதியை விரும்புவதால், நாம் அமைதிக்காக இறைவேண்டல் செய்வதுடன், அமைதிக்காக உழைப்போம் என போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.
பல்வேறு சூழல்களில் பாகுபாடுகளை அனுபவிக்கும் சமூகங்களுடன் தான் மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும், சிரியா, காசா மற்றும் உக்ரைனில் நிலையான அமைதி நிலவ வேண்டுவதாகவும் என அவர் கூறியுள்ளார்.
போர் எப்படிப்பட்ட சூழலை உருவாக்குகிறது என்பதை ஊடகங்கள் நமக்குக் காட்டுகின்றன என்று கூறிய போப் பிரான்சிஸ் அவர்கள், போரின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் நாம் சாட்சிகளாய் நிற்கின்றோம், இப்போது நாம் காசாவைப் பார்க்கிறோம் மற்றும் உக்ரைனைப் பற்றி நாம் நினைவு கூர்கின்றோம் என்றும் எடுத்துக் காட்டினார்.
நீண்ட அமைதிக்காக அனைவருக்கும் பணியாற்றுவதில் விடாமுயற்சியுடனும், நீதி மற்றும் மத சுதந்திரத்திற்காக அமைதியான முறையிலும் உழைத்திடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.
உக்ரைன் பாராளுமன்றில் தடை:
உக்ரைனிய பாராளுமன்றம் மாஸ்கோவுடன் தொடர்புபட்ட மரபுவழி திருச்சபை தேவாலயங்களை தடை செய்ய அங்கீகரித்துள்ளது.
உக்ரேனில் மரபுவழி திருச்சபை (ஆர்த்தடாக்ஸ்) தேவாலயங்கள் பல போரின் பின்னர் பூட்டப்பட்டுள்ளன. ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ அமைப்பு ரஷ்ய நாட்டுக்கு விசுவாசமாக இருப்பதாக உக்ரேனிய அரசால் கருதப்படுகிறது.
உக்ரேனில் உள்ள ஆர்த்தடாக்ஸ் ஆலயங்கள் 2022 இல் ரஷ்யாவின் உறவுகளைத் துண்டித்ததாகக் கூறினாலும், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை ஆசீர்வதித்த, அதன் பாதிரியார்களும் நிதி ஆதரவாளர்களும் மாஸ்கோவால் ஆதரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அத்துடன் ரஷ்ய இராணுவத்திற்கு உதவுதல், உக்ரைனில் பணியமர்த்தப்பட்ட பரப்புரையாளர்கள் வரவிருக்கும் தடை மத துன்புறுத்தலுக்கு சமமானதாகக் கூறுவது மற்றும் அது நிறுத்தப்படும் வரை உக்ரைனுக்கான உதவியை நிறுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
உக்ரேனிய ஜனாதிபதி கையொப்பமிட்டு வெளியிட்ட மசோதா முப்பது நாட்களுக்குப் பிறகு, உக்ரைனின் அரசு (ஸ்டேட் எத்னோபோலிட்டிக்ஸ் சர்வீஸ்) மத அமைப்புகளை உளவு பார்க்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. புதிதாக நிறைவேற்றப்பட்ட உக்ரேனிய பாராளமன்ற மசோதா ரஷ்ய மரபுவழி திருச்சபை தேவாலயங்களை உடனடியாக தடை செய்ய கோரியுள்ளது.
ரஷ்ய மரபுவழி திருச்சபைக்குரிய ஆலயங்களுடன் எந்த ஒரு மத அமைப்பின் தொடர்பு சட்டப்பூர்வமாக கண்டு பிடிக்கப்பட்டால், அத்தகைய அமைப்பை தடை செய்து அகற்றுவதற்கான உத்தரவைப் பெறும் எனவும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் மாஸ்கோவுடனான தொடர்பு துண்டிக்கப்படாவிட்டால், அத்தகைய அமைப்புக்கு நீண்டகால தடை விதிக்க அரசு நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கும். இச் சட்டம் வெளியிடப்பட்ட ஒன்பது மாதங்களுக்குப் பிறகு தடைக்கான சட்ட நடவடிக்கைகள் தொடங்கும் என்று அரச சட்டமியற்றுபவர் மேலும் கூறியுள்ளார்.
ஜெலென்ஸ்கி கையெழுத்திட்ட மசோதா:
ஆகஸ்ட் 24 அன்று ரஷ்யாவுடன் தொடர்புடைய மரபுவழி திருச்சபைக்குரிய மத அமைப்புகளின் நடவடிக்கைகளை தடை செய்யும் மசோதாவில் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கையெழுத்திட்டார். இந்த மசோதா நான்கு நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ரஷ்ய மரபுவழி திருச்சபைக்கு சட்டப்பூர்வமாக வழிவந்த மாஸ்கோ பேட்ரியார்க்கேட்டின் (UOC-MP) உக்ரேனிய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் நடவடிக்கைகளை இந்த சட்டம் முழுமையாக தடைசெய்கிறது.
UOC-MP ரஷ்ய மரபுவழி திருச்சபை முழு அளவிலான போர் நடக்கும் வேளையில் ரஷ்யாவுடன் தொடர்புகள், அனுதாபங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. உக்ரைனின் தன்னாட்சி ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்துடன் இது மாஸ்கோவிலிருந்து முற்றிலும் தற்போது பிரிக்கப்பட்டுள்ளது.
மதகுருமார் மீது குற்றச்சாட்டு:
ரஷ்ய மரபுவழி திருச்சபை UOC-MP இன் பல மதகுருமார்கள் ரஷ்யாவுடன் ஒத்துழைத்ததாகவும், பிஷப்கள் மற்றும் பிற உயர்மட்ட உறுப்பினர்கள் உட்பட ரஷ்ய ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
உக்ரைனில் முழு அளவிலான போர் வெடித்ததில் இருந்து 100 க்கும் மேற்பட்ட மரபுவழி திருச்சபை மதகுருக்கள் குற்றவியல் விசாரணையின் கீழ் கைதாகி உள்ளனர் என்று உக்ரைனின் பாதுகாப்பு சேவை (SBU) தெரிவித்துள்ளது.
அவர்களில் கிட்டத்தட்ட 50 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு, 26 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று எஸ்பியு தெரிவித்துள்ளது.
புதிய சட்டம் வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வருகிறது, ஆனால் மரபுவழி திருச்சபை சமூகங்கள் ரஷ்ய தேவாலயத்துடனான உறவை முழுமையாக முறித்துக் கொள்ள ஒன்பது மாதங்கள் இருக்கும் என்று சட்டமியற்றுபவர் யாரோஸ்லாவ் ஜெலெஸ்னியாக் விளக்கினார்.
இந்த மசோதா ஆரம்பத்தில் ஜனவரி 2023 இல் பாராளுமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகளின் விரிவான தேடல்களுக்குப் பிறகு, கிரெம்ளின் சார்பு பிரச்சாரம், ரஷ்ய பாஸ்போர்ட்கள் மற்றும் தேவாலயத்தின் வளாகத்தில் இனவெறி இலக்கியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆயினும் அக்டோபர் 2023 இல் உக்ரேனிய பாராளுமன்றம் மசோதாவை ஆதரித்தது. கடந்த மாதம், ஆளும் கட்சி பிரச்சினையை கொண்டு வராததால், பல எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அரங்கை தடுத்தனர்.
ஆயினும் உக்ரேனிய மரபுவழி திருச்சபை அது எப்போதுமே உக்ரேனிய சட்டத்தின் கட்டமைப்பிற்குள் செயல்பட்டதாகவும், விளாடிமிர் புட்டினின் ஆட்சியின் நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்படும் ரஷ்யாவின் முன்னணி தேவாலயமான ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுடனான உறவுகளைத் துண்டித்துவிட்டதாகவும் கூறியுள்ளது.
இந்த மத தடைப் பிரகடனம் உக்ரைனில் ஒரு அடையாள நடவடிக்கையாக பரவலாக சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
ரஷ்ய தேவாலயங்கள் எரிப்பு:
உக்ரைனில் மரபுவழி திருச்சபைக்குரிய ரஷ்யாவுடன் தொடர்புபட்ட பல தேவாலயங்கள் எரிக்கப்பட்டுள்ளன. மாஸ்கோவுடன் தொடர்புபட்ட தேவாலயத்திற்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை “கிறிஸ்தவர்களை துன்புறுத்துதல்” என்று ரஷ்ய பிரச்சாரம் பரவலாக எழுந்துள்ளது.
மரபுவழி திருச்சபைக்குரிய ஆர்த்தடாக்ஸ் கிறித்துவம் உக்ரைனில் மிகவும் பரவலாக பரவி சுதந்திரமாக பின்பற்றப்படும் மதமாக உள்ளது. அதே சமயம் தேவாலயத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என ரஷ்யாவுடன் அதன் ஒத்துழைப்பின் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு எழுந்த குற்றச்சாட்டாக உள்ளது.